தொகுதி கண்ணோட்டம்: வந்தவாசி
வந்தவாசி தொகுதி பல்வேறு வரலாற்று சிறப்புகளை கொண்டதாகும்.
வந்தவாசி போர்
மன்னர்கள் கோட்டை கட்டி ஆண்டதும், 1760-ல் நடந்த போரில் ஆங்கிலேயர்கள் பிரெஞ்சுக்காரர்களை வெற்றி கொண்டு ஆங்கிலேய ஆதிக்கத்திற்கு அடிகோலியதும் வந்தவாசியில்தான் என்பது வரலாற்று நிகழ்வாகும். இந்த போர் வந்தவாசி கோட்டையை கைப்பற்ற நடந்த போராகும். ஆங்கிலத் தளபதி அயர் கூட் தலைமையிலான படை பிரெஞ்சு தளபதி தாமஸ் ஆர்தர் லாலி தலைமையிலான படையை தோற்கடித்தது. இதையடுத்து இந்தியாவில் பிரஞ்சுக்காரர்கள் வீழ்ச்சி அடைந்தனர். இந்த வெற்றி தான் ஆங்கிலேயர்களின் மாபெரும் வெற்றிக்கு வழி வகுத்தது. இதன் தொடர்ச்சியாகவே இந்தியாவை 187 ஆண்டுகள் ஆங்கிலேயர் கள் ஆட்சி செய்யும் நிலை உருவானது.
வந்தவாசி பகுதியில் பழமை வாய்ந்த கோவில்களும், ஜைன கோவில்களும், சீயமங்கலம் குகைக்கோவிலும் உள்ளன.இந்தத் தொகுதிக்கு உட்பட்ட வெண்குன்றம் கிராமத்தில் சுமார் 1,500 அடி உயரம் கொண்ட தவளகிரி மலை மீதுள்ள தவளகிரி ஈஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் கார்த்திகை தீபத் திருவிழா வெகு பிரசித்தி பெற்றதாகும். மேலும் தென்னாங்கூரில் உள்ள பாண்டுரங்கன் கோவில், மாம்பட்டு முத்து மாரியம்மன் கோவில் மற்றும் புகழ்பெற்ற மசூதிகள் தேவாலயங்கள் உள்ளன.
கோரைப்பாய்
பல வருடங்களாக பின்தங்கிய நிலையில் உள்ள இந்த தொகுதியில் மக்கள் விவசாயத்தையே பெரிதும் நம்பியுள்ளனர். விவசாயிகள், கைத்தறி நெசவாளர்கள், கோரைப்பாய் நெசவு தொழிலாளர்களும் நிறைந்த தொகுதியாகும் மற்றும் நெல், கரும்பு, நிலக்கடலை அதிகம் பயிரிடுகின்றனர். வந்தவாசி கோரைப்பாய் புகழ் பெற்றதாகும்.திருவண்ணாமலை மாவட்டத்தின் எல்லைப்பகுதியில் உள்ள இந்த தொகுதி இதுநாள் வரையிலும் தொழிற்சாலைகள், தொழிற்பேட்டைகள் இன்றி பின் தங்கியுள்ளது. வந்தவாசி தொகுதியை பொறுத்த வரையில் வன்னியர்களும், ஆதிதிராவிடர்களும் பெருமளவில் உள்ளனர். முதலியார்கள், முஸ்லிம்கள், ஜைனர்கள், நாயுடு, ரெட்டியார் மற்றும் இதர இனத்தவர்களும் உள்ளனர்.2011-ம் ஆண்டு தொகுதி சீரமைப்பில் பெரணமல்லூர் சட்டமன்ற தொகுதி கலைக்கப்பட்டதுடன் அந்த தொகுதியில் இருந்த கிராமங்கள் செய்யாறு, வந்தவாசி சட்டமன்ற தொகுதிகளில் சேர்க்கப்பட்டது.வந்தவாசி தொகுதியில் வந்தவாசி நகராட்சி, வந்தவாசி ஒன்றியம், தெள்ளார் ஒன்றியம், தேசூர் மற்றும் பெரணமல்லூர் ஆகிய பேரூராட்சிகள் உள்ளன.
280 வாக்குச்சாவடிகள்
கொரோனா தொற்று பரவல் காரணமாக தேர்தல் ஆணையத்தின் உத்தரவுபடி 1000-க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் நிறைந்த வாக்குச்சாவடிகள் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. இதனால் வந்தவாசி தொகுதியில் தற்போது 280 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.வந்தவாசி தொகுதி 1952-ம் ஆண்டும், 1957-ம் ஆண்டும் இரட்டை உறுப்பினர்களைக் கொண்ட பொதுத் தொகுதியாக இருந்தது. பின்னர் 1962-ல் தனித்தொகுதியாக மாற்றப்பட்டது.
தி.மு.க. 8 முறை வெற்றி
1962-க்கு பிறகு நடந்த தேர்தல்களில் தி.மு.க. ஒரு இடைத்தேர்தல் உள்பட 8 முறையும், அ.தி.மு.க. 4 முறையும், காங்கிரஸ், பா.ம.க. , தலா ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன.1962, 1967-ம் ஆண்டுகளில் நடந்த தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட எஸ்.முத்துலிங்கம் தொடர்ந்து 2 முறை வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட 1962-ல் காங்கிரசை சேர்ந்த தசரதன், 1967-ல் காங்கிரசை சேர்ந்த ஆதிமூலம் ஆகியோர் தோல்வி அடைந்தனர்.1971-ல் நடந்த தேர்தலில் தி.மு.க. சார்பில் வி.ராஜகோபால், ஸ்தாபன காங்கிரஸ் சார்பில் டி.தசரதன் ஆகியோர் போட்டியிட்டதில் ராஜகோபால் வெற்றி பெற்றார்.
1977-ம் ஆண்டு பி.முனுசாமி அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு தி.மு.க. சார்பில் போட்டியிட்ட சி.கன்னியப்பனை தோற்கடித்து வெற்றி பெற்றார். 1980-ல் நடந்த தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் சி.குப்புசாமியும், தி.மு.க. சார்பில் சி.கன்னியப்பனும் போட்டியிட்டனர். இதில் குப்புசாமி வெற்றி பெற்றார்.1984-ல் நடந்த தேர்தலில் அ.தி.மு.க., காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து காங்கிரஸ் கட்சிக்கு இத்தொகுதியை ஒதுக்கியது. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஏ.ஆறுமுகம், தி.மு.க. சார்பில் ராஜகோபால் போட்டியிட்டதில் ஆறுமுகம் வெற்றி பெற்றார்.
1989-ல் நடந்த தேர்தலில் தி.மு.க.வைச் சேர்ந்த டாக்டர் தன்ராஜ் வெற்றி பெற்றார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கோவிந்தன் தோல்வி அடைந்தார். 1991-ல் நடந்த தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் இந்திய குடியரசு கட்சியை சேர்ந்த செ.கு.தமிழரசன் போட்டியிட்டு தி.மு.க.சார்பில் போட்டியிட்ட ராஜகோபாலை தோற்கடித்தார். 1996-ல் நடந்த தேர்தலில் தி.மு.க. சார்பில் பாலஆனந்தனும், அ.தி.மு.க. சார்பில் வே.குணசீலனும் போட்டியிட்டதில் பாலஆனந்தன் வெற்றி பெற்றார்.
இடைத்தேர்தல்
2001-ல் அ.தி.மு.க. - பா.ம.க. கூட்டணியில், இந்த தொகுதி பா.ம.க.வுக்கு ஒதுக்கப்பட்டு அக்கட்சி சார்பில் முருகவேல்ராஜனும், தி.மு.க. சார்பில் கே.லோகநாதனும் போட்டியிட்டனர். இதில் முருகவேல் ராஜன் வெற்றி பெற்றார். 2006-ல் நடந்த தேர்தலில் தி.மு.க. சார்பில் ஜெயராமனும், அ.தி.மு.க. சார்பில் சக்கரபாணியும் போட்டியிட்டதில் ஜெயராமன் வெற்றி பெற்றார். பின்னர் ஜெயராமன் எம்.எல்.ஏ. உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்து போனதால் வந்தவாசி தொகுதிக்கு 2009-ல் இடைத்தேர்தல் நடந்தது. இதில் ஜெயராமனின் மகன் கமலக்கண்ணன் தி.மு.க. சார்பிலும், அ.தி.மு.க. சார்பில் முனுசாமியும்
போட்டியிட்டதில் கமலக்கண்ணன் வெற்றி பெற்றார்.2011-ல் நடந்த தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் வே.குணசீலனும், தி.மு.க. சார்பில் கமலக்கண்ணனும் போட்டியிட்டதில் வே.குணசீலன் வெற்றி பெற்றார். கடந்த 2016-ம் ஆண்டு எஸ்.அம்பேத்குமார் தி.மு.க. சார்பிலும், வி.மேகநாதன் அ.தி.மு.க. சார்பிலும் போட்டியிட்டனர். இதில் அம்பேத்குமார் வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆனார்.
தொழிற்பேட்டை
வந்தவாசி அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தொகுதியில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் போதிய டாக்டர்களை நியமிக்க வேண்டும். தெள்ளார் - கொடுங்காலூர் ஊராட்சிகளில் இயங்கி வரும் ஆரம்ப சுகாதார நிலையங்களை தரம் உயர்த்தி அரசு மருத்துவமனையாக மாற்ற வேண்டும். வந்தவாசி தொகுதியை பொது தொகுதியாக மாற்ற வேண்டும்.
வேலை வாய்ப்புகளை பெருக்குவதற் காகவும், பொருளாதாரம் மேம்படுவதற்கும் இந்தப் பகுதியில் சிப்காட் தொழிற்பேட்டை நிறுவ வேண்டும்.விவசாயிகள் நிறைந்த பகுதி என்பதால் விவசாய கல்லூரி, விவசாய ஆய்வு மையம் அமைக்க வேண்டும். வந்தவாசி தொகுதியில் நெசவாளர்கள் அதிகமாக உள்ளதால் நூற்பாலை அமைக்க வேண்டும்.
இப்பகுதியில் உள்ள பெரும்பாலான ஏரிகளை தூர் வார வேண்டும். மேலும் ஏரிப்பகுதிகள் சீரமைக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றவேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
பா.ம.க. -தி.மு.க. நேரடி போட்டி
நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் வந்தவாசி தொகுதி அ.தி.மு.க. கூட்டணி கட்சியான பா.ம.க.வுக்கு ஒதுக்கி உள்ளது. பா.ம.க. வேட்பாளராக எஸ்.முரளி சங்கர் போட்டியிடுகிறார். இவர் பாட்டாளி மாணவர் சங்கத்தின் மாநில செயலாளராக இருந்து வருகிறார். முதல் முறையாக இந்த தேர்தலில் போட்டியிடுகிறார். தி.மு.க. சார்பில் அம்பேத்குமார் எம்.எல்.ஏ. போட்டியிடுகிறார். இவர் கடந்த தேர்தலில் வந்தவாசி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். தற்போது திருவண்ணாமலை வடக்கு மாவட்ட தி.மு.க. மாணவர் அணி அமைப்பாளராக உள்ளார். மேலும் நாம் தமிழர் கட்சி சார்பில் பிரபாவதி போட்டியிடுகிறார்.
வெற்றியும், தோல்வியும்
வந்தவாசி சட்டசபை தொகுதியில் இதுவரை நடந்த தேர்தல் முடிவுகள் வருமாறு:-
1962 - தி.மு.க. வெற்றி:-
எஸ்.முத்துலிங்கம் (தி.மு.க.) - 34,922
டி.தசரதன் (காங்.) - 19,160
1967 - தி.மு.க. வெற்றி :-
எஸ்.முத்துலிங்கம் (தி.மு.க.) - 38,626
ஆதிமூலம் (காங்.) -21,300
1971- தி.மு.க. வெற்றி :-
வி.ராஜகோபால் (தி.மு.க.) -41,452
தசரதன் (ஸ்தாபன காங்.) - 23,465
1977 - அ.தி.மு.க. வெற்றி :-
பி.முனுசாமி (அ.தி.மு.க.) - 28,306
சி.கன்னியப்பன் (தி.மு.க.) - 26,476
1980 -அ. தி.மு.க. வெற்றி:-
சி.குப்புசாமி (அ.தி.மு.க.) - 38,501
சி.கன்னியப்பன் (தி.மு.க.) - 36,019
1984 - காங்கிரஸ் வெற்றி:-
ஏ.ஆறுமுகம் (காங்.) - 48,712
வி.ராஜகோபால் (தி.மு.க.) - 35,326
1989 - தி.மு.க. வெற்றி:-
வி.தன்ராஜ் (தி.மு.க.) -35,264
டி.எஸ்.கோவிந்தன் (காங்.) - 21,176
1991 - அ.தி.மு.க. வெற்றி :-
செ.கு.தமிழரசன் (அ.தி.மு.க.) -55,990
வி.ராஜகோபால் (தி.மு.க.) - 26,496
1996 - தி.மு.க. வெற்றி :-
பாலஆனந்தன் (தி.மு.க.) -65,775
வே.குணசீலன் (அ.தி.மு.க.) - 26,029
2001 - பா.ம.க. வெற்றி :-
முருகவேல்ராஜன் (பா.ம.க.) - 55,773
கே.லோகநாதன் (தி.மு.க.) - 46,902
2006 - தி.மு.க. வெற்றி:-
எஸ்.பி.ஜெயராமன் (தி.மு.க.) -65,762
சக்கரபாணி (அ.தி.மு.க.) - 42,974
2009 - (இடைத்தேர்தல்) தி.மு.க. வெற்றி:-
கமலக்கண்ணன் (தி.மு.க.) - 78,827
முனுசாமி (அ.தி.மு.க.) - 40,810
2011 - அ.தி.மு.க. வெற்றி :-
வே.குணசீலன் (அ.தி.மு.க.) - 84,529
கமலக்கண்ணன் (தி.மு.க.) - 72,233
2016- தி.மு.க. வெற்றி :-
எஸ்.அம்பேத்குமார் (தி.மு.க.) -84,529
வி.மேகநாதன் (அ.தி.மு.க.) -62,138
பயோடேட்டா
மொத்த வாக்காளர்கள் -2,39,670
ஆண்கள் -1,18,230
பெண்கள் -1,21,439
மூன்றாம் பாலினம் -1
Related Tags :
Next Story