சென்னையில் 16 தொகுதிகளில் 400 பேர் வேட்புமனு தாக்கல் மு.க.ஸ்டாலின் களம் காணும் கொளத்தூரில் போட்டியிட பலர் விருப்பம்


சென்னையில் 16 தொகுதிகளில் 400 பேர் வேட்புமனு தாக்கல் மு.க.ஸ்டாலின் களம் காணும் கொளத்தூரில் போட்டியிட பலர் விருப்பம்
x
தினத்தந்தி 20 March 2021 2:16 AM IST (Updated: 20 March 2021 2:16 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் 16 தொகுதிகளில் 400 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். கொளத்தூர் தொகுதியில் 41 பேர் போட்டியிட மனு அளித்துள்ளனர்.

சென்னை, 

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12-ந்தேதி தொடங்கி நேற்றுடன் நிறைவடைந்தது.

சென்னை வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிடும் அ.ம.மு.க. கூட்டணியின் தே.மு.தி.க. வேட்பாளர் சுபமங்களம், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கூட்டணியின் ஐ.ஜே.கே. வேட்பாளர் எம்.அனிஷா இத்ரீஸ் ஆகியோர் கடைசி நாளான நேற்று தங்களது வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.

சுயேச்சை வேட்பாளர்கள் பலரும் கடைசி நாளில் தேர்தல் நடத்தும் அதிகாரி அலுவலகத்துக்கு படையெடுத்தனர். அந்த வகையில் சென்னையில் உள்ள 16 தொகுதிகளில் மொத்தம் 540-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டுள்ளன. நேற்று மட்டும் 100-க்கும் மேற்பட்ட மனுக்கள் தாக்கலாகி இருக்கிறது.

கொளத்தூரில் அதிகம்.., ஆயிரம்விளக்கில் குறைவு..,

ஒரு வேட்பாளரே ஒன்றுக்கும் மேற்பட்ட மனுக்களும், மாற்றுவேட்பாளர்கள் சார்பில் மனுக்களும் அளிக்கப்பட்டு உள்ளது. இந்த மனுக்களை கழித்து பார்த்தால், சென்னையில் உள்ள 16 தொகுதிகளில் போட்டியிட 400-க்கும் மேற்பட்டோர் மனுத்தாக்கல் செய்திருப்பது தெரியவந்துள்ளது.

நேற்றிரவு 10 மணி நிலவரப்படி சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் 38 பேரும், பெரம்பூரில் 28 பேரும், கொளத்தூரில் 41 பேரும், வில்லிவாக்கத்தில் 18 பேரும், திரு.வி.க.நகரில் (தனி) 21 பேரும், எழும்பூரில் (தனி) 14 பேரும், ராயபுரத்தில் 28 பேரும், துறைமுகத்தில் 35 பேரும், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணியில் 27 பேரும், ஆயிரம் விளக்கில் 8 பேரும், அண்ணாநகரில் 15 பேரும், விருகம்பாக்கத்தில் 22 பேரும், சைதாப்பேட்டையில் 36 பேரும், தியாகராயநகரில் 21 பேரும், மயிலாப்பூரில் 24 பேரும், வேளச்சேரியில் 24 பேரும் போட்டியிட வேட்புமனுவை அளித்துள்ளனர்.

சென்னையில் உள்ள 16 தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் நிலவரப்படி தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் களம் காணும் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட அதிகம் பேர் விரும்புவதும், பா.ஜ.க. வேட்பாளரான நடிகை குஷ்பு போட்டியிடும் ஆயிரம் விளக்கு தொகுதியில் குறைந்த பேர் போட்டியிட முன்வந்திருப்பதும் தெரியவந்துள்ளது.

அரசியல் கட்சி வேட்பாளர்கள் பெயரில்...

சென்னையில் உள்ள 16 தொகுதிகளில் எத்தனை வேட்பு மனுக்கள் மொத்தம் பெறப்பட்டுள்ளது. இதில் எத்தனை பேர் அளித்துள்ளனர் என்ற பட்டியல் இன்று அதிகாரபூர்வமாக வெளியாகும்.

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் ராஜேஷ் பெயர் கொண்ட 2 சுயேச்சைகளும், ராயபுரம் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளரான அமைச்சர் டி.ஜெயக்குமார் பெயரை கொண்ட ஒரு சுயேச்சையும், அந்த தொகுதியின் தி.மு.க. வேட்பாளர் மூர்த்தி பெயர் கொண்ட ஒரு சுயேச்சையும் போட்டியிட வேட்புமனு அளித்துள்ளனர்.

அதேபோன்று திரு.வி.க.நகர் (தனி) தொகுதியில் த.மா.கா. வேட்பாளர் கல்யாணி பெயரை கொண்ட ஒரு சுயேச்சை வேட்புமனு தாக்கல் செய்திருக்கிறார்.

Next Story