புதுவை சட்டசபை தேர்தலுக்கு மனுதாக்கல் இன்று கடைசி நாள்


புதுவை சட்டசபை தேர்தலுக்கு மனுதாக்கல் இன்று கடைசி நாள்
x
தினத்தந்தி 19 March 2021 12:26 AM GMT (Updated: 19 March 2021 12:26 AM GMT)

புதுவை சட்டசபை தேர்தலுக்கு வேட்பு மனுதாக்கல் இன்றுடன் (வெள்ளிக்கிழமை) முடிவடைகிறது. நாளை மனுக்கள் பரிசீலனை நடைபெறும்.

புதுச்சேரி, 

புதுச்சேரியில் சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந்தேதி நடைபெற உள்ளது. தேர்தல்களத்தில் காங்கிரஸ், தி.மு.க. ஒரு கூட்டணியாகவும், என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க. மற்றொரு அணியாகவும் களத்தில் நிற்கின்றன. இதுதவிர விஜயகாந்தின் தே.மு.தி.க., டி.டி.வி.தினகரனின் அ.ம.மு.க., கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கூட்டணி, நாம் தமிழர் கட்சி ஆகியவை தனித்தனியாக தேர்தலை சந்திக்கின்றன. சுயேச்சை வேட்பாளர்கள் பலரும் களத்தில் குதித்துள்ளனர்.

இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12-ந்தேதி தொடங்கியது. புதுச்சேரியில் அன்றைய தினம் ஒருவர் கூட வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. 13-ந்தேதி (சனிக்கிழமை), 14-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய 2 தினங்கள் தவிர்த்து, வேட்புமனு தாக்கல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

முகூர்த்த நாளான கடந்த 15-ந்தேதி அன்று, தட்டாஞ்சாவடி தொகுதியில் என்.ஆர். காங்கிரஸ் சார்பில் ரங்கசாமி, வில்லியனூரில் தெற்கு மாநில தி.மு.க. அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ. உள்பட 30 தொகுதிகளிலும் ஒரே நாளில் 27 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

அடுத்தடுத்த நாட்களில் பிரதான அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர். நேற்று முன்தினம் (புதன்கிழமை) வரை மொத்தம் 121 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். 5-வது நாளான நேற்றும் வேட்புமனு தாக்கல் நடந்தது.

புதுவை மாநிலத்தில் முக்கிய அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் அனைவரும் வேட்புமனு தாக்கல் செய்து விட்டனர். மொத்தத்தில் இதுவரை 300-க்கும் ேமற்பட்ேடார் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இதனால் அரசியல் களம் சூடு பிடித்துள்ளது.

இன்றுடன் (வெள்ளிக்கிழமை) வேட்புமனு தாக்கல் முடிவடைகிறது. நாளை (சனிக்கிழமை) வேட்புமனு பரிசீலனை செய்யப்படும். 22-ந் தேதி வரை வேட்புமனுக்களை வாபஸ் பெறலாம். அன்றைய தினமே சின்னங்கள் ஒதுக்கப்பட்டு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.

Next Story