தொகுதி கண்ணோட்டம்: திருவள்ளூர்


தொகுதி கண்ணோட்டம்: திருவள்ளூர்
x
தினத்தந்தி 19 March 2021 9:48 PM GMT (Updated: 19 March 2021 9:48 PM GMT)

சென்னைக்கு மிக அருகில் உள்ள திருவள்ளூர் மாவட்டம் பழைய செங்கல்பட்டு எம்.ஜி.ஆர். மாவட்டத்தில் இருந்து 1997-ம் ஆண்டு பிரிக்கப்பட்டு புதிய மாவட்டமாக உருவாக்கப்பட்டது.

சென்னை,


சென்னைக்கு மிக அருகில் உள்ள திருவள்ளூர் மாவட்டம் பழைய செங்கல்பட்டு எம்.ஜி.ஆர். மாவட்டத்தில் இருந்து 1997-ம் ஆண்டு பிரிக்கப்பட்டு புதிய மாவட்டமாக உருவாக்கப்பட்டது. 1991-ம் ஆண்டு மக்கள் கணக்கெடுப்பின்போது திருவள்ளூர், ஊத்துக்கோட்டை, பள்ளிப்பட்டு, பொன்னேரி, கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட வட்டங்கள் செங்கல்பட்டு மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு இந்த புதிய திருவள்ளூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது.

தற்போது திருவள்ளூர் மாவட்டத்தில் திருவள்ளூர், திருத்தணி, கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, பூந்தமல்லி, மாதவரம், ஆவடி, மதுரவாயல், அம்பத்தூர், திருவொற்றியூர் போன்ற 10 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. திருவள்ளூர் சட்டமன்ற தொகுதியில் திருவள்ளூர், கடம்பத்தூர், பூண்டி, திருவாலங்காடு மற்றும் திருவள்ளூர் நகராட்சியும் அடங்கியுள்ளன. திருவள்ளூர் சட்டமன்ற தொகுதியில் வன்னியர், தலித், நாயுடு, முதலியார் உள்ளிட்ட சமூகத்தினர் உள்ளனர். முக்கிய தொழிலாக விவசாயம் உள்ளது.

திருவள்ளூரில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் தற்போது அரசு மருத்துவ கல்லூரி அமைக்கும் பணி விரைவாக நடைபெற்று வருகிறது. 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக திகழும் வீரராகவ பெருமாள் கோவில், திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவில், திருவாலங்காடு கூட்டுறவு சர்க்கரை ஆலை, ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்றம், மாவட்ட கலெக்டர் அலுவலகம், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரி, திருவள்ளூர் நகராட்சி அலுவலகம் போன்றவை இத்தொகுதியில் முக்கிய அடையாளமாக உள்ளது.

கடந்த 2016-ம் ஆண்டில் மொத்தம் 2 லட்சத்து 54 ஆயிரத்து 359 வாக்காளர்கள் இருந்த நிலையில், தற்போது 2 லட்சத்து 74 ஆயிரத்து 689 பேராக அதிகரித்துள்ளது. அதாவது 20 ஆயிரத்து 330 பேர் புதிய வாக்காளர்கள்.

திருவள்ளூர் பஸ் நிலையத்தில் அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய பஸ் நிலையம் அமைத்து தர வேண்டும், அரசு கலைக்கல்லூரி அமைக்க வேண்டும், பூண்டி நீர்த்தேக்கத்தை சுற்றுலாத் தலமாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும், திருவள்ளூர் நகரில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த திருவள்ளுவருக்கு புறவழி சாலை அமைத்து தர வேண்டும், மாவட்டத் தலைநகராக விளங்கும் திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் அனைத்து எக்ஸ்பிரஸ் ரெயில்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேறாமல் உள்ளது.

மேலும் ஆற்றின் குறுக்கே தடுப்பணைகளை கட்டி நீரை சேமித்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், திருவள்ளூரில் பயன்பாடு இல்லாமல் மூடிக்கிடக்கும் உழவர் சந்தையை மீண்டும் திறந்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், பாதாள சாக்கடை திட்டத்தை முழுமையாக முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன போன்ற தேவைகளுக்கும் விடிவுகாலம் பிறக்காமல் உள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்,

அதேபோல் கடம்பத்தூரில் ஆமை வேகத்தில் நடைபெற்றுவரும் ரெயில்வே மேம்பால பணியை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வைக்க வேண்டும், கிராமப்புறங்களில் அனைத்து பகுதிகளுக்கும் பஸ் வசதி ஏற்படுத்தி தர வேண்டும்

திருவள்ளூர் மாவட்டம் 1996-ம் ஆண்டு பிரிக்கப்பட்டு இதுவரையில் கூட்டுறவு வங்கியின் தலைமை அலுவலகம் காஞ்சீபுரத்தில் உள்ளது. அதேபோல மின்வாரிய தலைமை அலுவலகமும் காஞ்சீபுரத்தில் தான் உள்ளது. இவை இரண்டையும் திருவள்ளூர் மாவட்டத்திற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.

2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல்

மொத்த வாக்காளர்கள் 2,54,359

பதிவான வாக்குகள் 2,04,826

வி.ஜி.ராஜேந்திரன் (தி.மு.க.) 80,473

கமாண்டோ அ.பாஸ்கரன்(அ.தி.மு.க.) 75,335

திருவள்ளூர் மாவட்டம் பிரிக்கப்பட்டு 2001-ம் ஆண்டில் டி.சுதர்சனம் (தமிழ் மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருந்துள்ளார். 2006-ம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. வேட்பாளரான இ.ஏ.பி சிவாஜி வெற்றி பெற்றுள்ளார். அதைத்தொடர்ந்து 2011-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட பி.வி.ரமணா தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் இ.ஏ.பி சிவாஜியை தோற்கடித்து அமோக வெற்றி பெற்றார்.

பின்னர் 2016-ம் ஆண்டு தேர்தலில் தி.மு.க.வின் வி.ஜி. ராஜேந்திரன் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் கமாண்டோ அ.பாஸ்கரனை 5 ஆயிரத்து 138 வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றார்.

தற்போது நடைபெற உள்ள சட்டமன்ற பொதுத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். தி.மு.க. வேட்பாளராக தற்போதைய எம்.எல்.ஏ. வி.ஜி.ராஜேந்திரன் மீண்டும் போட்டியிடுகிறார்.

திருவள்ளூர் தொகுதியை பொறுத்தவரையில் தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகள் மாறி மாறி வெற்றியை ருசித்துள்ளன. கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. குறைந்த வாக்கு வித்தியாசத்திலேயே வெற்றி பெற்றுள்ளது. எனவே தற்போது நடைபெற உள்ள இந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் தி.மு.க. சார்பில் மீண்டும், அ.தி.மு.க. கட்சிகள் மீண்டும் நேரடியாக களத்தில் மோதுவதால் இந்த தொகுதியில் போட்டி கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story