தொகுதி கண்ணோட்டம்: முதுகுளத்தூர்


தொகுதி கண்ணோட்டம்: முதுகுளத்தூர்
x
தினத்தந்தி 23 March 2021 4:04 PM GMT (Updated: 23 March 2021 4:04 PM GMT)

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் போட்டியிட்ட தொகுதி என்ற சிறப்பு முதுகுளத்தூர் தொகுதிக்கு உள்ளது. பல்வேறு ஆன்மிக தலங்களையும் உள்ளடக்கியது.

இரட்டை உறுப்பினர் தொகுதிகள்
இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு 1952-ம் ஆண்டு முதல் பொதுத்தேர்தல் நடைபெற்றது. அந்்த தேர்தலில் 66 இரட்டை உறுப்பினர் தொகுதிகளும் இடம் பெற்றன. இதில் 62 இரட்டை உறுப்பினர் தொகுதிகளில் தலா ஒரு இடம் ஆதிதிராவிடர் வகுப்பினருக்கும், 4 இரட்டை உறுப்பினர் தொகுதிகளில் தலா ஒரு இடம் பழங்குடியினருக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டன.இதில் முதுகுளத்தூர் தொகுதி, இரட்டை உறுப்பினர் தொகுதியின் கீழ் இடம் பெற்று இருந்தது. இதுபோன்று 1957-ல் நடந்த சட்டசபை தேர்தலிலும் முதுகுளத்தூர் தொகுதி மக்கள், இரட்டை வாக்குரிமை பெற்று வாக்களித்து 2 உறுப்பினர்களை தேர்ந்தெடுத்தனர்.1952 தேர்தலில் பார்வர்டு பிளாக் சார்பில் போட்டியிட்ட பசும்பொன் முத்துராமலிங்க தேவரும், மொட்டைய குடும்பனும் வெற்றிபெற்றனர். 1957-ல் சுயேச்சையாக பசும்பொன் முத்துராமலிங்க தேவரும், பெருமாளும் வெற்றிபெற்றனர். பின்னர் 1961-ல் இரட்டை உறுப்பினர் தொகுதி முறை நீக்கப்பட்டு, முதுகுளத்தூர் தொகுதி தேர்தல்களை சந்தித்து 
வருகிறது.

வெற்றி பெற்றவர்கள்
1971-ல் காதர் பாட்சா வெள்ளைச்சாமி (சுயேச்சை), 1977-ல் பாலகிருஷ்ணன் (காங்கிரஸ்), 1980 தனிக்கொடி தேவர் (சுயேச்சை), 1984-ல் முத்துவேல் (சுயேச்சை), 1989-ல் காதர் பாட்சா என்ற வெள்ளைச்சாமி (தி.மு.க.), 1991-ல் சோ.பாலகிருஷ்ணன் (காங்கிரஸ்), 1996-ல் சோ.பாலகிருஷ்ணன் (த.மா.கா.), 2001-ல் பதினெட்டாம் படியான் (அ.தி.மு.க.), 2006-ல் முருகவேல் (தி.மு.க.), 2011-ல் முருகன் (அ.தி.மு.க.), 2016-ல் மலேசியா பாண்டியன் (காங்கிரஸ்) ஆகியோர் இந்த தொகுதியில் வெற்றி பெற்றுள்ளனர்.

கடந்த 2016-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் வேட்பாளர்கள் வாங்கிய ஓட்டுகள் வருமாறு:-

மலேசியா பாண்டியன் (காங்கிரஸ்) 94,946

கீர்த்திகா முனியசாமி (அ.தி.மு.க.) 81,598

ராஜ்குமார் (ம.தி.மு.க.) 8,800

பி.டி.அரசகுமார் (பா.ஜ.க.) 5,408,

போராட்டங்கள்

தொகுதிகளை மறுசீரமைக்கும்போது முதுகுளத்தூர் தொகுதி நீக்கப்பட்டது. ஆனால் இப்பகுதி, மக்களும் வியாபாரிகளும், பசும்பொன் முத்துராமலிங்க தேவர் போட்டியிட்ட தொகுதியை நீக்கக் கூடாது என பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.இதனையடுத்து தேர்தல் ஆணையம், கடலாடி சட்டப்பேரவை தொகுதியை நீக்கி முதுகுளத்தூர் மற்றும் ராமநாதபுரம் தொகுதிகளுடன் இணைத்தது. முதுகுளத்தூர் தொகுதியில் கமுதி, கடலாடி, முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. முதுகுளத்தூர் பேரூராட்சி, கமுதி பேரூராட்சி, சாயல்குடி பேரூராட்சியும் உள்ளன.

கோரிக்கைகள்
இத்தொகுதியில் முக்கிய தொழில் என்றால் விவசாயம் தான். ஆனால் வறட்சி மிகப்பெரும் பிரச்சினையாக உள்ளது. வேலைவாய்ப்பு வழங்கக்கூடிய தொழிற்சாலைகளும், சிறு தொழில்களும் இங்கு இல்லை. இங்கு 3 அரசு கல்லூரிகள் உள்ளன.முதுகுளத்தூர் தொகுதியில் உள்ள ஊராட்சிகளில் குடிநீர் பிரச்சினை அதிகம் உள்ளது. இந்த தொகுதியில் நெல், பருத்தி, மிளகாய் சாகுபடி அதிகம் நடைபெறுகிறது. இங்கு சீமைக்கருவேல மரம் வெட்டும் தொழிலும் நடைபெறுகிறது.

இந்த தொகுதியில் கமுதி அருகே உள்ள புதுக்கோட்டை கிராமத்தில் உலகிலேயே மிகப்பெரிய 648 மெகாவாட் மின் திறன் கொண்ட 5000 ஏக்கர் பரப்பளவில் சோலார் பவர் பிளான்ட் அமைந்துள்ளது. இந்த தொகுதியில் சாயல்குடி அருகே உள்ள மூக்கையூர் கடற்கரை கிராமத்தில் துறைமுகம் அமைக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. முதுகுளத்தூர் வழியாக புறவழிச்சாலை அமைக்க வேண்டும். 

முதுகுளத்தூரில் பாதாள சாக்கடை திட்டம் கொண்டுவர வேண்டும், குடிநீர் வினியோகத்தை விரிவுபடுத்த வேண்டும், முதுகுளத்தூர், கமுதி, கடலாடி ஆகிய ஊர்களில் அரசு மருத்துவமனையில் பற்றாக்குறையாக உள்ள டாக்டர்கள், செவிலியர்களை நியமிக்க வேண்டும். முதுகுளத்தூர் தொகுதியில் உள்ள அரசு கல்லூரிகளில் கூடுதல் பாடப்பிரிவு மற்றும் உயர்கல்வி பாடப்பிரிவுகள் கொண்டுவர வேண்டும். முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தபடி, கமுதியை தலைமையாகக்கொண்டு தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்டவை இந்த தொகுதியின் பிரதான கோரிக்கைகள்.


பயோடேட்டா

மொத்த வாக்காளர்கள் -3,89,012

ஆண்கள் -1,84,536

பெண்கள் -1,54,367

மூன்றாம் பாலினம் - 9


Next Story