சைதாப்பேட்டையில் எம்.ஜி.ஆர். பாடல் ஒலிக்க சைதை துரைசாமி தீவிர பிரசாரம்


சைதாப்பேட்டையில் எம்.ஜி.ஆர். பாடல் ஒலிக்க சைதை துரைசாமி தீவிர பிரசாரம்
x
தினத்தந்தி 19 March 2021 4:25 AM IST (Updated: 19 March 2021 4:25 AM IST)
t-max-icont-min-icon

சென்னை சைதாப்பேட்டையில் எம்.ஜி.ஆர். பாடல் ஒலிக்க அ.தி.மு.க. வேட்பாளர் சைதை துரைசாமி தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.

சென்னை, 

சென்னை சைதாப்பேட்டை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளராக பெருநகர சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமி களமிறங்கி இருக்கிறார். ஒவ்வொரு நாளும் சைதாப்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட இடங்களில் அவர் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

இந்தநிலையில் தொகுதிக்கு உட்பட்ட விநாயகர் கோவில், அப்துல் ரசாக் தெரு, கருணாநிதி தெரு, திடீர் நகர், கோதாமேடு, அண்ணாநகர், சலவையாளர் காலனி, சலவைத்துறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சைதை துரைசாமி நேற்று தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அவருக்கு ஆதரவாக பா.ஜ.க., பா.ம.க., த.மா.கா. உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகளும் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

தேர்தல் பிரசாரத்தின்போது ‘அ.தி.மு.க. வேட்பாளராக களமிறங்கி இருக்கும் என்னை இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்குவித்தியாசத்தில் வெற்றிபெற செய்ய வேண்டும்’, என பொதுமக்களுக்கு சைதை துரைசாமி வேண்டுகோள் விடுத்தார்.

எம்.ஜி.ஆர். பாடல் ஒலிக்க...

அ.தி.மு.க. நிறுவனரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எம்.ஜி.ஆரின் தீவிர பக்தரான சைதை துரைசாமி, தனது பிரசாரத்திலும் எம்.ஜி.ஆரை நினைவு கூர்ந்து வருகிறார். எப்போதுமே ‘பேண்ட்' இசை குழுவினர் எம்.ஜி.ஆர். பாடல்களை வாசித்தபடி முன்செல்ல, சைதை துரைசாமி அதனைத் தொடர்ந்தே பிரசாரத்துக்கு செல்கிறார்.

அந்தவகையில் எம்.ஜி.ஆர். பாடல் ஒலிக்க நேற்று சைதை துரைசாமி தீவிர பிரசாரம் மேற்கொண்டார். வீடு வீடாக சென்று மக்களிடம் ஓட்டு கேட்டார். கோதாமேட்டில் குடிசைவாழ் மக்களை சந்தித்த அவர் அங்குள்ள மக்களிடம் வாக்குகள் சேகரித்தார். அப்போது ஒருவரது வீட்டில் ‘கடவுள் ஏன் கல்லானான்?’, எனும் எம்.ஜி.ஆர். பாடல் ஒலித்து கொண்டிருந்தது. இதை கேட்டதும் அந்த பாடல் வரிகளை மெய்மறந்து சைதை துரைசாமியும் பாடினார். இது அனைவரையும் ரசிக்க செய்வதாக அமைந்தது. அதனைத்தொடர்ந்து அப்பகுதி மக்களின் பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்தார்.

தேவாலயங்களில் பிரார்த்தனை

முதியோர்களையும், மூதாட்டிகளையும் தேடி தேடிச்சென்று ‘நான் உங்கள் வீட்டு பிள்ளை. என்னை ஜெயிக்க வைப்பது உங்கள் வேலை’, என உரிமையோடு சைதை துரைசாமி வாக்குகள் சேகரித்தார். குறிப்பாக ‘உங்களால் நான், உங்களுக்கானவன் நான், இங்கு என்னை வெற்றிபெற செய்தால் உங்களது அடிப்படை தேவைகளை நான் நிறைவேற்றி தருவேன். அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் உள்ள அம்சங்கள் அனைத்தையும் உங்கள் வீடு தேடி கிடைக்க செய்வேன்’, என வாக்குறுதிகளை வழங்கினார்.

தேர்தல் பிரசாரத்தின்போது சி.ஐ.டி. நகர், கோவிந்தன் சாலை, சேகர் நகர் பகுதிகளில் உள்ள தேவாலயங்களுக்கு சைதை துரைசாமி சென்று பிரார்த்தனை செய்தார். அப்போது அங்குள்ள பாதிரியார்கள் அவருக்கு ஆசி வழங்கினர். அதனைத்தொடர்ந்து அவர் தனது பிரசாரத்தை தொடர்ந்தார்.

நல்ல படம் எது?

பிரசாரத்தின்போது, சைதை துரைசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்த பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், சுத்தம் மற்றும் சுகாதாரத்துடன் வாழ்வதற்கு மாற்றுத்திட்டம் இருக்கிறது. அதை விரைவில் பார்ப்பீர்கள். அ.தி.மு.க., தி.மு.க. எனும் 2 திரைப்படங்கள் ஓடுகின்றன. எது நல்ல படம்? என்பதை மக்கள் முடிவு செய்வார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story