தனி ஆணையம் அமைத்து 4 ஆண்டுகள் ஆகியும் ஜெயலலிதா மரணத்தின் உண்மை வெளிவராதது ஏன்? எடப்பாடி பழனிசாமிக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி


தனி ஆணையம் அமைத்து 4 ஆண்டுகள் ஆகியும் ஜெயலலிதா மரணத்தின் உண்மை வெளிவராதது ஏன்? எடப்பாடி பழனிசாமிக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி
x
தினத்தந்தி 17 March 2021 6:26 AM IST (Updated: 17 March 2021 6:26 AM IST)
t-max-icont-min-icon

தனி ஆணையம் அமைத்து 4 ஆண்டுகள் ஆகியும் ஜெயலலிதா மரணத்தின் உண்மை வெளிவராதது ஏன்? என்று மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.

சேலம், 

சேலம் மாவட்டம் வீரபாண்டி தொகுதியில் டாக்டர் தருண், ஏற்காடு தொகுதியில் தமிழ்ச்செல்வன் ஆகியோர் தி.மு.க. சார்பில் போட்டியிடுகின்றனர்.

இவர்கள் இருவரையும் ஆதரித்து சேலம் அருகே கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் நேற்று மாலை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது:-

சொத்து குவிப்பு வழக்கு

சேலத்தில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி, தான் படிப்படியாக வளர்ந்து இந்த பதவிக்கு வந்தேன் என்று கூறியுள்ளார். அவர் படிப்படியாக வளர்ந்து வந்தாரா? அல்லது படிப்படியாக ஊர்ந்து வந்தாரா? என்பது இந்த நாட்டுக்கு நன்றாக தெரியும். அவர் எப்படி இந்த பொறுப்புக்கு வந்தார்? என்பது வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தற்போதும் பரவி வருகிறது.

எம்.எல்.ஏ., எம்.பி., அமைச்சர், முதல்-அமைச்சர் போன்ற பதவிகளை ஜெயலலிதா தந்ததாக கூறுகிறார். அது முற்றிலும் பொய். முதல்-அமைச்சர் ஆனது சசிகலாவால் கிடைத்தது. சொத்து குவிப்பு வழக்கில் நீதிமன்றம் மூலம் ஜெயலலிதாவுக்கு சிறை தண்டனை கிடைத்தபோது, முதல்-அமைச்சர் பதவியை ஓ.பன்னீர்செல்வத்திடம் கொடுத்துவிட்டு சென்றார். அதன்பிறகு உடல்நிலை பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று திடீரென உயிரிழந்ததாக தகவல் வெளியிடப்பட்டது.

ஜெயலலிதாவின் சாவில் மர்மம்

அப்போது, ஓ.பன்னீர்செல்வம் கவர்னரை சந்தித்து முதல்-அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார். அதன்பிறகு சில நாட்களில் முதல்-அமைச்சர் பதவியில் இருந்து விலகுமாறு அவரை வற்புறுத்தி, அந்த இடத்திற்கு சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அப்போது, ஓ.பன்னீர்செல்வம், ஜெயலலிதாவின் சமாதிக்கு சென்று போர்க்கொடி தூக்கினார். ஜெயலலிதாவின் சாவில் மர்மம் இருப்பதாக தெரிவித்தார். அந்த நேரத்தில் சொத்துகுவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு தண்டனை கிடைத்து சிறைக்கு செல்ல வேண்டிய சூழ்நிலையில் யார் முதல்-அமைச்சர்? என்ற கேள்வி எழுந்தது.

அப்போது, ஊர்ந்து சென்று முதல்-அமைச்சர் பதவியை எடப்பாடி பழனிசாமி பெற்றார். இல்லை என்று அவர் கூறமுடியுமா?. அப்படி இல்லை என்றால் என்னுடன் விவாதிக்க தயாரா? ஜெயலலிதாவின் விசுவாசி என்று கூறும் முதல்-அமைச்சர், ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள சந்தேகங்களை இன்னும் கண்டுபிடிக்காமல் இருக்கிறார். ஆஸ்பத்திரியில் அவர் சிகிச்சை பெற்று வரும்போது, இட்லி, டீ, சூப் குடித்தார் என்றும், டி.வி. பார்க்கிறார் என்றும் கூறினார்கள். இதை நான் கேலிக்காக பேசவில்லை.

உண்மை வெளிவரவில்லை

ஜெயலலிதாவின் சமாதியில் 40 நிமிடம் கண்ணை மூடிக்கொண்டு தியானம் செய்த ஓ.பன்னீர்செல்வம், நான் ஜெயலலிதாவின் ஆவியோடு பேசினேன். அவரது மரணத்தில் மர்மம் உள்ளது என்று கூறினார். அதன்பிறகு அவருக்கு துணை முதல்-அமைச்சர் பதவி தருகிறோம், ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்க தனி ஆணையம் அமைக்கப்படும் என்று கூறி அழைத்து சென்றார்கள். ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து 4 ஆண்டுகள் ஆகியும் இதுவரை உண்மை வெளிவரவில்லை.

இது சம்பந்தமாக ஓ.பன்னீர்செல்வத்திற்கு 8 முறை சம்மன் அனுப்பியும் அவர் விசாரணை கமிஷனில் ஆஜராகவில்லை. ஆனால் ஜெயலலிதா மரணத்திற்கு தி.மு.க. தான் காரணம் என்று எடப்பாடி பழனிசாமி கூறுகிறார். அப்படி என்றால் நான் விசாரணை கமிஷனுக்கு வந்து பதில் கூற தயாராக இருக்கிறேன். முதல்-அமைச்சர் பதவியில் இருப்பவர் எதை வேண்டுமானாலும் பேசலாமா?

ஆக்ரோஷமான காமெடி வில்லன்

சட்டமன்ற தேர்தலில்தி.மு.க. தேர்தல் அறிக்கை கதாநாயகனாக விளங்குவதாக பலர் கூறி வருகிறார்கள். நாம் கதாநாயகன் என்றால் அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை வில்லன். அதுவும் ஆக்ரோஷமான காமெடி வில்லனாக அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை உள்ளது.

கடந்த 2006-ம் ஆண்டு தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்றவுடன் முதல்-அமைச்சராக கருணாநிதி, பதவி ஏற்று அவர் கோட்டைக்கு கூட செல்லாமல் விழா மேடையில் ரூ.7 ஆயிரம் கோடி கூட்டுறவு கடன்களை தள்ளுபடி செய்து அதற்கான கோப்புகளில் கையெழுத்து போட்டார். அதேபோல், தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும். நாங்கள் செய்வதை தான் சொல்வோம்.

தி.மு.க. ஆட்சி அமைக்கும்

இதற்கு முன்பு தி.மு.க. 200 தொகுதிக்கு மேல் வெற்றி பெறும் என்று கூறிவந்தேன். ஆனால் பொதுமக்களை பார்த்தவுடன் இப்போது 234 தொகுதிகளிலும் தி.மு.க. வெற்றி பெறும். அடுத்து தி.மு.க. தான் ஆட்சிக்கு வரும் என்று கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன. எதிர்க்கட்சியே இல்லாமல் தி.மு.க. ஆட்சி அமைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

Next Story