மக்கள் நீதி மய்யம் ஆட்சிக்கு வந்தால் பாதி டாஸ்மாக் கடைகள் மூடப்படும் - கமல்ஹாசன் பேச்சு
மக்கள் நீதி மய்யம் ஆட்சிக்கு வந்தால் பாதி டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று ஈரோட்டில் கமல்ஹாசன் பேசினார்.
ஈரோடு,
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் நேற்று ஈரோடு மாவட்டத்தில் மொடக்குறிச்சி, ஈரோடு மேற்கு, ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிகளில் அந்த கட்சி வேட்பாளர்களுக்கு ஓட்டுகள் கேட்டு பிரசாரம் மேற்கொண்டார். பின்னர் அங்கிருந்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உள்பட்ட திருநகர்காலனியில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர்களுக்கு வாக்குகள் கேட்டு பிரசாரம் செய்தார்.
அப்போது மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பேசியதாவது:-
ஏழைகளின் சிரிப்பில் இறைவனை காண்கிறேன் என்று கூறி ஆட்சிக்கு வந்தார்கள். ஏழைகள் இல்லாத நிலை உருவாகி விட்டதா? தாய் மொழியை காப்பாற்றி விட்டார்களா? ்நாங்கள் தாய் மொழியை மீட்க குரல் கொடுப்போம்.
இந்த தலைமுறையினரின் வாழ்க்கை மலர நாங்கள் வந்து இருக்கிறோம். நாளைய சரித்திரத்தை மாற்ற வாய்ப்பு கொடுங்கள். நான் தற்போது திரும்பி பார்க்கும்போது பெரிய தலைவர்கள் இல்லை என்ற ஏக்கம் உள்ளது. இதே நிலை தற்போதைய குழந்தைகளுக்கு இருக்கக்கூடாது.
இல்லத்தரசிகளுக்கு ஊதியம் வழங்கும் திட்டத்தை நாம் தான் முதலில் அறிவித்தோம். அதை இப்போது புதிதாக கண்டுபிடித்ததுபோல் மற்றவர்கள் ரூ.1,000, ரூ.1,500 என்று ஏலம் விடுகிறார்கள். நல்ல திட்டத்தை ஏற்று கொள்வது சிறந்தது தான். நான் நேர்மையை நல்லது என்று கூறுகிறேன். அதையும் அவர்கள் ஏற்று கொள்வார்களா?
மக்கள் நீதி மய்யம் ஆட்சிக்கு வந்தால் பாதி டாஸ்மாக் கடைகளை நாங்கள் மூடுவோம். மது குடிப்பதை விடமுடியாமல் தவிப்பவர்களுக்கு மறுவாழ்வு மையங்களை டாஸ்மாக் கடைகளுக்கு அருகிலேயே தொடங்குவோம்.
நான் 50 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கொடுக்க முடியும் என்றேன். அதையே ஆண்டுக்கு 10 லட்சம் பேர் என்று கூறுகிறார்கள். நான் அதற்கான திட்டம் வைத்து உள்ளேன். நீங்கள் என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள்.
வீடுக்கு ஒரு கணினி கொடுப்பேன் என்று கூறுகிறேன். அது இலவசம் அல்ல. உங்களுக்கான முதலீடு அது. அரசுக்கும், மக்களுக்குமான பாலம். நான் முதல்-அமைச்சர் என்று நீங்கள் முடிவு செய்துவிட்டால், அதன்பின்னர் நீங்கள் நேரடியாக என்னோடு பேசலாம். இடைத்தரகர்கள் யாருமின்றி உங்கள் திட்டங்கள் உங்களை வந்து சேரும்.
இவ்வாறு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பேசினார்.
Related Tags :
Next Story