மயிலாப்பூரில் ஸ்ரீபிரியாவை ஆதரித்து வாக்கு சேகரிப்பு: கோவையில் தேர்தல் களம் காண்பது ஏன்? தேர்தல் பிரசாரத்தின்போது கமல்ஹாசன் விளக்கம்


மயிலாப்பூரில் ஸ்ரீபிரியாவை ஆதரித்து வாக்கு சேகரிப்பு: கோவையில் தேர்தல் களம் காண்பது ஏன்? தேர்தல் பிரசாரத்தின்போது கமல்ஹாசன் விளக்கம்
x
தினத்தந்தி 25 March 2021 11:49 PM GMT (Updated: 25 March 2021 11:49 PM GMT)

சென்னை மயிலாப்பூரில் ஸ்ரீபிரியாவை ஆதரித்து கமல்ஹாசன் வாக்கு சேகரித்தார். அப்போது கோவையில் தேர்தல் களம் காண்பது ஏன்? என்பது குறித்து அவர் விளக்கமளித்தார்.

சென்னை,

மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் நடிகை ஸ்ரீபிரியா போட்டியிடுகிறார். இந்த நிலையில் நடிகை ஸ்ரீபிரியாவுக்கு ஆதரவாக மயிலாப்பூர் தொகுதிக்குட்பட்ட நொச்சிக்குப்பம் மீனவர் குடியிருப்பு பகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் நேற்று இரவு தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.

திரண்டிருக்கும் பொதுமக்கள் மத்தியில் ஸ்ரீபிரியாவிற்கு ஆதரவாக டார்ச்லைட் சின்னத்தில் வாக்கு சேகரித்து அவர் பேசியதாவது:-

மக்கள் மீது நம்பிக்கை உண்டு

மக்களுக்கு நல்லது செய்வேன் என்று பட்டயத்தில் எழுதிக் கொடுக்கும் அளவுக்கு உறுதி வாய்ந்தவராக மயிலாப்பூரில் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளராக ஸ்ரீபிரியா வந்துள்ளார். எனக்காக களத்தில் இறங்கி வேலை செய்பவர்கள் மனதில் என்னைப் போலவே கோபமும், ஆத்திரமும் இருக்கிறது.

இத்தனை ஆண்டுகளாக ஆட்சி செய்தவர்கள் மக்களுக்கு என்ன செய்து விட்டார்கள்? என்ற கோபம்தான் அது. எனக்கு சாதி, மதம் உள்ளிட்ட வேறுபாடுகள் பார்க்க தெரியாது. மக்கள் தான் எனக்குத் தெரிந்த ஒரே மதம்.

தேர்தல் வந்துவிட்டது என்பதற்காக வசனம் பேசி உங்கள் முன்பு நான் வரவில்லை. எனக்கு தன்னம்பிக்கை உண்டு. அதைவிட மக்களாகிய உங்கள் மீது நம்பிக்கை உண்டு. அந்த நம்பிக்கை காரணமாக தான் என் வேலை எல்லாம் விட்டுவிட்டு உங்களுக்காக வந்திருக்கிறேன்.

கோவையில் போட்டி ஏன்?

தமிழ் மக்களுக்கு துரோகம் செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை எதிர்க்கும் தன்னம்பிக்கை எனக்கு உண்டு. 50 ஆண்டு திராவிட கட்சிகளின் ஆட்சி காலத்தில் பெரிய மாற்றம் எதுவும் நிகழவில்லை. நீங்கள் வாழும் வாழ்க்கையே அதற்கு சாட்சி.

இவ்வளவு பேசும் நீங்கள் மயிலாப்பூரில் போட்டியிட்டு இருக்கலாமே என்று சிலர் கேட்கிறார்கள். உண்மைதான். எப்படியாவது ஒரு சீட்டாவது ஜெயித்துவிடலாம் என்ற நம்பிக்கையில் அவர்கள் (பா.ஜ.க.) பார்வை கோவை மீது ஆழமாக பதிந்திருக்கிறது. அந்த ஒரு சீட் கூட அவர்களுக்கு கிடைத்து விடக்கூடாது என்பதற்காகத்தான் கோவையில் நான் போட்டியிடுகிறேன். மற்றபடி தமிழகத்தின் 234 தொகுதிகளும் எனது தொகுதிகள் தான். வாழும் மக்கள் அனைவரும் எனது உறவினர்கள் தான்.

பதவி ஆசை கிடையாது

ஆழ்கடலில் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்களுக்கு கட்டுமரமும், படகுகளும் மட்டும் கொடுத்தால் போதாது. மீனவர்கள் நிம்மதியாக போய் வேலை செய்துவிட்டு மீண்டும் கரை திரும்ப உறுதி கொடுக்க வேண்டும். அந்த அதிகாரத்தை கொடுப்பேன் என்ற நம்பிக்கையில் உங்களிடம் அளிக்கவே நான் வந்திருக்கிறேன்.

எனக்கு பதவி ஆசை சுத்தமாக கிடையாது. என் மக்கள் நலமாக வாழ வேண்டும் என்ற சிந்தனை மட்டுமே உள்ளது.

ஏர்கண்டிஷன் மீன் மார்க்கெட்

அரசியலில் பேராசை பிடித்தவர்களை விரட்டி ஆக வேண்டும். அதை செய்து காட்டுங்கள். தேர்தல் பிரசாரத்துக்கு ஹெலிகாப்டரில் போகிறானே என்று என்னைப் பற்றி விமர்சனங்கள் செய்கிறார்கள். நான் முறையாக அரசுக்கு வரி கட்டி வாழ்பவன். என் சொந்தக் காசில் மக்களை பல்லக்கு பிடித்து தூக்கி போக இப்போது ஹெலிகாப்டரில் செல்கிறேன். இதில் என்ன தவறு இருக்கிறது?

நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யத்தின் பலம் என்ன என்பது நிச்சயம் தெரியும். எங்கள் கட்சியின் கொள்கைகள் இளம் தலைமுறையினர் மனதில் ஆழ பதிந்து இருக்கிறது. இந்த கூட்டத்தில் என் பேச்சை கேட்கும் கைக்குழந்தை, இதே நொச்சிக்குப்பம் நாளை ஏர்கண்டிஷன் மீன் மார்க்கெட்டாக மாறுவதையும், குப்பைமேடு கல்விச்சாலை ஆனதையும் நிச்சயம் பார்க்கத்தான் போகிறது..

எனது கரத்தை பலப்படுத்துங்கள்

இலவசம் என்றுமே மக்களின் ஏழ்மையை போக்காது. இலவசமாக மீன்களை உங்களுக்கு கொடுக்க மாட்டேன். தூண்டில் கொடுத்து மீன் பிடிக்க உழைப்பதை பற்றி சொல்லிக் கொடுப்பேன். நாங்கள் இறக்கை கட்டிய தேவதைகள் அல்ல. புவியீர்ப்பு விசைக்கு உட்பட்ட சாதாரண மனிதர்கள். என் எஞ்சிய வாழ்நாள் முழுவதும் மக்களுக்காகத்தான் என்று முன்பே சொல்லிவிட்டேன். எனவே என் கரத்தை பலப்படுத்துங்கள். மக்கள் நீதி மய்யம் குரலை சட்டசபையில் ஒலிக்கச் செய்யுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story