‘உங்களால் நான், உங்களுக்கானவன் நான்’ சைதை துரைசாமி வீடு, வீடாக சென்று வாக்குகள் சேகரித்தார்
சென்னை சைதாப்பேட்டையில் உங்களால் நான் உங்களுக்கானவன் நான் என்ற பிரசாரத்தை முன்னெடுத்து சைதை துரைசாமி வீடு, வீடாக சென்று மக்களை சந்தித்து வாக்குகள் சேகரித்தார்.
சென்னை,
தமிழக சட்டமன்ற தேர்தலில், சென்னை சைதாப்பேட்டை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளராக பெருநகர சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமி களமிறங்கி இருக்கிறார். இந்தநிலையில் அவர் தனது வேட்பு மனுவை நேற்று தாக்கல் செய்தார்.
அதனைத்தொடர்ந்து சைதாப்பேட்டை தொகுதிக்குட்பட்ட ஈக்காட்டுத்தாங்கல் அம்பாள்நகரில் உள்ள கங்கையம்மன் கோவிலுக்கு சென்று அம்மனை வழிபட்டு பிரசாரத்தை தொடங்கினார். சைதை துரைசாமி செல்லும் வழியெங்கும் மக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். பூக்களை தூவியும், திருஷ்டி கழித்தும் அவரை வரவேற்றனர். சைதை துரைசாமிக்கு ஆதரவாக பா.ஜ.க. மாவட்ட தலைவர் சைதை சந்துரு, த.மா.கா. மாவட்ட தலைவர் சைதை மனோகரன் தலைமையில் நிர்வாகிகள் மற்றும் பா.ம.க. உள்ளிட்ட கூட்டணி கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகளும் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டனர். பிரசாரத்தின்போது, ‘உங்களால் நான், உங்களுக்கானவன் நான்’ என்று கூறி மக்களிடம் அவர் வாக்குகள் சேகரித்தார்.
கொளுத்தும் வெயிலில் பிரசாரம்
வீடு, வீடாக, கடை கடையாக என கண்ணில் பட்ட அனைத்து இடங்களிலும் சென்று உற்சாகமாக ஆதரவு திரட்டினார். மாடிகளில் வசிக்கும் மக்களை ‘உங்க சைதை துரைசாமி வந்திருக்கிறேன். இரட்டை இலைக்கு ஓட்டு போட்டு என்னை ஜெயிக்க வைக்கணும்’ என அன்புடனும், உரிமையுடனும் வாக்குகள் சேகரித்தார். மாடி வீடுகளில் இருப்பவர்களை கைதட்டி அழைத்து வாக்குகள் சேகரித்தார். பிரசாரத்தின்போது அ.தி.மு.க. தொண்டர் ஒருவரது பெண் குழந்தைகு ‘வெற்றிச்செல்வி’ என்று அவர் பெயர் சூட்டினார்
டீக்கடைக்காரர்கள், ஓட்டல் ஊழியர்கள், கூலித்தொழிலாளிகள் என அனைவரையுமே ஓடோடி சென்று பார்த்து வாக்குகள் சேகரித்தார். கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் அவரது வேகமான நடையும், சுறுசுறுப்பான பிரசார யுக்தியும், சகஜமான பேச்சும் அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் வியப்பை தந்தன. எனவே அவர்களும் சுறுசுறுப்புடன் வாக்குகள் சேகரித்தனர். சைதை துரைசாமி தேர்தல் பிரசாரத்துக்கு முன்பாக எம்.ஜி.ஆர். பாடல்களை மேளதாளமாக வாசித்தபடி கலைஞர்கள் சென்றனர்.
என் கடன் பணி செய்வதே...
முன்னதாக சைதை துரைசாமி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இது சைதாப்பேட்டை மக்களுக்கான தேர்தல். 50 ஆண்டுகளாக இத்தொகுதி மக்களுக்கு பணி செய்துவருகிறேன். இந்த தொகுதியில் இருந்துதான் எம்.எல்.ஏ.வாகவும், சென்னை மேயராகவும் நான் அங்கீகாரம் பெற்றேன். பதவியில் இருந்தாலும், இல்லையென்றாலும் என் கடன் சைதை மக்களுக்கு பணி செய்து கிடப்பதே என்று பணியாற்றுகிறேன்.
எனவே சைதாப்பேட்டையில் எனக்கான அன்பு மக்களிடம் குறையாது. ‘உங்களால் நான், உங்களுக்கானவன் நான்’ என்பதை முன்னெடுத்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறேன். மக்களின் எல்லா தேவைகளை நிறைவேற்றுவேன். எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வேன். அடுத்த தலைமுறை நோயற்ற வாழ்வை வாழவேண்டும். அந்த ரீதியிலும் என் பிரசாரம் அமையும். இத்தொகுதி மக்களுக்கு என்ன வேண்டும்? என்ன பிரச்சினை இருக்கிறது? என்பதை நன்கு அறிந்தவன் நான். எனவே இங்கு நிச்சயம் வெற்றி பெற்று மக்கள் பணிக்கான எனது கடமையை சிறப்பாகவே செய்வேன். மக்களின் அனைத்து எதிர்பார்ப்புகளையும் ஈடேற செய்ய முழுமூச்சாக உழைப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story