இதுதான் ரங்கசாமி பாணி: வேட்புமனு முடிந்த நிலையில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு


இதுதான் ரங்கசாமி பாணி: வேட்புமனு முடிந்த நிலையில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு
x
தினத்தந்தி 19 March 2021 9:00 PM GMT (Updated: 19 March 2021 9:00 PM GMT)

வேட்புமனு தாக்கல் முடிவடைந்த நிலையில், என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு ரங்கசாமி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

புதுச்சேரி, 

புதுவை முன்னாள் முதல்-அமைச்சரான ரங்கசாமி, கடந்த 2011-ம் ஆண்டு அகில இந்திய என்.ஆர்.காங்கிரஸ் என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கினார். அப்போது நடந்த தேர்தலில் அவரது கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது.

அப்போது ரங்கசாமி தனது கட்சி வேட்பாளர்களை ஒரு சில தொகுதிகளுக்கு மட்டுமே அதிகாரபூர்வமாக அறிவித்தார். அதன்பின் தனிப்பட்ட முறையில் கட்சியினரை அழைத்து அங்கீகார கடிதத்தை வழங்கி வேட்புமனு தாக்கல் செய்ய வைத்தார்.

ரங்கசாமி பாணி

அப்போது நடந்த இடைத்தேர்தலில்கூட வேட்புமனு செய்துவிட்டு வந்த பிறகே வேட்பாளரின் பெயரை அறிவித்தார். ரங்கசாமியின் இந்த பாணி இந்த சட்டமன்ற தேர்தலிலும் எதிரொலிக்கிறது.

என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணியில் 16 தொகுதிகளை பெற்ற ரங்கசாமி கடந்த 12-ந் தேதி வேட்புமனு தொடங்கிய நிலையில் வேட்பாளர்களை அறிவிக்கவில்லை. தனிப்பட்ட முறையில் கட்சி பிரமுகர்களை அழைத்து ஒவ்வொரு நாளும் ஒருசிலருக்கு மட்டும் கட்சியின் அங்கீகார கடிதத்தை வழங்கி வேட்புமனு தாக்கல் செய்ய சொன்னார்.

அதன்படி அவர்களும் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.

அதிகாரபூர்வ பட்டியல்

இத்தகைய சூழலில் நேற்றுடன் வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில் கட்சியின் வேட்பாளர் பட்டியலை ரங்கசாமி அதிகாரபூர்வமாக வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:-

1.திருபுவனை- கோபிகா, 2.மங்களம்- தேனீ.ஜெயக்குமார், 3.வில்லியனூர்- சுகுமாரன், 4.உழவர்கரை- பன்னீர்செல்வம், 5.கதிர்காமம்- ரமே‌‌ஷ், 6.இந்திராநகர்- ஏ.கே.டி.ஆறுமுகம், 7.தட்டாஞ்சாவடி- ரங்கசாமி, 8.ராஜ்பவன்- லட்சுமிநாராயணன், 9.அரியாங்குப்பம்- பாஸ்கர் என்ற தட்சிணாமூர்த்தி, 10.ஏம்பலம்- லட்சுமிநாராயணன், 11.நெட்டப்பாக்கம்- ராஜவேலு, 12.பாகூர்- தனவேலு, 13.நெடுங்காடு- சந்திரபிரியங்கா, 14.காரைக்கால் வடக்கு- திருமுருகன், 15.மாகி- அப்துல் ரகுமான், 16.ஏனாம்- ரங்கசாமி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இதெப்படி இருக்கு?

வேட்புமனு தாக்கலுக்கான கடைசி நாளான நேற்று வேட்புமனு தாக்கல் நிறைவடைந்த பின் தனது கட்சியின் வேட்பாளர் பட்டியலை ரங்கசாமி தனது பாணியில் வெளியிட்டு இருப்பது புதுவை அரசியல் களத்தில் மற்றவர்களை இதெப்படி இருக்கு? என கேட்பதாக உள்ளது.

Next Story