தேர்தலையொட்டி அறிவித்த திட்டங்கள் அனைத்தும் எங்கள் ஆட்சி அமைந்த பிறகு 100 நாட்களுக்குள் நிறைவேற்றப்படும் - அமைச்சர் கடம்பூர் ராஜூ


தேர்தலையொட்டி அறிவித்த திட்டங்கள் அனைத்தும் எங்கள் ஆட்சி அமைந்த பிறகு 100 நாட்களுக்குள் நிறைவேற்றப்படும் - அமைச்சர் கடம்பூர் ராஜூ
x
தினத்தந்தி 19 March 2021 7:54 PM GMT (Updated: 19 March 2021 7:54 PM GMT)

தேர்தலையொட்டி அறிவித்த திட்டங்கள் அனைத்தும் எங்கள் ஆட்சி அமைந்த பிறகு 100 நாட்களுக்குள் நிறைவேற்றப்படும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ பிரசாரம் கூறினார்.

கோவில்பட்டி,

கோவில்பட்டி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் அமைச்சர் கடம்பூர் ராஜூ தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் நேற்று காலை அமைச்சர் கடம்பூர் ராஜூ கோவில்பட்டி காந்தி நகரில் தனது பிரசாரத்தை தொடங்கினார். முன்னதாக அங்குள்ள காளியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் வீதி வீதியாக நடந்து சென்று வாக்கு சேகரித்தார்.

அந்த பகுதியில் திரண்டு இருந்தவர்கள் மத்தியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ வாக்கு கேட்டு பேசியதாவது:-

ஒவ்வொரு தேர்தலிலும் வாக்கு எண்ணிக்கையின்போது இந்த பகுதி வாக்குகளில் இரட்டை இலை தான் முன்னிலையில் இருக்கும். கடந்த 2 தேர்தல்களில் பார்த்து விட்டேன். எனக்கு சாதி, மத வித்தியாசம் தெரியாது. எல்லோரையும் ஒன்றாகத்தான் பார்க்கிறேன். இந்த தொகுதியில் அனைத்து சமுதாய மக்களும் ஒன்று பட்டு இருக்கிறோம். நான் யாரிடமும் வேறுபாடு காட்டமாட்டேன்.

உலகம் முழுவதும் கொரோனா காலத்தில் எல்லா துறைகளும் முடங்கி கிடந்தது. அப்போது நமது முதல் -அமைச்சர் சிறப்பாக செயல்பட்டு நலத்திட்டங்களை அறிவித்தார். நாங்கள் தொகுதி முழுவதும் வந்து பார்வையிட்டு தேவையான நடவடிக்கை எடுத்தோம். ஆனால் எதிர்கட்சியினர் யாரும் வரவில்லை. இப்போதுதான் வருகிறார்கள். கொரோனா பாதித்த 39 மாவட்டங்களுக்கும் நேரடியாக சென்று ஆய்வு நடத்திய ஒரே முதல் -அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தான். அதனால் தான் நமது மாநிலத்தில் கொரோனா கட்டுக்குள் இருக்கிறது.

சொன்னதை செய்யும் கட்சி அ.தி.மு.க. தான். எனவே நடைபெற இருக்கும் தேர்தலையொட்டி அறிவித்துள்ள திட்டங்கள் அனைத்தும் தேர்தலுக்கு பிறகு எங்கள் ஆட்சி அமைந்த பிறகு 100 நாட்களுக்குள் நிறைவேற்றப்படும். இந்த ஆட்சி சீரோடும் சிறப்புடனும் தொடரவேண்டும். அதற்கு நீங்கள் இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களித்து ஆதரவு தர வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story