வாக்குப்பதிவுக்கு 72 மணி நேரத்துக்கு முன் இருசக்கர வாகன பேரணிக்கு தடை - தேர்தல் கமிஷன் உத்தரவு


வாக்குப்பதிவுக்கு 72 மணி நேரத்துக்கு முன் இருசக்கர வாகன பேரணிக்கு தடை - தேர்தல் கமிஷன் உத்தரவு
x
தினத்தந்தி 23 March 2021 7:20 AM IST (Updated: 23 March 2021 7:20 AM IST)
t-max-icont-min-icon

தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் வாக்குப்பதிவுக்கு 72 மணி நேரத்துக்கு முன் இருசக்கர வாகன பேரணி நடத்துவதற்கு தேர்தல் கமிஷன் தடை விதித்துள்ளது.

புதுடெல்லி, 

தமிழ்நாடு, கேரளா, பாண்டிச்சேரி, மேற்கு வங்காளம் மற்றும் அசாம் ஆகிய 5 மாநிலங்களில் வருகிற 27-ந்தேதி முதல் சட்டசபை தேர்தல்கள் நடக்கின்றன. இந்த தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அனைத்தும் மே 2-ந்தேதி எண்ணப்படுகின்றன. இதனால் மேற்படி 5 மாநிலங்களிலும் தேர்தல் களம் சூடுபிடித்து உள்ளது. அரசியல் கட்சிகள் போட்டிபோட்டு தேர்தல் பிரசாரங்களிலும், வாக்கு சேகரிப்பிலும் ஈடுபட்டு வருகின்றன.

இது ஒருபுறம் இருக்க, இந்த தேர்தலை முன்னிட்டு பல இடங்களில் இரு சக்கர வாகன பேரணிகள் நடத்தி வாக்காளர்களிடையே அச்ச உணர்வை ஏற்படுத்த சிலர் திட்டமிட்டு வருவதாக தேர்தல் கமிஷனுக்கு புகார்கள் சென்றுள்ளன.

இதைத்தொடர்ந்து தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் இரு சக்கர வாகன பேரணிகளுக்கு தேர்தல் கமிஷன் தடை விதித்துள்ளது. இது தொடர்பாக மேற்படி 5 மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு தலைமை தேர்தல் கமிஷன் வழிகாட்டுதல்களை வழங்கி இருக்கின்றன.

அந்த உத்தரவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் சில பகுதிகளில் வாக்காளர்களை அச்சுறுத்துவதற்காக வாக்குப்பதிவுக்கு முந்தைய அல்லது வாக்குப்பதிவு நாட்களில் சமூக விரோத சக்திகள் இருசக்கர வாகன பேரணி நடத்துவதாக தகவல்கள் வந்துள்ளன.

இந்த தகவல்களை பரிசீலித்ததன் அடிப்படையில், தேர்தல் நடைபெறும் தொகுதிகளின் எந்த பகுதியிலும் வாக்குப்பதிவுக்கு 72 மணி நேரத்துக்கு முன்னரோ அல்லது வாக்குப்பதிவு தினத்திலோ இரு சக்கர வாகன பேரணி நடத்துவதற்கு தடை விதிக்க தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது.

எனவே இந்த தகவலை வேட்பாளர்கள், அரசியல் கட்சிகள் மற்றும் தேர்தல் பார்வையாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் தெரிவித்து, தேர்தல் கமிஷனின் இந்த உத்தரவு தீவிரமாக கடைப்பிடிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு தேர்தல் கமிஷன் அந்த உத்தரவில் கூறியுள்ளது.

Next Story