தொகுதி கண்ணோட்டம்: பட்டுக்கோட்டை


தொகுதி கண்ணோட்டம்: பட்டுக்கோட்டை
x
தினத்தந்தி 22 March 2021 7:41 PM IST (Updated: 22 March 2021 7:41 PM IST)
t-max-icont-min-icon

தஞ்சை மாவட்டத்தில் 2011-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலுக்கு முன்பு 10 தொகுதிகள் இருந்தன.

இதில் 2011-ம் ஆண்டு தேர்தலில் திருவோணம், வலங்கைமான் ஆகிய 2 தொகுதிகள் நீக்கப்பட்டு விட்டன. அதற்கு பதிலாக வேறு தொகுதிகள் எதுவும் சேர்க்கப் படவில்லை.

தற்போது தஞ்சை மாவட்டத்தில் தஞ்சை, ஒரத்தநாடு, பாபநாசம், பட்டுக்கோட்டை, பேராவூரணி, திருவையாறு, கும்பகோணம், திருவிடை மருதூர் ஆகிய 8 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் பட்டுக்கோட்டை தொகுதி 1952-ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. பட்டுக்கோட்டை தொகுதியில் தான் மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஆர்.வெங்கட்ராமன் பிறந்த ராஜாமடம் என்ற கிராமம் உள்ளது.

இது தவிர பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், பட்டுக்கோட்டை அழகிரிசாமி ஆகியோர் இந்த தொகுதியில் வாழ்ந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள். இந்த தொகுதி தொடக்ககாலத்தில் இருந்தே பொது தொகுதியாக உள்ளது. தற்போது சட்டமன்ற தொகுதிகளின் வரிசையில் பட்டுக்கோட்டை தொகுதி 176-வது இடத்தை பிடித்துள்ளது. பட்டுக்கோட்டை தொகுதியில் பட்டுக்கோட்டை நகராட்சியில் உள்ள 33 வார்டுகளும், ஒன்றியத்தில் உள்ள 39 ஊராட்சிகளும் இடம்பெற்று இருந்தது. தற்போது தொகுதி மறுசீரமைப்புக்கு பின்னர் 3 ஊராட்சிகள் பேராவூரணி தொகுதிக்கு சென்று விட்டன. மேலும் மதுக்கூர் பேரூராட்சி, அதிராம்பட்டினம்பேரூராட்சியும் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் அடங்கி உள்ளன. பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் முக்கிய தொழில் விவசாயம். இங்கு நெல், தென்னை போன்ற பயிர்கள் அதிக அளவில் சாகுபடிசெய்யப்படுகின்றன. இது தவிர கேழ்வரகு, சோளம் போன்ற தானியப்பயிர்களும் பயிரிடப்படுகின்றன. காவிரி நீரை நம்பி இங்கு விவசாயம் செய்யப்படுகிறது. 

இந்த பகுதியில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனார் மணி மண்டபம், மொழிப்போர் தியாகி பட்டுக்கோட்டை அழகிரிசாமி சிலை உள்ளிட்டவை முக்கியமானவையாகும்.பட்டுக்கோட்டை தொகுதியில் ஆரம்பத்தில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. அதன் பின்னர் தி.மு.க. கைப்பற்றியது. பட்டுக்கோட்டை தொகுதியில் இதுவரை 15 முறை தேர்தல் நடைபெற்றுள்ளது. 

இதில் காங்கிரஸ் கட்சி 5 முறையும், தி.மு.க. 3 முறையும், அ.தி.மு.க. 4 முறையும், பிரஜா சோ‌‌ஷலிஸ்டு 2 முறையும், த.மா.கா. 1 முறையும் வெற்றி பெற்றுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் மதுக்கூர்-சொக்கனாவூர் அருகே ரூ.3 கோடியிலும், ராஜாமடத்தில் 18 கோடியிலும், பொன்னவராயன்கோட்டையில் ரூ.3 கோடியிலும் தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன. பட்டுக்கோட்டை அரசு 
மருத்துவமனையில் புதிய கட்டிடம் ரூ.4 கோடியில் கட்டப்பட்டுள்ளது. ரூ.1½ கோடியில் சி.டி.ஸ்கேன் மற்றும் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

பட்டுக்கோட்டை நகரில் குடிசை மாற்றுவாரியத்தால் ரூ.21 கோடியில் 280 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. அதிராம்பட்டினம் பஸ் நிலையத்தில் மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது. பட்டுக்கோட்டையில் ரூ.2 கோடியிலும், மதுக்கூரில் ரூ.1 கோடியிலும் சார்பதிவாளர் அலுவலகம் புதிதாக கட்டப்பட்டுள்ளது. பட்டுக்கோட்டையில் ஆதிதிராவிடர் நலத்துறை மாணவர் விடுதி புதிதாக கட்டப்பட்டுள்ளது. ஏனாதி, மதுக்கூர், புதுக்கோட்டை உள்ளூர், அதிராம்பட்டினம், வெண்டாக்கோட்டை, தாமரங்கோட்டை வடக்கு, ஏரிப்புறக்கரை ஆகிய இடங்களில் புதிதாக பள்ளி கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. மேஜை, நாற்காலி, சுற்றுச்சுவர் மற்றும் உள்கட்டமைப்பு வசதி செய்யப்பட்டுள்ளது. இதேபோல் சாலைகள், பாலங்கள் கட்டப்பட்டுள்ளன.

பட்டுக்கோட்டையில் 50 ஆண்டுகளுக்கு முன்பு வேளாண் ஆராய்ச்சி பண்ணை இருந்தது. இதற்காக 100 ஏக்கர் நிலம் தனியாரிடம் இருந்து கையகப்படுத்தப்பட்டது. ஆனால் இங்கு தொடங்க இருந்த நெல் ஆராய்ச்சி நிலையம் ஆடுதுறைக்கு கொண்டு செல்லப்பட்டது. அதன்பிறகு வேளாண் ஆராய்ச்சி பண்ணை படிப்படியாக தரம் குறைக்கப்பட்டு தென்னை நாற்றங்கால், எண்ணெய்பனை நாற்றங்கால் விடக்கூடிய பகுதியாக மாறிவிட்டது. எனவே இந்த இடத்தில் வேளாண்மை கல்லூரி அமைக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையாகும். பட்டுக்கோட்டையில் பாதாள சாக்கடை திட்டம் கொண்டு வர வேண்டும். புதிய பஸ் நிலையம் அமைக்க வேண்டும். முழுமை பெறாத சுற்றுச்சாலையை விரைந்து போட வேண்டும். இந்த பகுதியில் தென்னை சாகுபடி அதிக அளவில் நடைபெறுவதால் தென்னை வியாபாரிகளுக்கு நல்ல விலை கிடைக்கும் வகையில் அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என்பன போன்றவை இந்த பகுதி மக்களின் முக்கிய கோரிக்கைகளாக உள்ளது.

பட்டுக்கோட்டை தொகுதியில் கள்ளர், முத்தரையர், முக்குலத்தோர், வேளாளர், முதலியார், செட்டியார் என பல்வேறு சமூகத்தினர் உள்ளனர். கடந்த 2016-ம் ஆண்டு தேர்தலில் 1 லட்சத்து 9 ஆயிரத்து 221 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 17 ஆயிரத்து 279 பெண் வாக்காளர்களும், 3-ம் பாலினத்தவர் 18 பேரும் என மொத்தம் 2 லட்சத்து 26 ஆயிரத்து 518 வாக்காளர்கள் இருந்தனர். தற்போது 1 லட்சத்து 17 ஆயிரத்து 605 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 27 ஆயிரத்து 626 பெண் வாக்காளர்களும், 3-ம் பாலினத்தவர் 27 பேரும் என மொத்தம் 2 லட்சத்து 45 ஆயிரத்து 258 வாக்காளர்கள் உள்ளனர். 18 ஆயிரத்து 740 பேர் புதிய வாக்காளர்களாக உள்ளனர். இவர்கள் தான் வெற்றி, தோல்வியை நிர்ணயம் செய்யும் சக்திகளாக உள்ளனர்.

இதுவரை நடந்த தேர்தல் முடிவுகள்

பட்டுக்கோட்டை சட்டசபை தொகுதியில் இதுவரை நடந்த தேர்தல் முடிவுகள் வருமாறு:-

1952 காங்கிரஸ் வெற்றி

நாடிமுத்துப்பிள்ளை (காங்.)......................21,372

மாரிமுத்து (பிரஜாசோ‌‌ஷலிஸ்டு)..............15,926

1957 காங்கிரஸ் வெற்றி

சீனிவாசஅய்யர் (காங்.)..............................24,237

அருணாசலத்தேவர் (சுயே).......................16,435

1962 தி.மு.க. வெற்றி

அருணாசலத்தேவர் (தி.மு.க.)..................35,151

சீனிவாசஅய்யர் (காங்.)..............................28,806

1967 பிரஜாசோ‌‌ஷலிஸ்டு வெற்றி

மாரிமுத்து (பிரஜாசோ‌‌ஷலிஸ்டு)...............35,198

ராமசாமி (காங்.)..........................................28,056

1971 பிரஜாசோ‌‌ஷலிஸ்டு வெற்றி

மாரிமுத்து (பிரஜாசோ‌‌ஷலிஸ்டு)...............44,565

நாகராஜன் (பழையகாங்.)..........................26,229

1977 காங்கிரஸ் வெற்றி

மாரிமுத்து (இ.காங்.)..................................25,993

பழனியப்பன் (அ.தி.மு.க.).........................25,982

1980 அ.தி.மு.க. வெற்றி

எஸ்.டி.சோமசுந்தரம் (அ.தி.மு.க.)............52,900

மாரிமுத்து (இ.காங்.)..................................42,302

1984 அ.தி.மு.க. வெற்றி

ராமச்சந்திரன் (அ.தி.மு.க.)........................50,493

சுப்பிரமணியன் (தி.மு.க.)...........................35,376

1989 தி.மு.க. வெற்றி

அண்ணாத்துரை (தி.மு.க.)........................41,224

மாரிமுத்து (இ.காங்.)..................................26,543

1991 அ.தி.மு.க. வெற்றி

பாலசுப்பிரமணியன் (அ.தி.மு.க.).............67,754

அண்ணாத்துரை (தி.மு.க.)........................39,028

1996 தி.மு.க. வெற்றி

பாலசுப்பிரமணியன் (தி.மு.க.).................69,880

சீனிபாஸ்கரன் (அ.தி.மு.க.)......................36,259

2001 த.மா.கா. வெற்றி

ரெங்கராஜன் (த.மா.கா.)...........................55,474

ஏனாதிபாலு (தி.மு.க.)...............................48,524

2006 காங்கிரஸ் வெற்றி

ரெங்கராஜன் (காங்.)...................................58,776

விஸ்வநாதன் (ம.தி.மு.க.).........................43,442

2011 காங்கிரஸ் வெற்றி

ரெங்கராஜன் (காங்.)..................................55,482

செந்தில்குமார் (தே.மு.தி.க.).....................46,703

2016 அ.தி.மு.க. வெற்றி

சி.வி.சேகர் (அ.தி.மு.க)............................70,631

மகேந்திரன் (காங்கிரஸ்)...........................58,273

பயோடேட்டா

மொத்த வாக்காளர்கள் -2,45,258

ஆண்கள் -1,17,605

பெண்கள் -1,27,626

மூன்றாம் பாலினம் -27


Next Story