தொகுதி கண்ணோட்டம்: அரியலூர்
அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட கட்டிடக்கலையின் பெருமையாக விளங்கும் பிரகதீஸ்வரர் ஆலயம் உள்ளது.
கடலாக இருந்து நிலமாக மாறியதால் கடல் வாழ் உயிரினங்கள் சுண்ணாம்பு கற்களாக மாறி புவி இயல் ஆய்வாளர்களுக்கு சொர்க்க பூமியாக உள்ளது. இந்தியாவிலேயே அரியலூர் மாவட்டத்தில்தான் 8 சிமெண்டு ஆலைகள் உள்ளன. சின்ன திருப்பதி என்று அழைக்கப்படும் கல்லங்குறிச்சி கலியுக வரதராஜ பெருமாள் கோவில், வீரமாமுனிவரால் உருவாக்கப்பட்ட ஏலாக்குறிச்சி மாதா கோவில், திருமழபாடி ஸ்ரீ வைத்தியநாத சுவாமி கோவில், மேலப்பழுவூர் இரட்டைகோவில் என சோழர் கால கோவில்கள் உள்ளன. தெற்கே கொள்ளிடமும், வடக்கே வெள்ளாறு ஓடும் இந்த மாவட்டத்தில் நெல்,
கரும்பு, முந்திரி, கடலை பயிர்கள் விளைவிக்கப்படுகின்றன.
அரியலூர் மாவட்டத்தில் அரியலூர், ஜெயங்கொண்டம் ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. அரியலூர் சட்டமன்ற தொகுதியில் அரியலூர், திருமானூர் ஆகிய 2 ஒன்றியங்களும், தா.பழூர், ஜெயங்கொண்டம் ஒன்றியங்களை சேர்ந்த 20 ஊராட்சிகளும் உள்ளன. இந்த தொகுதியில் வன்னியர், உடையார், மூப்பனார், பட்டியலினத்தவர் சம அளவில் உள்ளனர்.
இந்த தொகுதியில் கொள்ளிடம் ஆற்றில் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டும். தஞ்சை -அரியலூர் மாவட்டத்தை இணைக்கும் கொள்ளிடம் ஆற்றில் போக்குவரத்து அதிகமாக உள்ள தால் புதிய பாலம் கட்ட வேண்டும், சிமெண்டு ஆலைகளுக்கு சுண்ணாம்புக் கல் ஏற்றிவரும் லாரிகளால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு பலர் உயிரிழக்கின்றனர். அந்த வாகனங்கள் செல்வதற்கு என்று வி.கைகாட்டி பகுதியில் இருந்து சிமெண்டு ஆலைகள் வரை தனி சாலை அமைக்க வேண்டும். அரியலூர் மாவட்டம் உருவாகி 10 ஆண்டுகளுக்கு மேலாகியும் பல அலுவலகங்கள் பெரம்பலூரில் செயல்பட்டு வருகிறது.
அவற்றை பிரித்து அரியலூரில் சேர்க்க வேண்டும். இத்தொகுதியில் குலமாணிக்கம் கிராமத்தில் இருந்து தா.பழுர் வரை கொள்ளிடக் கரையை பலப்படுத்தி சாலைகள் அமைக்க வேண்டும். அரியலூர் நகராட்சி எல்லையை விரிவுப்படுத்தி புதிய பஸ் நிலையம் கட்ட வேண்டும். ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைக்க வேண்டும். ரெயில்வே மேம்பால பணிகள் முடிந்து விட்டன. ஆனால் அணுகு சாலை அமைக்கப்படவில்லை. இதுபோன்ற பல கோரிக்கைகள் தொகுதியில் உள்ளன.
இத்தொகுதியில் கடந்த 2016-ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.சார்பில் தாமரை.ராஜேந்திரனும், தி.மு.க.சார்பில் சிவசங்கரும் போட்டியிட்டனர். இதில் தாமரை. ராஜேந்திரன், சிவசங்கரை விட 2 ஆயிரத்து 401 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார். தற்போது, அவர் அரசு தலைமை கொறடாவாக உள்ளார்.
ஐந்து முனை போட்டி
இந்தநிலையில் நடைபெற உள்ள 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட தி.மு.க.கூட்டணி சார்பில் இத்தொகுதி ம.தி.மு.க.வுக்கு ஒதுக் கப்பட்டு சின்னப்பா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
அ.தி.மு.க.சார்பில் தற்போதைய எம்.எல்.ஏ. தாமரை.ராஜேந்திரன் மீண்டும் போட்டியிடுகிறார். அ.ம.மு.க.சார்பில் துரைமணிவேல், நாம் தமிழர் கட்சி சார்பில் சுகுணா ஆகியோர் களம் காண்கிறார்கள்.
இந்திய ஜனநாயக கட்சியும் இத்தொகுதியில் போட்டியிடுகிறது. இதனால் இத்தொகுதியில் ஐந்து முனை போட்டி ஏற்பட்டுள்ளது.
பயோடேட்டா
மொத்த வாக்காளர்கள் -2,64,012
ஆண்கள் -1,31,335
பெண்கள் -1,32,670
மூன்றாம் பாலினம் -7
Related Tags :
Next Story