அமைச்சரின் தேர்தல் பிரசாரத்தில் அ.தி.மு.க-தி.மு.க.வினர் இடையே மோதல் 18 பேர் காயம்


அமைச்சரின் தேர்தல் பிரசாரத்தில் அ.தி.மு.க-தி.மு.க.வினர் இடையே மோதல் 18 பேர் காயம்
x
தினத்தந்தி 22 March 2021 3:22 AM IST (Updated: 22 March 2021 3:22 AM IST)
t-max-icont-min-icon

கரூரில் அமைச்சரின் தேர்தல் பிரசாரத்தில் அ.தி.மு.க., தி.மு.க.வினர் இடையே மோதல் ஏற்பட்டதில் 18 பேர் காயமடைந்தனர்.

கரூர், 

கரூர் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேற்று முன்தினம் இரவு கரூர் மாவடியான்கோவில் தெருவில் வாக்கு சேகரித்து விட்டு அங்கிருந்து சென்று விட்டார்.

சிறிது நேரத்தில் அங்கு வந்த தி.மு.க. நிர்வாகிகள் ஏன் அதிக நேரம் பிரசாரம் செய்கிறீர்கள் எனக்கூறி அ.தி.மு.க. பிரசார வாகனத்தை மறித்துள்ளனர். இதனால் அ.தி.மு.க., தி.மு.க.வினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, கைகலப்பாகி மோதல் ஏற்பட்டது. மேலும் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டனர்.

18 பேர் காயம்

இதில், அமைச்சரின் உதவியாளர் ரமேஷ் உள்பட நிர்வாகிகள் 15 பேருக்கும், தி.மு.க. நிர்வாகிகள் 3 பேருக்கும் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.

இதையடுத்து காயமடைந்த அ.தி.மு.க.வை சேர்ந்த 15 பேரும் கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையிலும், தி.மு.க.வை சேர்ந்த 3 பேரும் கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அ.தி.மு.க. நிர்வாகிகளை அமைச்சர் நேரில் சந்தித்து நலம் விசாரித்து ஆறுதல் கூறினார்.

எதிர்க்கட்சியினர் அராஜகம்

பின்னர் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கரூரில் அ.தி.மு.க. வெற்றி பெறுவது உறுதி என்ற செய்தி பரவி கொண்டு உள்ளது. இதை தாங்கி கொள்ள முடியாத எதிர்க்கட்சியினர் இதுபோன்ற அராஜக செயலில் ஈடுபட்டு வருகின்றனர். இதேநிலை நீடித்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும்.

இது போன்ற அராஜக செயலில் ஈடுபட்டு தேர்தலை நிறுத்தி விடலாம் என எதிர்க்கட்சியினர் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். இதுகுறித்து தேர்தல் கமிஷன் மற்றும் போலீசாரிடம் புகார் கொடுத்து உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறி னார்.

மறியல் செய்ய முயற்சி

இதையடுத்து நேற்று காலை கரூர் பஸ் நிலையம் அருகே உள்ள கோவை சாலையில் அ.தி.மு.க.வினர் திரண்டு, எங்களை தாக்கிய தி.மு.க. நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி மறியலில் ஈடுபட முயன்றனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்தனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். 

Next Story