தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் 13 பேரை கொலை செய்த கூட்டத்திற்கு தேர்தலில் பாடம் புகட்ட வேண்டாமா?- மு.க.ஸ்டாலின் பிரசாரம்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் 13 பேரை கொலை செய்த கூட்டத்திற்கு தேர்தலில் பாடம் புகட்ட வேண்டாமா? என்று மு.க.ஸ்டாலின் பேசினார்.
சென்னை
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடியில் இன்று பிரசாரம் மேற்கொண்டார். தூத்துக்குடி-கீதாஜீவன், திருச்செந்தூர்-அனிதா ராதாகிருஷ்ணன், ஒட்டப்பிடாரம்-சண்முகைய்யா, விளாத்திகுளம்-மார்க்கண்டேயன், ஸ்ரீவைகுண்டம்-காங்கிரஸ் வேட்பாளர் அமிர்தராஜ், கோவில்பட்டி-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளர் சீனிவாசன் ஆகியோரை ஆதரித்து மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
கோவில்பட்டியில் நம்மை எதிர்த்து நிற்கும் வேட்பாளர் யார் என்பது உங்களுக்குத் தெரியும். அவர் எந்தக் காலத்திலும் வெற்றி பெறக்கூடாது என்பது மட்டுமல்ல, அவர் டெபாசிட் தொகை பறிபோகும் அளவிற்கு நம்முடைய வெற்றி அமைய வேண்டும் என்று நான் உங்களையெல்லாம் கேட்டுக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன். மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர்களை வெற்றி பெற வைக்க வேண்டும் என்று கேட்கின்ற அதே நேரத்தில் நானும் உங்களிடத்தில் வேட்பாளராக வாக்கு கேட்க வந்திருக்கிறேன். நான் கொளத்தூர் தொகுதிக்கு மட்டுமல்ல, தமிழ் நாட்டிற்கே நான் வேட்பாளர். இவர்கள் வெற்றி
பெற்றால் தான் நான் முதல்-அமைச்சர். மறந்துவிடாதீர்கள்.
பச்சை படுகொலை
இதே தூத்துக்குடியில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட கொடுமை. அதை இன்றைக்கு நினைத்தாலும் நெஞ்சு துடிக்கிறது. கண்களில் ரத்தக் கண்ணீர் வருகிறது. 13
பேரை காக்கை குருவிகளைப் போல சுட்டுத் தள்ளினார்கள். நச்சு ஆலையாக மாறி விட்ட ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அமைதி வழியில் - காந்திய வழியில் -
அறவழியில் அந்த வட்டாரத்தில் இருக்கும் மக்கள் ஒன்று திரண்டு போராடினார்கள். கலெக்டர் மனுக்களை வாங்கியிருந்தால் அப்படிப்பட்ட ஒரு கொடுமையான சம்பவம் நடைபெறுவதற்கு வாய்ப்பே இருந்திருக்காது. ஆனால் கலெக்டர் வெளியூருக்குச் சென்று விட்டார். அதைப் பயன்படுத்தி திட்டமிட்டு மத்திய பா.ஜ.க. அரசும் - மாநில அரசும் சேர்ந்து ஒரு பயங்கரமான துப்பாக்கிச் சூட்டை நடத்தின. அதனுடைய பின்னணி என்ன? பா.ஜ.க.வும் – அ.தி.மு.க.வும் கூட்டு சேர்ந்து நடத்திய பச்சைப் படுகொலை தான் அது.
ஸ்னோலின் என்ற 17 வயது பெண் நடந்து வரும் போது சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார். காளியப்பன் என்ற 22 வயது இளைஞரை சுட்ட காட்சியை அருகில் இருந்து சுற்றி வேடிக்கை பார்த்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வந்தது. இப்படி எல்லாம் கொடுமை நடந்தது. இதற்கெல்லாம் அவர்களுக்கு தண்டனை கொடுக்கப்பட்டதா? இதுவரையில் இல்லை.
13 பேரை கொலை செய்த கூட்டத்திற்கு இந்த தேர்தலில் நாம் பாடம் புகட்ட வேண்டுமா? வேண்டாமா? இப்படிப்பட்ட அக்கிரமத்திற்கு நாம் பதில் தர வேண்டுமா? வேண்டாமா?. நான் கேட்கிறேன். இவர்கள் என்ன தவறு செய்தார்கள்? ஊர்வலம் சென்றது தவறா? அமைதியாகப் பேரணியை நடத்தியதை தவறா? ஆட்சித் தலைவரை சந்தித்து மனு கொடுக்க வேண்டும் என்று எண்ணியது தவறா? எனவே இப்படிப்பட்ட பாவத்தைச் செய்திருக்கும் இந்த ஆட்சிக்கு நாம் பாடம் புகட்ட வேண்டுமா? வேண்டாமா?.
இவ்வாறு துப்பாக்கிச்சூட்டில் பலியானோர் குடும்பத்திற்கு அரசு வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தரும் என்ற ஒரு அறிவிப்பை வெளியிட்டு வேலைவாய்ப்பு கொடுத்தார்கள். எப்படிப்பட்ட வேலை என்றால் படித்த பட்டதாரிகளாக இருப்பவர்களுக்கு தகுதியற்ற வேலைகளைக் கொடுத்திருக்கிறார்கள். இப்போது நான் சொல்கிறேன். நாம் தான் ஆட்சிக்கு வரப் போகிறோம். அதில் எள்ளளவும் சந்தேகமில்லை. எனவே அவர்களுக்கு தகுதிக்குரிய வேலை நிச்சயமாக நம்முடைய ஆட்சியில் வழங்கப்படும் என்ற உறுதியை நான் இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன்.
ஒருநபர் விசாரணை கமிஷனை அமைத்தது. அது அமைக்கப்பட்டு மூன்று வருடம் ஆகிவிட்டது. இதுவரையில் அந்த ஆணையம் அறிக்கை கொடுக்கவில்லை. எனவே 2 ஆட்சியும் கைகோர்த்துக்கொண்டு இந்த தேர்தலில் வலம் வருகிறார்கள். அப்படி வலம் வரும் அவர்களுக்குப் பாடம் புகட்ட வேண்டுமா? வேண்டாமா? அதற்கு அடுத்த கொடுமை சாத்தான்குளம். சாத்தான்குளம் காவல் நிலைய லாக்கப்பில் ஜெயராஜ், பெனிக்ஸ் என்ற அப்பாவையும் மகனையும் அடித்தே கொன்றிருக்கிறார்கள்.
கடம்பூர் ராஜூ தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களில் கூட்டு குடிநீர் திட்டம் கொண்டு வருவோம் என்று அறிவித்தார். இதுவரையில் வரவில்லை. இப்போது பதவி
முடிகின்ற நேரத்தில் நர்சிங் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டி இருக்கிறார். கடம்பூர் ராஜூவிடம் கோவில்பட்டி போல புதிதாக ஒரு ஊரை உருவாக்கும் அளவிற்கு பணம் இருக்கிறது. அவ்வளவு கொள்ளையடித்து வைத்திருக்கிறார்.
தூத்துக்குடி மாநகரத்தில் மழை நீரை வெளியேற்ற நிரந்தர திட்டம் வகுக்க ஆவன செய்யப்படும், தாமிரபரண-கன்னடியன் கால்வாய், நம்பியாறு, வெள்ளநீர், கருமேனியாறு கால்வாய், வைரவ தருவி, புத்தன் தருவி ஆகியன இணைக்கப்பட்டு நீர்ப்பாசன வசதிகள் பெருக்க நடவடிக்கை எடுக்கப்படும். இது ஆட்சி மாற்றத்திற்கான தேர்தல் மட்டுமல்ல, நம்முடைய சுய மரியாதையை காப்பாற்றுவதற்காக நடக்கின்ற தேர்தல் என்பதை மறந்துவிடாதீர்கள். இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :
Next Story