சட்டசபை தேர்தல்; சம்பளத்துடன் விடுப்பு அளிக்காத தனியார் நிறுவனங்கள் மீது குற்ற நடவடிக்கை: சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
தேர்தல் தினத்தன்று சம்பளத்துடன் விடுமுறை அளிக்காத தனியார் நிறுவனங்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கை வெளியிட வேண்டும் என சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
சென்னை,
தமிழக சட்டசபைக்கான தேர்தல் வருகிற ஏப்ரல் 6ந்தேதி நடைபெறுகிறது. ஒரே கட்டத்தில் நடத்தி முடிக்கப்படும் இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே 2ந்தேதி நடைபெறும்.
மொத்தமுள்ள 234 தொகுதிகளிலும் 3,998 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மொத்த வேட்பாளர்களில் 3,585 பேர் ஆண்கள், 411 பேர் பெண் வேட்பாளர்கள், மூன்றாம் பாலினத்தை சேர்ந்த 2 பேரும் போட்டியிடுகின்றனர்.
தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இதனால், உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் நகை, பணம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்படும். இதற்காக பறக்கும் படை அமைக்கப்பட்டு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
தமிழக சட்டசபை தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்யும் பொருட்டு அனைத்து தகுதியுள்ள வாக்காளர்களும் வாக்களிக்க ஏதுவாக தனியார் நிறுவனங்கள் சம்பளத்துடன் விடுமுறை அளிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
எனினும், கடந்த காலங்களில் இதுபோன்ற உத்தரவுகளை சில நிறுவனங்கள் பின்பற்றவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், தேர்தல் தினத்தன்று சம்பளத்துடன் விடுமுறை அளிக்காத தனியார் நிறுவனங்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கை வெளியிட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் மற்றும் தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்து உள்ளது.
Related Tags :
Next Story