சேலத்தில் 28-ந் தேதி பொதுக்கூட்டம் மு.க.ஸ்டாலின்-ராகுல்காந்தி ஒரே மேடையில் பிரசாரம்


சேலத்தில் 28-ந் தேதி பொதுக்கூட்டம் மு.க.ஸ்டாலின்-ராகுல்காந்தி ஒரே மேடையில் பிரசாரம்
x
தினத்தந்தி 25 March 2021 6:22 AM IST (Updated: 25 March 2021 6:22 AM IST)
t-max-icont-min-icon

சேலம் சீலநாயக்கன்பட்டியில் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசார பொதுக்கூட்டம் 28-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இந்த கூட்டத்தில் மு.க.ஸ்டாலின், ராகுல்காந்தி மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கிறார்கள்.

சென்னை,

தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந் தேதி நடக்கிறது. தேர்தலுக்கு இன்னும் 11 நாட்களே உள்ள நிலையில் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது.

அனைத்து கட்சி தலைவர்களும் தமிழகம் முழுவதும் பம்பரமாக சுழன்று தங்கள் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி வருகிறார்கள்.

கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேசிய கட்சிகளின் தலைவர்களும் டெல்லியில் இருந்து தமிழகம் வந்து சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பொதுக்கூட்டம்

தி.மு.க. தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து சேலம்-உளுந்தூர்பேட்டை சாலையில் உள்ள சீலநாயக்கன்பட்டியில் 28-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணிக்கு தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடக்கிறது.

இந்த கூட்டத்துக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்குகிறார். அகில இந்திய காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி சிறப்புரையாற்றுகிறார்.

கூட்டணி கட்சி தலைவர்கள்

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் கே.எம்.காதர்முகைதீன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா.

தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன், அகில இந்திய பார்வர்டு பிளாக் மாநில பொதுச்செயலாளர் பி.வி.கதிரவன், மக்கள் விடுதலை கட்சி தலைவர் முருகவேல்ராஜன், ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் அதியமான், கிறிஸ்தவ நல்லெண்ண இயக்க தலைவர் இனிகோ இருதயராஜ் ஆகியோர் பேசுகிறார்கள்.

தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களில் பெரும்பாலானோர் இந்த கூட்டத்தில் பங்கேற்கிறார்கள்.

Related Tags :
Next Story