தமிழகத்தில் பூரண மதுவிலக்கு த.மா.கா. தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி


தமிழகத்தில் பூரண மதுவிலக்கு த.மா.கா. தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி
x
தினத்தந்தி 20 March 2021 3:23 AM IST (Updated: 20 March 2021 3:23 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று த.மா.கா. தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி வழங்கப்பட்டுள்ளது.

சென்னை, 

தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி அ.தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் த.மா.கா. சார்பில் தேர்தல் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. இந்த அறிக்கையை அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டார்.

த.மா.கா. தேர்தல் அறிக்கையில் உள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

தமிழகத்தில் விவசாய பொருட்களின் பலன் நேரடியாக பொதுமக்களுக்கும், விவசாயிகளுக்கும் கிடைக்க ஏற்பாடு. தொழிலாளர் நலனை காக்க நஷ்டத்தில் இயக்கும் தொழிற்சாலைகளை லாபத்தில் செயல்பட தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் தற்போது உள்ள மதுக்கடைகளை படிப்படியாக மூடுவதற்கு பாடுபடுவோம். தொடர்ந்து பூரண மதுவிலக்கை அமல்படுத்துவோம். அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகள் சிறந்து விளங்க நடவடிக்கை எடுப்போம். வீட்டு வேலை செய்யும் பெண்களுக்கு தனியாக வாரியம் அமைக்கப்படும்.

கோவில்கள் பக்தர்களிடம் ஒப்படைப்பு

திருநங்கைகளுக்கு செவிலியர் பயிற்சி அளித்து வேலை வாய்ப்பு வழங்கப்படும். தமிழகத்தில் உள்ள இந்து கோவில்களை பாதுகாக்க அதனை பக்தர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்து மற்றும் சிறுபான்மையினருக்கு புனித பயணத்துக்கு வழங்கப்படும் தொகை இருமடங்காக அதிகரிக்கப்படும். தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் மூலம் உலகத்தில் உள்ள தமிழ் சங்கங்களை ஒன்றிணைத்து தமிழ் கற்பிக்கவும், கலாசார உறவுகளை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

பெருவணிக நிறுவங்களிடமிருந்து சிறு வணிகர்களை பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்வோம். மீனவர்களுக்கு கடற்படை, கடல்சார் வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை வழங்கப்படும். அனைத்து துறைகளிலும் மக்கள் கண்காணிக்கும் விதம் வெளிப்படையான நிர்வாகம் மேற்கொள்ளப்படும். இந்த முக்கிய அம்சங்கள் உள்பட 35 வாக்குறுதிகள் த.மா.கா. தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றிருந்தது. தேர்தல் அறிக்கை வெளியிட்டபின் ஜி.கே.வாசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

2-வது இடம்

தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக அ.தி.மு.க. கூட்டணி முதல் இடத்திலும், தி.மு.க. கூட்டணி 2-வது இடத்திலும் இருந்து வருகிறது. இந்த தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி அமோக வெற்றிபெறும். த.மா.க. வேட்பாளர்கள் அனைவரும் வெற்றி பெறுவார்கள். தேர்தல் முடிவுகளில், தி.மு.க. கூட்டணி தொடர்ந்து 2-வது இடத்திலேயே இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதைத்தொடர்ந்து ஆயிரம்விளக்கு தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் நடிகை குஷ்பு த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

Next Story