வேனில் அமர்ந்தபடி சென்னையில் வீதி வீதியாக பிரசாரம் செய்த விஜயகாந்த் தொண்டர்கள் ஆரவாரத்துடன் வரவேற்பு


வேனில் அமர்ந்தபடி சென்னையில் வீதி வீதியாக பிரசாரம் செய்த விஜயகாந்த் தொண்டர்கள் ஆரவாரத்துடன் வரவேற்பு
x
தினத்தந்தி 25 March 2021 10:14 PM GMT (Updated: 25 March 2021 10:14 PM GMT)

தே.மு.தி.க. வேட்பாளர்களை ஆதரித்து, தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் சென்னையில் வீதி, வீதியாக வேனில் உட்கார்ந்தபடி சென்று பிரசாரம் மேற்கொண்டார்.

சென்னை, 

தே.மு.தி.க. கடந்த சட்டமன்ற தேர்தலில் மக்கள் நலக்கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொண்டு, படுதோல்வியை சந்தித்தது. அதன் தொடர்ச்சியாக நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் தே.மு.தி.க., அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துடன் கூட்டணி அமைத்து இருக்கிறது.

கூட்டணியில் தே.மு.தி.க.வுக்கு 60 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு இருக்கின்றன. இந்த தேர்தலில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் போட்டியிடவில்லை. அவருடைய மனைவி பிரேமலதா விருத்தாசலம் தொகுதியில் போட்டியிடுகிறார். அவர் தன்னுடைய தொகுதியில் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

வேனில் அமர்ந்தபடி விஜயகாந்த்

இந்த நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக வீட்டில் இருந்த விஜயகாந்த், பிரசாரத்தில் ஈடுபடுவாரா?, வாக்காளர்களை சந்தித்து ஓட்டு கேட்பாரா? என்று தொண்டர்கள் அனைவரும் பெரிதும் எதிர்பார்த்து இருந்தனர். அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் நேற்று முன்தினம் முதல் பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார்.

அந்தவகையில் நேற்று முன்தினம் கும்மிடிப்பூண்டியில் பிரசாரத்தை தொடங்கிய விஜயகாந்த், நேற்று 2-வது நாளாக சென்னை மாநகரத்துக்குட்பட்ட தொகுதிகளில் பிரசாரத்தை மேற்கொண்டார். நேற்று மாலை சாலிகிராமத்தில் இருந்து புறப்பட்ட அவர், எழும்பூர் தொகுதிக்குட்பட்ட சேத்துப்பட்டு வழியாக புளியந்தோப்பு பகுதிகளில் வேனில் உட்கார்ந்தபடி, கை கூப்பி ஓட்டு கேட்டார். அப்போது தொண்டர்கள் அவருக்கு பூக்களை மாலை தூவியும், பட்டாசு வெடித்தும் ஆரவாரமாக வரவேற்பு கொடுத்தனர். மேலும், பெண் தொண்டர்கள் ஆரத்தி எடுத்தும், தேங்காய் உடைத்தும் வரவேற்றனர்.

வீதி, வீதியாக சென்று...

அதன்பின்னர், வீதி, வீதியாக சென்று வேனில் உட்கார்ந்தபடி விஜயகாந்த், எழும்பூர் வேட்பாளர் பிரபு, திரு.வி.க.நகர் வேட்பாளர் சேகர் ஆகியோருக்கு வாக்கு சேகரித்தார். அதையடுத்து அங்கிருந்து வில்லிவாக்கம் சென்று அந்த தொகுதி வேட்பாளர் சுபமங்களம் டில்லிபாபுவுக்கும், பின்னர் ஆவடி தொகுதிக்குட்பட்ட பகுதிகளுக்கு சென்று அந்த தொகுதி வேட்பாளர் சங்கருக்கும் வாக்குகள் சேகரித்தார்.

Next Story