அரவக்குறிச்சி தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலை வேட்பு மனு ஏற்பு


அரவக்குறிச்சி தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலை வேட்பு மனு ஏற்பு
x
தினத்தந்தி 20 March 2021 7:22 AM GMT (Updated: 20 March 2021 7:22 AM GMT)

இழுபறிக்கு பின்னர் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலையின் வேட்பு மனு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

கரூர்,

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில்போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12-ந் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. 

வேட்புமனு தாக்கல் நேற்று நிறைவடைந்தது. அரசியல் கட்சி வேட்பாளர்கள் ஏற்கனவே தங்களது வேட்புமனுவை தாக்கல் செய்துவிட்டனர். எனவே கடைசி நாளான நேற்று சுயேச்சைகள்தான் போட்டி போட்டு வேட்புமனு தாக்கல் செய்தனர்.

234 தொகுதிகளில் 4 ஆயிரத்து 15 வேட்புமனுக்கள் நேற்று முன்தினம் வரை பெறப்பட்டிருந்தன. ஆனால், கடைசி நாளான நேற்று மட்டும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் அந்தந்த தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி முன்னிலையில் இன்று நடைபெற்று வருகிறது. வேட்புமனுக்கள் மீதான பரிசீலினைபோது, தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை கடைபிடிக்காத மனுக்கள் நிராகரிக்கப்படும். எனவே அந்த வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது. வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று முடிந்தவுடன், நிராகரிக்கப்பட்ட பெயர்களை தவிர்த்து ஏற்றுக்கொள்ளப்பட்ட வேட்பாளர்கள் பெயர்கள் வரிசைப்படுத்தப்படும்.

இதற்கிடையில், கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக வேட்பாளர் அண்ணாமலை போட்டியிடுகிறார். இதற்கான வேட்புமனுவை அவர் தாக்கல் செய்திருந்தார். அந்த வேட்புமனுவை தேர்தல் நடத்தும் அதிகாரி இன்று பரிசீலனை செய்தார். அப்போது, அவர் மீதான வழக்குகள் தொடர்பான முறையான தகவல்களை அண்ணாமலை தனது வேட்புமனுவில் தெரிவிக்கவில்லை என பிற வேட்பாளர்கள் குற்றம்சுமத்தினர். இதனால், அண்ணாமலை வேட்புமனு மீதான பரிசீலனை சிறிதுநேரம் நிறுத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், சிறிதுநேர இழுபறிக்கு பின்னர் அண்ணாமலை வேட்புமனுவை தேர்தல் நடத்தும் அதிகாரி ஏற்றுக்கொண்டார். இதன் மூலம் அரவக்குறிச்சி தொகுதியில் பாஜக வேட்பாளராக அண்ணாமலை போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. 

அரவக்குறிச்சி தொகுதியில் திமுக வேட்பாளாராக இளங்கோ போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.   

Next Story