‘‘நல்ல மாற்றத்துக்காக எங்களுக்கு ஒரு வாய்ப்பு தந்துதான் பாருங்களேன்’’ தேர்தல் பிரசாரத்தின்போது ராதிகா சரத்குமார் பேச்சு


‘‘நல்ல மாற்றத்துக்காக எங்களுக்கு ஒரு வாய்ப்பு தந்துதான் பாருங்களேன்’’ தேர்தல் பிரசாரத்தின்போது ராதிகா சரத்குமார் பேச்சு
x
தினத்தந்தி 25 March 2021 11:36 PM GMT (Updated: 25 March 2021 11:36 PM GMT)

‘‘அ.தி.மு.க., தி.மு.க.வை நம்பி ஏமாந்தது போதும். நல்ல மாற்றத்துக்காக எங்களுக்கு ஒரு வாய்ப்பு தந்துதான் பாருங்களேன்’’, என்று தேர்தல் பிரசாரத்தின்போது ராதிகா சரத்குமார் பேசினார்.

சென்னை, 

சென்னை மயிலாப்பூர் தொகுதி மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் நடிகை ஸ்ரீபிரியாவை ஆதரித்து சென்னை பட்டினப்பாக்கம் சீனிவாசபுரத்தில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி மாநில முதன்மை துணை பொதுச்செயலாளரும், நடிகையுமான ராதிகா சரத்குமார் நேற்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.

சீனிவாசபுரம் பகுதியில் வீதி வீதியாக சென்று நடிகை ஸ்ரீபிரியாவுக்கு ஆதரவாக ‘டார்ச் லைட்’ சின்னத்துக்கு ஆதரவு கேட்டு ராதிகா சரத்குமார் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

எங்களுக்கு ஒரு வாய்ப்பு தாருங்களேன்...

மக்களாகிய உங்களை நம்பித்தான் ஒரு புதிய அணியை உருவாக்கி இருக்கிறோம். அ.தி.மு.க., தி.மு.க. என்ற இரு திராவிட கட்சிகளுக்கும் மாறி மாறி வாக்களித்து என்ன சிறப்பை அடைந்துவிட்டீர்கள்? ஒன்றுமே இல்லை.

போதும், இந்த 2 கட்சிகளையும் நம்பி நம்பி ஏமாந்தது போதும். இந்த ஒரு தடவை கொஞ்சம் யோசிங்களேன். ஒரு நல்ல மாற்றத்துக்காக எங்களுக்கு ஒரு வாய்ப்பு தந்துதான் பாருங்களேன். நீங்க மட்டும் எங்களுக்கு ஆதரவு தந்து பாருங்கள். ஒரு நல்ல அரசியலை நாங்கள் முன்னெடுத்து காட்டுகிறோம். தற்போது 2 கட்சிகளும் தேர்தலுக்காக கவர்சிக்கரமான அறிவிப்புகளை அறிவித்து இருக்கிறார்கள்.

இலவசங்கள் எதற்கு?

தமிழகம் கடனில் தத்தளிக்கும்போது வாஷிங்மெஷின் இலவசமாக எதற்கு? தற்போதைய சூழலில் மிகவும் முக்கியமான பொருளாக உள்ள முக கவசத்தை அரசு ஆஸ்பத்திரிகள் மூலம் விலையில்லாமல் தர நடவடிக்கை எடுக்கப்பட்டதா? உயிர்காக்கும் விஷயத்தில் அக்கறை செலுத்தாமல் வாஷிங்மெஷின் எதற்கு தருகிறார்கள்? என்று யோசிங்கள். அதேபோல தி.மு.க.வும் இலவச அறிவிப்புகளை மனம் போன போக்கில் அறிவித்திருக்கிறார்கள். 100 நாட்களில் குறைகளை தீர்ப்பதாக பொய் பிரசாரத்தை முன்னெடுத்து வருகிறார்கள்.

மீனை பிடித்து அதை கையில் கொடுப்பது சிறப்பு அல்ல. அந்த மீனை தூண்டில் மூலம் எப்படி பிடிப்பது? என்று கற்றுத்தருவதே சிறப்பு. அதைத்தான் நாங்கள் செய்ய வந்திருக்கிறோம். எனவே இந்த முறை ‘டார்ச் லைட்’ சின்னத்துக்கு வாக்களித்து எங்களுக்கு ஆதரவு தாருங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

‘சித்தி’ என அழைத்த சிறுவர்கள்

தேர்தல் பிரசாரத்தின்போது திறந்த ஜீப்பில் நின்றபடி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ஸ்ரீபிரியாவுக்கு ஆதரவாக அவர் வாக்குகள் சேகரித்தார். அப்போது ராதிகாவை பார்க்க ஆர்வத்துடன் கூடி நின்ற பெண்களை பார்த்து, ‘எப்படி இருக்கீங்க... என்ன குழம்பு வீட்டுல?...’, என்று பக்கத்து வீட்டு பெண்மணி போல ராதிகா கேட்டார். இதை பார்த்து பெண்கள் சந்தோஷம் கொண்டனர். ‘நீங்க எப்படி இருக்கீங்க...’ என்று மக்கள் கேட்டபோது, ‘நல்லா இருக்கேன். உங்க ஆதரவு இருந்துச்சுனா நான் இன்னும் நல்லா இருப்பேன், உங்களையும் நல்லா வச்சுப்பேன்’, என்று ராதிகா பதிலளித்தார்.

ராதிகா பிரசாரத்துக்கு செல்லும் வழியெங்கும் சிறுவர்-சிறுமிகள் ‘சித்தி... சித்தி...’ (டி.வி. தொடரில் பிரபலமான அவரது கதாபாத்திரம்) என்று கூப்பிட்டனர். அப்போது ராதிகா புன்னகைத்தபடியே அவர்களுக்கு நன்றி தெரிவித்து, ‘நல்லா படிங்க... எங்கே போனாலும் மாஸ்க் போட்டுட்டு போங்க’, என்று அக்கறையுடன் கூறினார்.

Next Story