வன்னியர்களுக்கு பெற்று தந்தது போல் அனைத்து சமுதாயங்களுக்கும் தனித்தனியாக இடஒதுக்கீடு பெற்று தருவோம் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பிரசாரம்


வன்னியர்களுக்கு பெற்று தந்தது போல் அனைத்து சமுதாயங்களுக்கும் தனித்தனியாக இடஒதுக்கீடு பெற்று தருவோம் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பிரசாரம்
x
தினத்தந்தி 27 March 2021 2:41 AM IST (Updated: 27 March 2021 2:41 AM IST)
t-max-icont-min-icon

வன்னியர்களுக்கு பெற்று தந்தது போல அனைத்து சமுதாயங்களுக்கும் தனித்தனி இடஒதுக்கீடு பெற்று தருவோம் என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேசினார்.

சென்னை, 

பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் அரூர், கம்பைநல்லூரில் நேற்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

உங்களை நம்பியிருக்கிறோம்

இந்த தேர்தல் நமக்கு மிக முக்கியமானது. முக்கிய கட்டத்தில் இருக்கிறோம். ஒரு விவசாயி வெற்றி பெற வேண்டும். தப்பி தவறி கூட தி.மு.க. ஆட்சி தமிழ்நாட்டில் வந்து விடக்கூடாது. தி.மு.க.வில் எல்லாவற்றையும் இந்திகாரர் பிரசாந்த் கிஷோர் தான் தீர்மானிக்கிறார். அந்த இந்திகாரரை மு.க.ஸ்டாலின் நம்பியுள்ளார். ஆனால் நாங்கள் உங்களை நம்பியிருக்கிறோம்.

10 ஆண்டு காலமாக ஆட்சியில் இல்லாமல் காய்ந்து போய் இருக்கிறார்கள். வந்தாங்கன்னா மேய்ந்திடுவாங்க. வியாபாரிகள் நடுக்கத்தில் இருக்கிறார்கள். இந்த ஆட்சியில் யாருக்கும் பாதிப்பு இல்லை. முதல்-அமைச்சராக வர மு.க.ஸ்டாலினுக்கு என்ன தகுதி இருக்கிறது. ஒரே ஒரு தகுதி தான் கருணாநிதியின் மகன். ஆனால் நம்முடைய முதல்-அமைச்சருக்கு விவசாயி என்ற தகுதி இருக்கிறது. அதுதான் பெரிய தகுதி.

விவசாய கூட்டணி

இந்த கூட்டணியில் நாம் சேர்ந்து இருப்பது சமூக நீதிக்காக. 40 ஆண்டுகால போராட்டம். இன்றைக்கு வன்னியர்களுக்கு 10.5 சதவீத தனி இடஒதுக்கீடு நம்முடைய டாக்டர் ராமதாஸ் பெற்று தந்திருக்கிறார். அதை கொடுத்தது நம்முடைய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி. அதை ஒருபோதும் மறக்க முடியாது, மறக்கவும் கூடாது. வன்னியர்களை போன்று எத்தனையோ சமுதாயம் பின்தங்கியுள்ளது. அனைத்து சமுதாயங்களுக்கும் தனித்தனியாக இடஒதுக்கீடு பெற்று தருவோம்.

யாருக்கெல்லாம் வியர்வை வருகிறதோ, அவர்கள் எல்லாம் நம்ம கூட்டணியில் இருக்கிறார்கள். நம்மை போன்ற விவசாயி தான் முதல்-அமைச்சராக வர வேண்டும் என்று அனைத்து விவசாயிகளும் முடிவு செய்து விட்டார்கள். நம்ம கூட்டணி விவசாய கூட்டணி, தொழிலாளர் கூட்டணி.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story