நட்சத்திர வேட்பாளர்களின் சொத்து மதிப்பு விவரங்கள்


நட்சத்திர வேட்பாளர்களின் சொத்து மதிப்பு விவரங்கள்
x
தினத்தந்தி 16 March 2021 2:04 AM GMT (Updated: 16 March 2021 2:04 AM GMT)

தமிழக சட்டமன்ற தேர்தலில் நட்சத்திர வேட்பாளர்களின் சொத்து மதிப்பு விவரங்கள் வருமாறு


சென்னை,

 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் நட்சத்திர வேட்பாளர்கள் தாக்கல் செய்துள்ள வேட்புமனுவில் குறிப்பிடப்பட்டு இருக்கும் சொத்து மதிப்பு விவரங்கள் வருமாறு:-

ஓ.பன்னீர்செல்வம் சொத்து மதிப்பு

தேனி மாவட்டம் போடி தொகுதியில் போட்டியிடும் துணை முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் கடந்த 12-ந் தேதி வேட்புமனு தாக்கல் செய்தார். நேற்று அவருடைய சொத்து பட்டியல், தேர்தல் நடத்தும் அலுவலர் விஜயாவிடம் தாக்கல் செய்யப்பட்டது.

ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த அந்த சொத்து பட்டியலில் தனது பெயரில் நிலம், வீடு போன்ற அசையா சொத்துகள் எதுவும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் கையிருப்பு ரூ.23 ஆயிரத்து 500, வங்கி இருப்பு ரூ.11 லட்சத்து 42 ஆயிரத்து 698, ரூ.48 லட்சத்து 85 ஆயிரத்து 424 மதிப்பில் 3 வாகனங்கள், ரூ.67 ஆயிரத்து 440 மதிப்பில் 16 கிராம் நகைகள், பெரியகுளம் கூட்டுறவு வங்கியில் ரூ.100 பங்குத்தொகை என அசையும் சொத்துகளாக ரூ.61 லட்சத்து 19 ஆயிரத்து 162 உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல் அவர் தனக்கு ரூ.65 லட்சத்து 55 ஆயிரத்து 411 கடன் உள்ளதாகவும், அது தனது மனைவியிடம் வாங்கியதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்

கொளத்தூரில் வேட்புமனு தாக்கல் செய்த தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்துள்ள சொத்து பட்டியலில், ‘கையிருப்பு தொகையாக ரூ.50 ஆயிரமும், தனது மனைவி துர்கா ரூ.25 ஆயிரமும் கையிருப்பு வைத்திருக்கிறார்கள். துர்காவிடம் ரூ.24 லட்சத்து 77 ஆயிரம் மதிப்பிலான 720 கிராம் தங்க நகைகள் உள்ளது. மு.க.ஸ்டாலினிடம் ரூ.4 கோடியே 94 லட்சத்து 84 ஆயிரத்து 792 மதிப்பிலான அசையும் சொத்துகளும், துர்காவிடம் ரூ.30 லட்சத்து 52 ஆயிரத்து 854 மதிப்பிலான அசையும் சொத்துகளும் உள்ளன.

மு.க.ஸ்டாலின் பெயரில் ரூ.2 கோடியே 24 லட்சத்து 91 ஆயிரத்து 410 மதிப்பிலான அசையா சொத்துகளும், துர்காவிடம் ரூ.1 கோடியே 38 லட்சத்து 46 ஆயிரத்து 283 மதிப்பிலான அசையா சொத்துகளும் இருக்கிறது.

மு.க.ஸ்டாலின் மீது 47 வழக்குகள் நிலுவையில் உள்ளன’ என்று கூறியுள்ளார்.

சைதை துரைசாமி

சைதாப்பேட்டையில் போட்டியிடும் பெருநகர சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமி தனது சொத்து பட்டியலில், ‘சைதை துரைசாமியின் கையிருப்பாக ரூ.5 லட்சத்து 32 ஆயிரத்து 140-ம், அவரது மனைவி மல்லிகா துரைசாமியின் கையிருப்பாக ரூ.86 லட்சத்து 75 ஆயிரத்து 777-ம் உள்ளது. தனது் பெயரில் ரூ.4 கோடியே 8 லட்சத்து 12 ஆயிரத்து 937 மதிப்பில் அசையும் சொத்துகளும், தனது மனைவி பெயரில் ரூ.4 கோடியே 35 லட்சத்து 60 ஆயிரத்து 751 மதிப்பிலான அசையும் சொத்துகளும், ரூ.25 கோடியே75 லட்சம் மதிப்பிலான அசையா சொத்துகளும் உள்ளன. சைதை துரைசாமி பெயரில் ரூ.6 கோடியே 60 லட்சத்து 78 ஆயிரத்து 917-ம், மனைவி பெயரில் ரூ.2 கோடியே 49 லட்சத்து 41 ஆயிரத்து 630-ம் கடன் பொறுப்புகளாக உள்ளன. 3 வருமான வரி வழக்குகள் நிலுவையில் உள்ளன’ என்று கூறியுள்ளார்.

உதயநிதி ஸ்டாலின் 

சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி தி.மு.க. வேட்பாளர் உதயநிதி ஸ்டாலின் தனது சொத்து பட்டியலில், ‘கையிருப்பு தொகையாக ரூ.75 ஆயிரமும், மனைவி கிருத்திகாவின் கையிருப்பாக ரூ.50 ஆயிரமும் இருக்கிறது. தனது பெயரில் ரூ.21 கோடியே 13 லட்சத்து 9 ஆயிரத்து 650 மதிப்புள்ள அசையும் சொத்துக்களும், மனைவி பெயரில் ரூ.1 கோடியே 15 லட்சத்து 33 ஆயிரத்து 222 மதிப்புள்ள அசையும் சொத்துகளும் உள்ளது.

இதேபோல ரூ.6 கோடியே 54 லட்சத்து 39 ஆயிரத்து 552 மதிப்புள்ள அசையா சொத்துகள் உள்ளது’ என்று கூறியுள்ளார்.

சீமான்

திருவொற்றியூரில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தனது சொத்து பட்டியலில், ‘சீமானின் பெயரில் ரூ.31 லட்சத்து 6 ஆயிரத்து 500 மதிப்பிலும், அவரது மனைவி கயல்விழி பெயரில் ரூ.63 லட்சத்து 35 ஆயிரத்து 31 மதிப்பிலும் அசையும் சொத்துகள் உள்ளன. மேலும் கயல்விழி பெயரில் ரூ.31 லட்சம் அசையா சொத்துகளும் உள்ளன. வங்கிக்கடன் ரூ.6 லட்சம் உள்ளது. தொழில் அல்லது வேலை பற்றிய விவரங்களில், திரைப்பட இயக்குனர் மற்றும் விவசாயி என்று சீமான் குறிப்பிட்டுள்ளார். வருவாய்க்கான ஆதாரங்கள் பற்றிய விவரங்களில் திரைப்படம் என சீமான் குறிப்பிட்டுள்ளார். சீமான் மீதான நிலுவையில் உள்ள வழக்குகள் 17 ஆகும்.

ஜான்பாண்டியன்

எழும்பூர் (தனி) தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணியில் போட்டியிடும் தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியன் தாக்கல் செய்துள்ள சொத்து பட்டியலில், தனது பெயரில் ரூ.4 கோடியே 22 லட்சத்து 6 ஆயிரத்து 504-க்கும், மனைவி பிரிசில்லா பாண்டியன் பெயரில் ரூ.5 கோடியே 62 லட்சத்துக்கும், மகன் வியங்கோ பாண்டியன் பெயரில் ரூ.57 லட்சத்து 28 ஆயிரத்துக்கும், மகள் வினோலின் நிவேதா பெயரில் ரூ.28 லட்சத்து 19 ஆயிரத்துக்கும் வங்கிக்கணக்கில் பணம் மற்றும் தங்கம், வெள்ளி பொருட்கள் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். தனது பெயரில் ரூ.1 கோடியே 14 லட்சத்து 79 ஆயிரம் மதிப்பில் அசையும் சொத்துகளும், ரூ.80 லட்சத்து 18 ஆயிரம் மதிப்பில் அசையா சொத்துக்களும் உள்ளன என்றும், மனைவி பெயரில் ரூ.1 கோடியே 90 லட்சத்து 37 ஆயிரம் மதிப்பில் அசையும் சொத்துகளும், ரூ.75 லட்சத்து 43 ஆயிரம் மதிப்பில் அசையா சொத்துகளும், மகன் பெயரில் ரூ.16 லட்சத்து 52 ஆயிரம் மதிப்பில் அசையும் சொத்துகளும், ரூ35 லட்சம் மதிப்பில் அசையா சொத்துகளும், மகள் பெயரில் ரூ.17 லட்சத்து 22 ஆயிரம் மதிப்பில் அசையும் சொத்துகளும் உள்ளன என்றும் சுட்டிக்காட்டி உள்ளார். தனது பெயரில் வங்கிக்கடன் இல்லைஎன்றும், மனைவி பெயரில் ரூ.10 லட்சம் வங்கிக்கடன் இருப்பதாகவும் கூறி உள்ளார். தன் மீது 2 குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தி.மு.க. வேட்பாளருக்கு ரூ.206 கோடி சொத்து

அண்ணாநகர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் எம்.கே.மோகன், தனது சொத்து பட்டியலில் கூறியிருப்பதாவது:-

எம்.கே.மோகன் மற்றும் அவரது மனைவியின் கையிருப்பு தொகை தலா ரூ.1 லட்சம் ஆகும். எம்.கே.மோகனுக்கு ரூ.2 கோடியே 82 லட்சத்து 92 ஆயிரத்து 326 மதிப்பிலும், அவரது மனைவி கீதா பெயரில் ரூ.1 கோடியே 34 லட்சத்து 34 ஆயிரம் மதிப்பிலான அசையும் சொத்துகள் உள்ளன. எம்.கே.மோகனின் பெயரில் ரூ.1 கோடியே 51 லட்சத்து 23 ஆயிரத்து 52 மதிப்பிலும், அவரது மனைவி பெயரில் ரூ.1 கோடியே 26 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலும் அசையா சொத்துகளும் உள்ளன. எம்.கே.மோகன் பெயரில் ரூ.116 கோடியே 87 லட்சத்து 4 ஆயிரம் மதிப்பிலான விவசாய நிலங்கள், ரூ.1 கோடியே 25 லட்சம் மதிப்பிலான விவசாயம் சாராத நிலம், ரூ.5 கோடியே 86 லட்சத்து 37 ஆயிரத்து 500 மதிப்புடைய வணிக கட்டிடங்கள், ரூ.5 கோடியே 18 லட்சம் மதிப்பிலான குடியிருப்பு கட்டிடங்கள் உள்ளன. அவரது மனைவி பெயரில் ரூ.63 கோடியே 16 லட்சத்து 26 ஆயிரத்து 760 மதிப்பிலான விவசாய நிலங்கள், ரூ.2 கோடியே 94 லட்சத்து 24 ஆயிரத்து 920 மதிப்பிலான விவசாயம் சாராத நிலம், ரூ.1 கோடியே 87 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புடைய வணிக கட்டிடங்கள், ரூ.8 கோடியே 87 லட்சத்து 28 ஆயிரம் மதிப்பிலான குடியிருப்பு கட்டிடங்கள் உள்ளன. கணவன்-மனைவி பெயரில் மட்டும் ரூ.206 கோடி மதிப்புடைய நிலங்கள், கட்டிடங்கள் உள்ளன. இதுவரை வேட்புமனு தாக்கல் செய்தவர்களில் பணக்கார வேட்பாளராக எம்.கே.மோகன் பார்க்கப்படுகிறார்.

எம்.கே.மோகன் பெயரில் 4 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

ஜே.சி.டி.பிரபாகர்

வில்லிவாக்கம் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ஜே.சி.டி.பிரபாகர் தனது சொத்து மதிப்பில் கூறியிருப்பதாவது:-

ஜே.சி.டி.பிரபாகரிடம் ரூ.1 லட்சமும், அவரது மனைவி கிரேஸ் ஜெயந்தி ராணியிடம் ரூ.40 ஆயிரமும் கையிருப்பாக இருக்கிறது. ஜே.சி.டி.பிரபாகர் பெயரில் ரூ.44 லட்சத்து 40 ஆயிரத்து 430 மதிப்பிலான அசையும் சொத்துகளும், ரூ.3 கோடியே 87 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான அசையா சொத்துகளும் உள்ளன. அவரது மனைவி பெயரில் ரூ.79 லட்சத்து 69 ஆயிரத்து 409 மதிப்பிலான அசையும் சொத்துகளும், ரூ.9 கோடியே 1 லட்சத்து 73 ஆயிரத்து 500 மதிப்பிலான அசையா சொத்துகளும் உள்ளன.

ஜே.சி.டி.பிரபாகர் பெயரில் எந்த வழக்குகளும் நிலுவையில் இல்லை.

கமல்ஹாசனுக்கு ரூ.177 கோடி சொத்து

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார். அதில் அவர் தனது சொத்து மதிப்பு தொடர்பான விவரங்களையும், பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிட்டு உள்ளார்.

அதன்படி, தனக்கு அசையா சொத்துகள் ரூ.131 கோடியே 84 லட்சத்து 45 ஆயிரம், அசையும் சொத்துகள் ரூ.45 கோடியே 9 லட்சத்து ஆயிரத்து 476 என மொத்தம் ரூ.176 கோடியே 93 லட்சத்து 46 ஆயிரத்து 476 ரூபாய் உள்ளது எனக் குறிப்பிட்டு உள்ளார்.

மேலும், தனக்கு கடன் ரூ.49 கோடியே 50 லட்சத்து 11 ஆயிரத்து 10 உள்ளதாகவும், கடந்த ஆண்டு வருவாய் ரூ.22 கோடி என்றும் குறிப்பிட்டு இருந்தார்.

இதேபோல் கோவை சிங்காநல்லூர் தொகுதி வேட்பாளர் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில துணைத்தலைவர் டாக்டர் மகேந்திரனுக்கு மொத்தம் ரூ.160 கோடிக்கு பல்வேறு சொத்துகள் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

Next Story