சட்டசபை தேர்தலில் சென்னையில் வசிக்கும் வட மாநிலத்தவர்களின் வாக்கு யாருக்கு?
சட்டசபை தேர்தலில் சென்னையில் வசிக்கும் தமிழ் தாய்மொழி அல்லாத வட மாநிலத்தவர்களின் வாக்கு யாருக்கு? என்பது குறித்து அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
சென்னை,
தலைநகர் சென்னை வந்தாரை வாழவைக்கும் சிங்கார சென்னையாக திகழ்கிறது. தொடக்கத்தில் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து பிழைப்புக்காக சென்னைக்கு ஏராளமானோர் படையெடுத்தனர். தற்போது வெளி மாநிலங்களில் இருந்து குறிப்பாக குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட வட மாநிலங்களில் இருந்து பலரும் சென்னைக்கு வந்த வண்ணம் இருக்கிறார்கள். தமிழகத்தை சேர்ந்தவர்கள், தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட அடையாள ஆவணங்களை பெறுவது சிம்ம சொப்பனமாக திகழ்கிறது.
ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்பு குடியேறிய வட மாநிலத்தவர்களோ வாக்குரிமை, ஆதார் கார்டு, லைசென்சு, ரேஷன் கார்டு உள்ளிட்ட அரசின் அடையாள ஆவணங்களை பெற்று, தற்போது பூர்வீக சென்னைவாசிகளாகவே மாறி விட்டார்கள். சென்னை நகரின் பல இடங்களில் வியாபாரத்தில் ஈடுபட்டு வரும் தமிழ் தாய்மொழி அல்லாத வட மாநிலத்தவர்களின் நாவில் சென்னை தமிழ் நாட்டியம் ஆடுவதை காணமுடிகிறது. வேறுபடுத்தி பார்க்க முடியாத அளவுக்கு அவர்களிடம் தமிழ் உச்சரிப்பும் நளினமாக இருக்கிறது.
வட மாநிலத்தவர்களின் வாக்கு யாருக்கு?
சென்னையில் உள்ள துறைமுகம், எழும்பூர், பெரம்பூர், வேளச்சேரி, மாதவரம், தாம்பரம் மற்றும் அண்ணாநகர் சட்டசபை தொகுதிகளில் வாக்குரிமை பெற்ற வட மாநிலத்தவர்கள் கணிசமாக வசிக்கிறார்கள். அவர்களுடைய வாக்குகள், வேட்பாளர்களின் வெற்றி-தோல்விக்கு குறிப்பிட்ட அளவிலான தாக்கத்தை கொடுப்பதாக இருக்கும். துறைமுகம் தொகுதியில் குறைந்தது 30 ஆயிரம் பேரும், பெரம்பூர் தொகுதியில் குறைந்தது 20 ஆயிரம் பேரும், அண்ணாநகர் தொகுதியில் குறைந்தது 15 ஆயிரம் பேரும் தமிழ் தாய்மொழி அல்லாத ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட வடமாநிலங்களை சேர்ந்த வாக்காளர்கள் இருக்கிறார்கள்.
சென்னையில் வசிக்கும் தமிழ் பேசாத வாக்காளர்கள் தமிழக சட்டசபை தேர்தலில் யாருக்கு வாக்களிப்போம்? என்பது குறித்து இரண்டுவிதமான கருத்துகளை தெரிவித்துள்ளனர். ராமர் கோவில் கட்டுதல், இந்தியாவை இந்து தேசமாக மாற்றுவோம் உள்ளிட்ட பா.ஜ.க.வின் வாக்குறுதிகளால் ஈர்க்கப்பட்ட வட மாநிலங்களை சேர்ந்தவர்கள் பெரும்பாலானோர் பா.ஜ.க. இடம் பெற்றிருக்கும் அ.தி.மு.க. கூட்டணிக்கு வாக்களிப்போம் என்று கருத்து தெரிவித்துள்ளனர். இதனால் துறைமுகம் தொகுதியில் வட மாநிலத்தவர்களின் வாக்குகளை பெறுவதற்காக பா.ஜ.க. தீவிரம் காட்டி வருகிறது.
தேசிய கட்சிகளுக்கு சராசரியான வாக்குகள்
வாக்குரிமை பெற்று சென்னையில் வசிக்கும் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர்கள் தேர்தலில் அதிகமாக வாக்களிக்கவேண்டும் என்பதை வலியுறுத்தி கடந்த சில தேர்தல்களைப்போல முகாம்களை நடத்தி வருகிறார்கள். இது ஒரு புறம் இருக்க பா.ஜ.க.வை தவிர்த்து பிற கட்சிகளுக்கும், தி.மு.க. கூட்டணிக்கும் தமிழ் அல்லாத வட மாநிலத்தவர்கள் இடையே ஆதரவு இருக்கிறது.
இதுகுறித்து அகில இந்திய எஸ்.எஸ்.ஜெயின் கூட்டமைப்பின் முன்னாள் தேசிய துணைத் தலைவர் அசோக் லோதா கூறுகையில், “முன்னதாக பா.ஜ.க. அலை இருந்தது. தற்போது எங்கள் சமூகத்தினரிடையே பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய கட்சிகளுக்கு சராசரியான வாக்குகள் இருக்கிறது” என்றார். துறைமுகம் தொகுதியில் குஜராத் மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தவர்களின் ஆதரவு பா.ஜ.க.வுக்கு இருக்கிறது என்பதை அந்த தொகுதியின் தி.மு.க. எம்.எல்.ஏ.வும், மீண்டும் அந்த கட்சி சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருக்கும் சேகர் பாபு மறுத்துள்ளார்.
இதுகுறித்து சேகர் பாபு எம்.எல்.ஏ. கூறுகையில், “தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு என பாரம்பரியமான வாக்கு வங்கி துறைமுகம் தொகுதியில் இருக்கிறது. பணமதிப்பு நீக்க நடவடிக்கை, ஜி.எஸ்.டி. அமல்படுத்தியது போன்ற வட மாநிலத்தவர்களின் வியாபாரத்தை பாதித்த மோசமான கொள்கைகளால் 2016-ம் ஆண்டு இருந்த மோடி அலை தற்போது மங்கிவிட்டது” என்றார்.
Related Tags :
Next Story