தமிழக தேர்தல் களம் களை கட்டுகிறது எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் உள்பட தலைவர்கள் வேட்புமனு தாக்கல்


தமிழக தேர்தல் களம் களை கட்டுகிறது எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் உள்பட தலைவர்கள் வேட்புமனு தாக்கல்
x
தினத்தந்தி 16 March 2021 1:00 AM GMT (Updated: 2021-03-16T06:00:05+05:30)

தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தனர். உடனடியாக தேர்தல் பிரசாரத்தையும் அவர்கள் தொடங்கினர்.

சென்னை, 

தமிழக சட்டசபைக்கு ஏப்ரல் 6-ந் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தேர்தல்களம் விறுவிறுப்பாகி வருகிறது.

வேட்புமனு தாக்கல்

தேர்தல் களத்தில் அ.தி.மு.க., தி.மு.க., கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், டி.டி.வி.தினகரனின் அ.ம.மு.க. கூட்டணி கட்சிகள் மற்றும் சீமானின் நாம் தமிழர் கட்சி என்று 5 முனை போட்டி நிலவுவதால், தமிழக தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.

இந்த நிலையில் தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் கடந்த 12-ந் தேதி தொடங்கியது. முதல் நாளில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட 60-க்கும் மேற்பட்டோர் வேட்புமனு அளித்தனர். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய 2 நாட்கள் விடுமுறை என்பதால், அன்றைய தினங்களில் வேட்புமனு தாக்கல் நடைபெறவில்லை.

எடப்பாடி பழனிசாமி

முகூர்த்த நாளான நேற்று வேட்புமனு தாக்கல் விறுவிறுப்பாக நடைபெற்றது. முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் நல்லநேரம் பார்த்து தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.

இதன்படி சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தாலுகா அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் தனலிங்கத்திடம் பிற்பகல் 1.10 மணிக்கு வேட்புமனு தாக்கல் செய்தார்.

பின்னர் அவர் தேர்தல் விதிமுறைகளை ஏற்பேன் என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டார். வேட்புமனு தாக்கல் செய்த கையோடு தனது எடப்பாடி தொகுதியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று பிரசாரம் செய்தார்.

7-வது முறையாக போட்டி

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே இந்த தொகுதியில் 6 முறை போட்டியிட்டு உள்ளார். இதில் 4 முறை வெற்றி பெற்றார்.

1996 மற்றும் 2006-ல் நடந்த தேர்தல்களில் வெற்றி வாய்ப்பை தவறவிட்டார்.

தற்போது அவர் 7-வது முறையாக களம் காண்கிறார்.

மு.க.ஸ்டாலின், உதயநிதி வேட்புமனு

தி.மு.க. தலைவரும், கொளத்தூர் தொகுதி வேட்பாளருமான மு.க.ஸ்டாலின், சென்னை அயனாவரத்தில் உள்ள பழைய மாநகராட்சி மண்டல அலுவலகத்தில், தேர்தல் நடத்தும் அதிகாரியான மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை இணை இயக்குனர் எம்.தங்கவேலுவிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

அப்போது அவருடன் தி.மு.க. எம்.பி. என்.ஆர்.இளங்கோ, மாவட்ட செயலாளர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் உடன் இருந்தனர். முன்னதாக சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி, அண்ணா நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

வேட்புமனு தாக்கல் செய்த பின்னர், திருவாரூர் சென்ற மு.க.ஸ்டாலின் அந்த மாவட்டத்தில் போட்டியிடும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தை தொடங்கினார்.

இதேபோல் சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், திருவல்லிக்கேணி மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரியான தமிழ்நாடு சிமெண்ட் கழகத்தின் பொதுமேலாளர் டி.மோகன்ராஜூவிடம் வேட்புமனுவை அளித்தார்.

கமல்ஹாசன்

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார். எனவே அவர், வேட்புமனு தாக்கல் செய்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று மதியம் கோவைவந்தார்.

பின்னர் அவர் மதியம் 2.30 மணிக்கு கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தனது கட்சி வேட்பாளர்களை களம் இறக்கிய கமல்ஹாசன் போட்டியிடவில்லை. நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில், அவர் முதன் முதலாக போட்டியிடுகிறார்.

டி.டி.வி.தினகரன்

கோவில்பட்டி தொகுதியில் அ.ம.மு.க. சார்பில் போட்டியிடும் அந்த கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் நேற்று மதியம் தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரியான உதவி கலெக்டர் சங்கரநாராயணனிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.

அப்போது அவர், ‘50 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்’ என்று தெரிவித்தார்.

சீமான்

இதேபோல் திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், மண்டல அலுவலரும், தேர்தல் நடத்தும் அதிகாரியுமான தேவேந்திரனிடம் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

பின்னர் அவர் அளித்த பேட்டியில், ‘தமிழகம் ரூ.6 லட்சம் கோடி கடனில் உள்ளது. வாக்காளர்கள் தி.மு.க., அ.தி.மு.க. என மாறிமாறி ஓட்டு போடாமல், எங்களுக்கு போட வேண்டும்’ என்று தெரிவித்தார்.

சைதை துரைசாமி, அமைச்சர் டி.ஜெயக்குமார்

சென்னை சைதாப்பேட்டை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமி, சென்னை கிண்டி சின்னமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரி வி.ஆலின் சுனேஜாவிடம் வேட்புமனுவை வழங்கினார். முன்னதாக அவர், அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் உள்ள எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு மரியாதை செலுத்தினார்.

7-வது முறையாக ராயபுரம் தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் அமைச்சர் டி.ஜெயக்குமார், ராயபுரம் மண்டல அலுவலகத்திலும், ஆவடியில் அமைச்சர் க.பாண்டியராஜனும் மனு தாக்கல் செய்தனர்.

அமைச்சர்கள் மனுதாக்கல்

இதேபோல் தமிழக அமைச்சர்கள் பலரும் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தனர். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ வேட்புமனு தாக்கல் செய்தார். இதேபோல் ஈரோடு மாவட்டம் கோபியில் 9-வது முறையாக அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். பவானியில் அமைச்சர் கருப்பணனும், நன்னிலத்தில் அமைச்சர் காமராஜும், வேதாரண்யத்தில் அமைச்சர் ஓ.எஸ்.மணியனும் மனு தாக்கல் செய்தனர்.

தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வேலூர் மாவட்டம் காட்பாடியில் 10-வது முறையாக போட்டியிடுகிறார். அவரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் பண்ருட்டி தொகுதியிலும், பா.ம.க. தலைவர் ஜி்.கே.மணி பென்னாகரத்திலும், அ.தி.மு.க. கூட்டணியில் எழும்பூரில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தலைவர் ஜான்பாண்டியன் ஆகியோரும் நேற்று தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.

ஜே.சி.டி.பிரபாகர், கோகுல இந்திரா

சென்னை வில்லிவாக்கம் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ஜே.சி.டி.பிரபாகர், அயனாவரம் ஜாயின்ட் ஆபீசில் தேர்தல் நடத்தும் அதிகாரியான தமிழ்நாடு அரசு தொழில் முன்னேற்ற கழகத்தின் பொதுமேலாளர் ஆர்.ராஜகிருபாகரனிடம் வேட்புமனுவை வழங்கினார்.

கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் ஜெயலலிதா போட்டியிட்ட சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் களம் இறக்கப்பட்டுள்ள அ.தி.மு.க. வேட்பாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் வேட்புமனுவை தாக்கல் செய்தார். அப்போது அவருடன் அ.தி.மு.க. அவைத்தலைவர் இ.மதுசூதனன் உடன் இருந்தார்.

அண்ணா நகர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளரான முன்னாள் அமைச்சர் எஸ்.கோகுல இந்திரா, மாதவரம் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளரான முன்னாள் அமைச்சர் மாதவரம் மூர்த்தி, விருகம்பாக்கம் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் விருகை வி.என்.ரவி, அம்பத்தூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் அலெக்சாண்டர் உள்ளிட்டோரும் நேற்று வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.

அண்ணா நகர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் எம்.கே.மோகன், பெரம்பூர் சட்டமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் ஆர்.டி.சேகர், சைதாப்பேட்டை அ.ம.மு.க. வேட்பாளர் ஜி.செந்தமிழன் ஆகியோரும் நேற்று வேட்புமனுவை வழங்கினார்.

நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் எஸ்.மெர்லின் சுகந்தி (பெரம்பூர் தொகுதி), எஸ்.சங்கர் (அண்ணா நகர்), எல்.கோவிந்தராஜ் (வில்லிவாக்கம்), பி.கீதாலட்சுமி (எழும்பூர்-தனி), டி.எஸ்.ராஜேந்திரன் (விருகம்பாக்கம்), எம்.கீர்த்தனா (வேளச்சேரி), பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர்கள் சி.ரவிகுமார் (துறைமுகம்), சி.சுரேஷ் (பெரம்பூர்), பழனிவேல் (வில்லிவாக்கம்), வி.பாலாஜி (மயிலாப்பூர்), சி.வேலு (வேளச்சேரி) மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் சிலரும் நேற்று வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.

Next Story