சட்டசபை தேர்தல் சூடுபிடிக்கிறது: ராகுல்காந்தி 2 நாள் தேர்தல் பிரசாரம் மு.க.ஸ்டாலினுடன் ஒரே மேடையில் பேசுகிறார்
தமிழ்நாட்டில் 2 நாள் தேர்தல் பிரசாரம் செய்ய ராகுல்காந்தி விரைவில் தமிழகம் வர உள்ளார். மு.க.ஸ்டாலினுடன் இணைந்து அவர் பிரசாரம் செய்கிறார்.
சென்னை,
தமிழக சட்டசபை தேதல் ஏப்ரல் 6-ந்தேதி நடக்கிறது. தேர்தலுக்கு இன்னும் குறைந்த நாட்களே உள்ளதால் அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தை முன்னெடுத்துள்ளது. வாகனங்களில் சென்றும், வீதி வீதியாகவும் தலைவர்கள் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் அனல் பறக்கும் பிரசாரம் செய்து வருகிறார். பொது மக்களை நேரில் சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து, வாக்கு சேகரித்து வருகிறார்.
அதேபோல் தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் ஆகியோர் தி.மு.க. கூட்டணிக்கு வாக்கு சேகரித்து, பிரசாரம் மேற்கொண்டுள்ளனர்.
ராகுல்காந்தி
தமிழக சட்டசபை தேர்தலையொட்டி சமீபத்தில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கோவை மண்டலத்தில் பிரசாரம் மேற்கொண்டார். மேலும் தென் மாவட்டங்களான தென்காசி, கன்னியாகுமரி பகுதிகளில் அவர் பிரசாரம் செய்தார்.
தொடர்ந்து, ராகுல்காந்தி சட்டசபை தேர்தல் நடக்கும் 5 மாநிலங்களில் மிக தீவிரமாக தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். தற்போது மீண்டும் அவர் தமிழகம் வர உள்ளார். அவர் மு.க.ஸ்டாலினுடன் இணைந்து பிரசாரம் செய்ய இருக்கிறார். இதற்காக 2 நாள் பிரசார பயண திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது. விரைவில் அவர் தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மு.க.ஸ்டாலினுடன் இணைந்து...
கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது சேலத்தில் நடந்த கூட்டத்தில் பேசிய ராகுல்காந்தி, அடுத்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்று தமிழக முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் வருவார். அதற்கு காங்கிரஸ் துணை நிற்கும் என்று கூறினார். அந்த நோக்கத்தை நிறைவேற்றும் வகையில், சுற்றுப்பயணம் மேற்கொள்வார் என்று தெரிகிறது. சில கூட்டங்களில் அவர் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுடன் இணைந்து பேச இருக்கிறார்.
Related Tags :
Next Story