தொகுதி கண்ணோட்டம்: குன்னம்


தொகுதி கண்ணோட்டம்: குன்னம்
x
தினத்தந்தி 18 March 2021 9:19 PM IST (Updated: 18 March 2021 9:19 PM IST)
t-max-icont-min-icon

குன்னம் சட்டமன்ற தொகுதியில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குன்னம் தாலுகா பகுதிகளும், அரியலூர் மாவட்டம் செந்துறை தாலுகா பகுதிகளும் அடங்கும்.

பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர் (தனி), குன்னம் ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. குன்னம் தொகுதி உருவாக்கப்படுவதற்கு முன்பு, 1967-ம் ஆண்டு முதல் வரகூர் (தனி) என்ற சட்டமன்ற தொகுதி இருந்தது. 2008-ம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்புக்கு பிறகு வரகூர் (தனி) சட்டமன்ற தொகுதி நீக்கப்பட்டு, அதற்கு பதிலாக 2011-ம் ஆண்டு குன்னம் (பொது) சட்டமன்ற தொகுதி உருவாக்கப்பட்டது. 

தற்போது 3-வது முறையாக குன்னம் தொகுதி சட்டமன்ற தேர்தலை சந்திக்கிறது. மேலும் பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகாவில் உள்ள மேலமாத்தூர், அழகிரிப்பாளையம், தொண்டப்பாடி, கூத்தூர், ஆதனூர் (தெற்கு), ஆதனூர் (வடக்கு), கொட்டரை, சாத்தனூர், சிறுகன்பூர் (கிழக்கு), சிறுகன்பூர் (மேற்கு), வரகுபாடி, காரை (கிழக்கு), காரை (மேற்கு), தெரணி, ஆயினாபுரம், கொளக்காநத்தம், கொளத்தூர் (மேற்கு) கொளத்தூர் (கிழக்கு) திம்மூர், கூடலூர், புஜங்கராயநல்லூர், நொச்சிக்குளம், ஆத்தூர், சில்லக்குடி (வடக்கு), சில்லக்குடி (தெற்கு) ஆகிய வருவாய் கிராமங்களும் அடங்கும். இத்தொகுதியில் விவசாயமே பிரதான தொழிலாகும். குன்னம், ஆலத்தூர் தாலுகா பகுதிகளில் பருத்தி, மக்காச்சோளம், மஞ்சளும், செந்துறை தாலுகா பகுதியில் பருத்தி, முந்திரி உள்ளிட்டவை அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. மேலும் தொகுதியில் சுண்ணாம்பு கல் குவாரிகளும் அதிகம் செயல்பட்டு வருகின்றன. செந்துறை தாலுகாவில் தனியார் சிமெண்டு தொழிற்சாலைகளும் இயங்கி வருகின்றன. தமிழ் தாத்தா உ.வே. சாமிநாத ஐயர் தனது பெற்றோருடன் தங்கி கல்வி பயின்றதும் இத்தொகுதியில் தான்.

இத்தொகுதியில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் தி.மு.க. ஆட்சியில் அறிவிக்கப்பட்ட சிறப்பு பொருளாதார மண்டலத்துக்கு திருமாந்துறை, பென்னகோணம் உள்ளிட்ட கிராமங்களில் கையகப்படுத்தப்பட்ட சுமார் 3,500 ஆயிரம் ஏக்கர் நிலமும், எதிர்பார்க்கப்பட்ட தொழில் வாய்ப்புகளும் கிடப்பில் போடப்பட்டுள்ளன. மாறாக அதற்காக விவசாயிகளிடம் எடுத்த நிலங்களை திரும்பவும் அரசு விவசாயிகளிடம் ஒப்படைக்கவில்லை. குன்னம் தாலுகா ஒதியம் பகுதியில் பெரம்பலூர் மாவட்டத்திற்கு அறிவிக்கப்பட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை அமைக்கும் திட்டமும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. குன்னம் தாலுகாவில் பருத்தியை அடிப்படையாக கொண்டு தொழிற்சாலை அமைக்க வேண்டும். ஆலத்தூர் தாலுகாவில் அமைக்கப்பட்டு வரும் கொட்டரை நீர்தேக்க பணிகளை விரைந்து முடிந்து, பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். செந்துறை தாலுகாவில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் முந்திரி பதப்படுத்தும் தொழிற்சாலை அமைக்க வேண்டும் என்பதே இத்தொகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது. வரகூர் சட்டமன்ற தொகுதியாக இருந்த போது 1967-ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டு வரை நடத்தப்பட்ட தேர்தலில் அதிக முறை அ.தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது. அ.தி.மு.க. 6 முறையும், தி.மு.க. 4 முறையும் வெற்றி பெற்றுள்ளன. தொகுதி மறுசீரமைப்புக்கு பிறகு குன்னம் சட்டமன்ற தொகுதியில் 2 முறை தேர்தல் நடந்தது. 

இதில் அ.தி.மு.க.-தி.மு.க. தலா ஒரு முறை வெற்றி பெற்றுள்ளன. 2016-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் நேரடியாக மோதின. இதில் அ.தி.மு.க. சார்பில் பெரம்பலூர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ஆர்.டி.ராமச்சந்திரனும், தி.மு.க.வில், மறைந்த அரியலூர் மாவட்ட தி.மு.க. அவைத் தலைவர் துரைராஜூம் போட்டியிட்டனர். இதில் ராமச்சந்திரன் 78,218 வாக்குகளை பெற்று துரைராஜை 18,796 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

நடைபெற உள்ள 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் மீண்டும் அ.தி.மு.க., தி.மு.க. நேரடியாக மோதுகின்றன. அ.தி.மு.க. சார்பில் மீண்டும் தற்போதைய குன்னம் தொகுதி எம்.எல்.ஏ.வும், பெரம்பலூர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான ராமச்சந்திரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். கடந்த 2011-ம் ஆண்டு குன்னம் தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அரியலூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் எஸ்.எஸ்.சிவசங்கர், இந்த முறை குன்னம் தொகுதிக்கு தி.மு.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும் இத்தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் மீண்டும் அருளும், 
அ.ம.மு.க. சார்பில் கார்த்திகேயனும், மக்கள் நீதி மய்யம் சார்பில் சாதிக் பாட்ஷாவும் களம் காண்கிறார்கள்.

பயோடேட்டா
மொத்த வாக்காளர்கள் 2,73,695

ஆண்கள் 1,35,240

பெண்கள் 1,38,442

மூன்றாவது பாலினம் 13

Next Story