தொகுதி கண்ணோட்டம்: மதுராந்தகம் (தனி)


தொகுதி கண்ணோட்டம்: மதுராந்தகம் (தனி)
x
தினத்தந்தி 22 March 2021 4:25 PM IST (Updated: 22 March 2021 4:25 PM IST)
t-max-icont-min-icon

செங்கல்பட்டு மாவட்டம் கடந்த 29.11.2019 அன்று காஞ்சீபுரம் மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு புதிய மாவட்டமாக உருவாக்கப்பட்டது. மாவட்டத்தில் 7 தொகுதிகள் உள்ளன. அதில் மதுராந்தகம் (தனி) தொகுதியும் ஒன்று.

செங்கல்பட்டு-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செங்கல்பட்டு நகர எல்லையின் முடிவில் உள்ள பாலாற்றங்கரையின் வடக்கு பகுதியில் ஆரம்பித்து மாவட்ட முடிவில் உள்ள அச்சரப்பாக்கம் ஒன்றியம் ஆத்தூர் சுங்கச்சாவடி வரை செல்கிறது. இந்த தொகுதியில் மதுராந்தகம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 58 ஊராட்சிகள், அச்சரப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில் 59 ஊராட்சிகள், மதுராந்தகம் நகராட்சியில் 24 வார்டுகள், அச்சரப்பாக்கம் பேரூராட்சியில் 15 வார்டுகள் அடங்கி உள்ளன.

இங்கு மிகபெரிய ஏரியான மதுராந்தகம் ஏரி உள்ளது. இந்த ஏரி 50 ஆண்டு காலமாக தூர் வாரப்படாமல் இருந்தது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏரியை தூர்வார ரூ.120 கோடி நிதி ஒதுக்கீடு செய்தார். மதுராந்தகம் ஏரியில் படகு போக்குவரத்து தொடங்க வேண்டும். மழைக்காலங்களில் பாலாற்றில் செல்லும் தண்ணீரை தடுப்பணைகள் கட்டி சேமிக்க வேண்டும் என்பது தொகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

மதுராந்தகம் தொகுதியை பொறுத்தவரை ஆதிதிராவிடர்களும் வன்னியர்களும் அதிக அளவில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மதுராந்தகம் சட்டமன்ற தொகுதியில் 1967-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை நடைபெற்ற தேர்தல்களில் தி.மு.க. 6 முறையும், அ.தி.மு.க. 5 முறையும், காங்கிரஸ் கட்சி ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளது.

1967-ம் ஆண்டு கோதண்டம் (தி.மு.க.), 1971, 1977, 1984-ம் ஆண்டுகளில் ஆறுமுகம் (தி.மு.க.), 1980, 1989-ம் ஆண்டுகளில் உக்கம்சந்த் (அ.தி.மு.க.), 1991-ல் சொக்கலிங்கம் (அ.தி.மு.க.), 1996-ல் வெங்கடேசன் (தி.மு.க.) 2001-ல் வாசுதேவன் (அ.தி.மு.க.), 2006-ம் ஆண்டு காயத்ரி தேவி (காங்கிரஸ்), 2011-ம் ஆண்டு கனிதா சம்பத் (அ.தி.மு.க.), 2016-ம் ஆண்டு புகழேந்தி (தி.மு.க.) வெற்றி பெற்றனர்.

2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல்

மொத்த வாக்காளர்கள் 2,18,831

பதிவானவை 1,78,043

புகழேந்தி (தி.மு.க.) 73,693

தமிழரசன்(அ.தி.மு.க.) 70,736

2016-ம் ஆண்டு வாக்காளர்கள் எண்ணிக்கை 2 லட்சத்து 18 ஆயிரத்து 831- ஆக இருந்தது தற்போது 2 லட்சத்து 32 ஆயிரத்து 339 ஆக அதிகரித்துள்ளது. இந்த தொகுதியில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் 

கட்டப்பட்ட உலக புகழ் பெற்ற ஏரி காத்த ராமர் கோவில் உள்ளது. அச்சரப்பாக்கம் ஆட்சீஸ்வரர் கோவில், மழை மலை மாதா தேவாலயம், வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் போன்றவை உள்ளன. 

படாளத்தில் உள்ள கூட்டுறவு சர்க்கரை ஆலை விவசாயிகளுக்கு வரபிரசாதமாக உள்ளது. புதிய நகராட்சி கட்டிடம், ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகம், ஆர்.டி.ஓ. அலுவலகம், வேளாண் உதவி இயக்குனர் அலுவலகம், வட்டார போக்குவரத்து அலுவலகம், சார்பதிவாளர் அலுவலகம், தீயணைப்பு நிலையம் உள்ளிட்டவை இங்கு உள்ளன.

மதுராந்தகம் அரசு ஆஸ்பத்திரியை தரம் உயர்த்த வேண்டும். சூனாம்பேடு சாலை, மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள மீன் கடைகளை அப்புறப்படுத்த வேண்டும், பாதாள சாக்கடை திட்டத்தை முறையாக பயன்படுத்த வேண்டும், சாலையோரம் உள்ள கடைகளை அப்புறப்படுத்த வேண்டும், சாலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வணிக வளாகங்களை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். குடிநீர் பிரச்சினை, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும். படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரவேண்டும் என்பது போன்றவை மதுராந்தகம் தொகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையாக உள்ளது.

தொகுதியில் நடுநிலை மற்றும் உயர்நிலைப்பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்த வேண்டும். அரசு கல்லூரிகள் அமைக்க வேண்டும். அச்சரப்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சாலையின் குறுக்கே செல்வதால் விபத்துகள் ஏற்படுகிறது. அங்கு மேம்பாலம் அமைக்க வேண்டும் கிராமப்புறங்களில் தண்ணீர் பிரச்சினை இருந்து வருகிறது தண்ணீர் பிரச்சினையை போக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சாலை, மின்சார வசதி ஏற்படுத்தி தர வேண்டும். மதுராந்தகம் பைபாஸ் சாலையில் பஸ் நிலையம் அமைக்க வேண்டும். அச்சரப்பாக்கம் மற்றும் கிராமப்புறங்களில் பல இடங்களில் பஸ் நிலையங்கள் இல்லாமல் பொதுமக்கள் சாலையிலேயே நிற்கின்றனர். இதனால் விபத்துகள் ஏற்படுகின்றன. இவற்றை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது போன்றவை தொகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

இந்த தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக முன்னாள் எம்.பி. மரகதம் குமரவேல் களம் இறங்குகிறார். தி.மு.க. சார்பில் கூட்டணி கட்சியான ம.தி.மு.க.வுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ம.தி.மு.க. சார்பில் மல்லை சத்யா போட்டியிடுகிறார்.அ.ம.முக. சார்பில் கூட்டணி கட்சியான தே.மு.தி.க.வுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தே.மு.தி.க. சார்பில் மூர்த்தி போட்டியிடுகிறார். மக்கள் நீதி மய்யம் சார்பில் தினேஷ், நாம் தமிழர் கட்சி சார்பில் சுமிதா போட்டியிடுகின்றனர்.



பயோடேட்டா

மொத்த வாக்காளர்கள் 2,32,339

ஆண்கள் 1,11,270

பெண்கள் 1,15,019

திருநங்கைகள் 59


Next Story