தொகுதி கண்ணோட்டம்: பாலக்கோடு


தொகுதி கண்ணோட்டம்: பாலக்கோடு
x
தினத்தந்தி 22 March 2021 1:36 PM GMT (Updated: 2021-03-22T19:06:43+05:30)

தர்மபுரி மாவட்டத்தின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள பாலக்கோடு தொகுதி கடந்த 1967-ம் ஆண்டு முதல் சட்டமன்ற தேர்தலை சந்தித்தது.

இதுவரை இந்த தொகுதியில் 12 முைற தேர்தல்கள் நடைபெற்று உள்ளன. இந்த தொகுதியில் இதுவரை அ.தி.மு.க. 7 முறையும், தி.மு.க., காங்கிரஸ், ஆகிய கட்சிகள் தலா 2 முறையும் வெற்றி பெற்றுள்ளன. அ.தி.மு.க. (ஜெ) ஒரு முறை வெற்றி பெற்றுள்ளது.இந்த தொகுதியில் கடந்த 2001, 2006, 2011, 2016-ம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட 
கே.பி.அன்பழகன் வெற்றி பெற்றுள்ளார். கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் கே.பி.அன்பழகன் 76,143 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் பி.கே.முருகன் 70,160 வாக்குகளும், பா.ம.க. வேட்பாளர் மன்னன் 31,612 வாக்குகளும் பெற்று தோல்வி அடைந்தனர்.

இந்த தொகுதியில் பாலக்கோடு, மாரண்டஅள்ளி, காரிமங்கலம் ஆகிய 3 பேரூராட்சிகள், பாலக்கோடு, காரிமங்கலம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்கள் அமைந்துள்ளன. இந்த தொகுதியில் வன்னியர்கள் அதிக அளவில் வசிக்கிறார்கள். கொங்கு வேளாள கவுண்டர்கள், ஆதிதிராவிடர்கள், செட்டியார்கள், முதலியார்கள் உள்ளிட்ட பிற சமூக மக்களும் கணிசமான அளவில் வசிக்கிறார்கள்.இதேபோல் முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளனர். தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களின் பிரதான தொழில் விவசாயம் ஆகும். இந்த தொகுதியில் நெல், கரும்பு, தக்காளி ஆகியவை அதிக அளவில் பயிரிடப்படுகின்றன. சின்னாறு அணை, கெசர்குளிஅணை, தும்பலஅள்ளி அணை ஆகியவை இந்த தொகுதியில் உள்ள முக்கிய நீர்ப்பாசன அணைகள் ஆகும்.

இந்த தொகுதியின் எம்.எல்.ஏ.வாகவும், உயர்கல்வி அமைச்சராகவும் பொறுப்பு வகித்த கே.பி.அன்பழகன் உயர்கல்வித்துறை வளர்ச்சிக்கான பல்வேறு நடவடிக்கைகளை எடுத்ததால் புதிய அரசு கல்லூரிகள் இந்த தொகுதியில் தொடங்கப்பட்டுள்ளன. பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலை பாலிடெக்னிக் அரசு பாலிடெக்னிக் கல்லூரியாக தரம் உயர்த்தப்பட்டதால் மாணவர்களுக்கான கல்வி கட்டணம் கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது.

காரிமங்கலத்தில் அரசு மகளிர் கலை கல்லூரி, மாட்லாம்பட்டியில் அரசு சட்ட கல்லூரி ஆகியவை தொடங்கப்பட்டுள்ளன. எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பாலக்கோடு தொகுதியை சேர்ந்த விவசாயிகளுக்கு கணிசமான பயன் கிடைக்கக்கூடிய எண்ணேகொள்புதூர் அணைக்கட்டின் வலது புறம் மற்றும் இடது புறங்களில் புதிய கால்வாய் அமைக்கும் திட்டம், அலியாளம், ஜெர்தாலாவ் நீர் பாசன கால்வாய் திட்டங்கள் ரூ.320.56 கோடி மதிப்பில் தொடங்கப்பட்டுள்ளன.

பாலக்கோடு தொகுதிக்குட்பட்ட பகுதியில் பருவ மழை குறைந்ததால் முக்கியமான ஏரி, குளங்கள் தண்ணீரின்றி வறண்டு உள்ளன. இதன் காரணமாக கரும்பு சாகுபடி உள்ளிட்ட பல்வேறு விதமான விவசாய பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. நீர்ப்பாசன திட்டங்களை ஏற்கனவே தொடங்கி செயல்பாட்டிற்கு கொண்டு வந்திருந்தால் வறட்சி காலத்தில் ஏற்படும் தண்ணீர் தட்டுப்பாட்டை தவிர்த்திருக்க முடியும் என்று விவசாயிகள் தெரிவிக்கிறார்கள்.

இந்த தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் அதிக அளவில் விளையும் தக்காளி, மாம்பழம் ஆகியவற்றை மதிப்புக்கூட்டு பொருட்களாக மாற்றுவதற்கான தொழிற்சாலைகளை போதிய அளவில் தொடங்கவேண்டும். வேளாண்மை சார்ந்த சிறு, குறு தொழிற்சாலைகளை அதிக அளவில் தொடங்க வேண்டும். பாலக்கோடு பேருராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் இந்த தொகுதி மக்களால் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகின்றன.

கடந்த சட்டமன்ற தேர்தலை ஒப்பிடும்போது தற்போது நடைபெற உள்ள தேர்தலில் பாலக்கோடு தொகுதியில் 21 ஆயிரத்து 953 வாக்காளர்கள் அதிகரித்துள்ளனர். இந்த தொகுதியில் ஏற்கனவே 4 முறை தொடர்ந்து வெற்றி பெற்ற அமைச்சர் கே.பி.அன்பழகன் தற்போது 5-வது முறையாக அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து தி.மு.க. வேட்பாளராக கடந்த சட்டசபை தேர்தலில் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்த பி.கே.முருகன் மீண்டும் களம் காண்கிறார். இவர்களிடையே கடும் போட்டி நிலவுகிறது. இவர்களில் யார்? வெற்றி கோட்டை தொடுவார்கள் என்பது தேர்தல் முடிவில் தெரியவரும்.


2016 தேர்தல் வாக்கு விவரம்

மொத்த வாக்குகள் .............................. 2,13,136

பதிவான வாக்குகள் ........................... 1,88,767

கே.பி.அன்பழகன் (அ.தி.மு.க.).............. 76,143

பி.கே.முருகன் (தி.மு.க.) ......................... 70,160

மன்னன் (பா.ம.க.) .................................. 31,612

பயோடேட்டா

மொத்த வாக்காளர்கள் -2,35,089

ஆண்கள் -1,19,046

பெண்கள் -1,16, 025

மூன்றாம் பாலினம் -18


Next Story