தொகுதி கண்ணோட்டம்: கோவை தெற்கு


தொகுதி கண்ணோட்டம்: கோவை தெற்கு
x
தினத்தந்தி 21 March 2021 8:40 PM IST (Updated: 21 March 2021 8:40 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்துள்ள தொகுதி கோவை தெற்கு.

இதற்கு காரணம் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் இந்த தொகுதியை தேர்வு செய்து போட்டியிடுவதுதான்.தமிழ்நாட்டில் சென்னை சேப்பாக்கத்துக்கு அடுத்தபடியாக சிறிய தொகுதியாகவும், கோவை மாவட்டத்தில் மிகச்சிறிய தொகுதியாகவும் இந்த தொகுதி இருந்தது. 2008-ம் ஆண்டு தொகுதி சீரமைப்பு செய்யப்பட்ட பின்னர் மேற்கு தொகுதியாக இருந்த இந்த தொகுதி கோவை தெற்கு தொகுதியாக பெயர் மாற்றம் செய்யப்பட்டது. ஏற்கனவே இருந்த பகுதிகளுடன் கூடுதலாக கோவை மாநகராட்சியின் 11 
வார்டுகள் சேர்க்கப்பட்டன.

கோவை தெற்கு தொகுதியில் ரேஸ்கோர்ஸ், உக்கடம், டவுன்ஹால், பெரியகடை வீதி, செட்டி வீதி, ராஜவீதி, ஆர்.எஸ்.புரம், செல்வபுரம் ஹவுசிங்யூனிட், பகுதிகள் இடம்பெற்றுள்ளன. இது, வணிக நிறுவனங்கள், நகைக்கடைகள் மற்றும் 1000-க்கும் மேலான நகைபட்டறைகள் உள்ளன. இங்கு உக்கடம் உள்ளிட்ட பகுதிகளில் முஸ்லிம்கள் மற்றும் வடமாநில மக்கள், மலையாளிகள், தெலுங்கு, கன்னடர் என்று அனைத்து தரப்பு மக்களும் வசித்து வருகிறார்கள்.

1951-ம் ஆண்டு சி.சுப்பிரமணியம் (காங்கிரஸ்), 1962-ம் ஆண்டு சின்னத்துரை (காங்கிரஸ்), 1967-ம் ஆண்டு ஜே.கோவிந்தராஜுலு (தி.மு.க.), 1971-ம் ஆண்டு கோபால் (தி.மு.க.) ஆகியோர் வெற்றி பெற்றனர். 1977 மற்றும் 1980-ம் ஆண்டு நடந்த தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட அரங்கநாயகம் வெற்றி பெற்றார். 1984 மற்றும் 1989-ம் ஆண்டுகளில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட மு.ராமநாதன் வெற்றி பெற்றார்.1991-ம் ஆண்டு செல்வராஜ் (காங்கிரஸ்), 1996-ம் ஆண்டு சி.டி.தண்ட பாணி (தி.மு.க.), 2001-ம் ஆண்டு எஸ்.மகேஸ்வரி (காங்கிரஸ்), 2006-ம் ஆண்டு தா.மலரவன் (அ.தி.மு.க.) ஆகியோர் வெற்றி பெற்றனர். 2011-ம் ஆண்டு சேலஞ்சர்துரை (அ.தி.மு.க.) 80,566 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார்.

2016-ம் ஆண்டு நடந்த தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட அம்மன் அர்ச்சுனன் 59,788 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட மயூராஜெயக்குமார் 42,369 ஓட்டுகள் பெற்று 2-வது இடம், பாரதீய ஜனதா கட்சி சார்பில் போட்டியிட்ட வானதி சீனிவாசன் 33,113 ஓட்டுகள் பெற்று 3-வது இடம் பெற்றார். 13 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர். தெற்கு தொகுதியில் காங்கிரஸ் 4 முறை, தி.மு.க. 5 முறை, அ.தி.மு.க. 4 முறை வெற்றி பெற்று உள்ளது.

கோவை தெற்கு தொகுதியில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் அதிகம். எனவே பெண்களை கவரும் வகையில் பிரசாரம் செய்யப்படுகிறது. இந்த தொகுதியில் வெற்றி பெற்ற அம்மன் அர்ச்சுனன் தற்போது கோவை வடக்கு தொகுதியில் போட்டியிடுகிறார்.

தற்போது இந்த தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணியில் பாரதீய ஜனதா கட்சி வேட்பாளராக அந்த கட்சியின் மகளிர் அணி தேசிய செயலாளர் வானதி சீனிவாசன், தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் அந்த கட்சியின் மாநில செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார், மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் அதன் தலைவர் கமல்ஹாசன் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.

அ.ம.மு.க. சார்பில் சேலஞ்சர் துரை, நாம் தமிழர் கட்சி சார்பில் அப்துல் வகாப் ஆகியோரும் களத்தில் உள்ளனர். பலர் போட்டியில் இருந்தாலும் 5 பேர் தான் முக்கிய வேட்பாளராக உள்ளனர்.

மாநகராட்சி, அரசு ஆஸ்பத்திரி, ரெயில்நிலையம், காந்திபுரம் பஸ் நிலையம், கலெக்டர் அலுவலகம், மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. அலுவலகம், கோவை நகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் உள்ளிட்ட முக்கிய அரசு அலுவலகங்கள், நிறுவனங்கள் உள்ள இந்த தொகுதியில் போக்குவரத்து பிரச்சினை பிரதானமாக உள்ளது.

கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற போவது யார்? இந்த தொகுதியின் எம்.எல்.ஏ.வாக யாரை பொதுமக்கள் தேர்ந்தெடுக்கப்போகிறார்கள்? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

பயோடேட்டா

மொத்த வாக்காளர்கள் -2,51,389

ஆண்கள் -1,25,416

பெண்கள் -1,25,950

மூன்றாம் பாலினம் -23


Next Story