"அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கான சின்னங்களை கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஒதுக்க தடை விதிக்க முடியாது" - உயர்நீதிமன்றம் உத்தரவு
அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கான சின்னங்களை கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஒதுக்க தடை விதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கான சின்னங்களை கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஒதுக்க தடை விதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கக்கூடிய கூட்டணி கட்சி வேட்பாளர்கள் 14 பேர் திமுகவின் சின்னமான உதயசூரியன் சின்னத்திலும், அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கக்கூடிய கூட்டணி கட்சி வேட்பாளர்கள் 12 பேர் அதிமுகவின் சின்னமான இரட்டைஇலை சின்னத்திலும் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுடைய சின்னங்களில் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் போட்டியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் திருச்செந்தூரை சேர்ந்த வழக்கறிஞர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்திருந்தார்.
அவர் தனது மனுவில், தேர்தல் சின்னங்கள் ஒதுக்கீட்டு உத்தரவுபடி, அங்கீகரிக்கப்பட்ட கட்சியின் சின்னங்களில் அக்கட்சியில் உறுப்பினராக உள்ளவர் மட்டுமே போட்டியிட முடியும் எனவும் மாற்றுக்கட்சியை சேர்ந்தவர்கள் போட்டியிட முடியாது எனவும் தெரிவித்துள்ளார். இருப்பினும், கூட்டணி கட்சி சின்னத்தில் தோழமைகட்சி போட்டியிடுவதாக வேட்பாளர் தாக்கல் செய்த வேட்புமனுவை நிராகரிக்காமல் தேர்தல் அதிகாரிகள் வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வதாகவும் அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.
இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி தலைமையிலான அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சின்னங்கள் ஒதுக்கீட்டு உத்தரவின்படி கூட்டணி கட்சிகளின் சின்னங்களில் பதிவு செய்யப்படாத கட்சி வேட்பாளர்கள் போட்டியிடுவதை அங்கீகரிக்கவில்லை என்று தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் தற்போதைய தேர்தலை பொறுத்தவரை வேட்பாளர்கள் இறுதிப்பட்டியல் வெளியிடப்பட்டு சின்னங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுவிட்டாதால் இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் இருப்பதாகவும் தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தேர்தல் ஆணையத்தின் விளக்கத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் இந்த வழக்கை பொறுத்தவரை தற்போதைக்கு எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என கூறி அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கான சின்னங்களை கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஒதுக்க தடை விதிக்க முடியாது என உத்தரவிட்டனர்.
மேலும், இந்த மனுவுக்கு பதிலளிக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டு விசாரணையை கோடை விடுமுறைக்கு பிறகு தள்ளிவைத்தனர். அதேபோல ஏற்கனவே நிலுவையில் உள்ள வழக்கை இந்த வழக்குடன் இணைத்து பட்டியலிடவும் நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
கோடை விடுமுறைக்கு பின்னர் இந்த வழக்கு தொடர்பாக தேர்தல் ஆணையம் பதில் மனுவை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
Related Tags :
Next Story