முதலமைச்சரின் தாயார் குறித்து அவதூறாக பேசிய கட்சி சராசரி தமிழ் பெண்களுக்கு மரியாதை கொடுக்குமா? ஸ்மிருதி இரானி


முதலமைச்சரின் தாயார் குறித்து அவதூறாக பேசிய கட்சி சராசரி தமிழ் பெண்களுக்கு மரியாதை கொடுக்குமா?  ஸ்மிருதி இரானி
x
தினத்தந்தி 27 March 2021 3:32 PM GMT (Updated: 27 March 2021 3:32 PM GMT)

முதலமைச்சரின் தாயார் குறித்து அவதூறாக பேசிய கட்சி சராசரி தமிழ் பெண்களுக்கு மரியாதை கொடுக்குமா என மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி கேள்வி எழுப்பினார்.

சென்னை

தமிழக சட்டசபை தேர்தல் வருகிற ஏப்ரல் 6 ந்தேதி ஒரே கட்டத்தில் நடைபெற உள்ளது.  வாக்கு எண்ணிக்கை மே 2ந்தேதி நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படும்.

தேர்தல் களத்தில் அ.தி.மு.க. கூட்டணி, தி.மு.க. கூட்டணி, டி.டி.வி. தினகரனின் அ.ம.மு.க. கூட்டணி, கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கூட்டணி, நாம் தமிழர் கட்சி என்று 5 முனை போட்டி நிலவுகிறது. சுயேச்சை வேட்பாளர்கள் பலரும் போட்டி களத்தில் குதித்துள்ளனர்.

அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள பா.ஜ.க.வை சேர்ந்த வானதி சீனிவாசன்  கோவை தெற்கு தொகுதி வேட்பாளராக போட்டியிடுகிறார்.  இதே தொகுதியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனும் போட்டியிடுகிறார்.

கோவை தெற்கு தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி இன்று இருசக்கர வாகனத்தில் பிரசாரம் மேற்கொண்டார்.  பின்னர் பா.ஜ.க. தொண்டர்களுடன் சேர்ந்து தாண்டிய்யா பாரம்பரிய நடனம் ஆடினார்.

தொடர்ந்து மத்திய மந்திரி  ஸ்மிருதி இரானி சென்னையில் ஆயிரம் விளக்கு தொகுதியில் பா.ஜ.க வேட்பாளர்  நடிகை  குஷ்புவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சமீபத்தில்  தலைவர்களில் ஒருவர்  முதலமைச்சரின் தாயார் குறித்து துணிச்சலாக அவதூறாக பேசி உள்ளார். அத்தகைய அரசியல் கட்சி சராசரி தமிழ் பெண்களுக்கு மரியாதை கொடுக்குமா, நீங்கள் வாக்களிக்கச் செல்லும்போது உங்களை நீங்களே கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி இது தான்.

திமுகவில், டி என்பது வம்சத்தை குறிக்கிறது, எம் பணத்தையும்  & கட்டா பஞ்சாயத்து கே என்பதையும் குறிக்கிறது.அவர்கள் பணம் மற்றும் குடும்பத்திற்காக நமது ஜனநாயகத்தை கொள்ளையடித்தனர்.

கட்டா பஞ்சாயத்து திமுக & மாபியா ராஜ் காங்கிரஸ்  குடும்பத்திற்கு அல்ல  உங்கள் குடும்பத்திற்கு வாக்களிக்கவும் என கூறினார்.


Next Story