தேர்தல் பிரசாரத்தில் ஆ.ராசா ஈடுபட தடை விதிக்ககோரி தேர்தல் ஆணையத்திடம் அதிமுக சார்பில் புகார்


தேர்தல் பிரசாரத்தில் ஆ.ராசா ஈடுபட தடை விதிக்ககோரி தேர்தல் ஆணையத்திடம் அதிமுக சார்பில் புகார்
x
தினத்தந்தி 28 March 2021 10:50 AM GMT (Updated: 28 March 2021 10:50 AM GMT)

திமுக எம்.பி ஆ. ராசா தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட தடை விதிக்ககோரி தேர்தல் ஆணையத்திடம் அதிமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சியினர் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து சூறாவளிப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பிரச்சாரத்தின் போது மாற்றுக் கட்சியினர் குறித்து பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வேட்பாளர்கள் வாக்கு சேகரித்து வருகின்றனர்.

அந்த வகையில் ஆயிரம் விளக்கு தொகுதி திமுக வேட்பாளர் டாக்டர் எழிலனுக்கு ஆதரவாக திமுக எம்.பி ஆ. ராசா பிரசாரம் மேற்கொண்டார். இதில் முதல்வர் பழனிசாமியையும், எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலினையும் ஒப்பிட்டு பேசிய அவர், முதல்வரை விமர்சிக்கும் வகையில் பேசினார்.

அப்போது அவர் சொன்ன சில கருத்துக்கள் முதல்வரை தனிப்பட்ட முறையில் விமர்சிக்கும் விதமாக உள்ளது என குற்றச்சாட்டு எழுந்தது. அவர் பேசிய காணொலி சமூக வலைதளங்களில் பரவியதையடுத்து அதிமுகவினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். 

திமுகவைச் சேர்ந்த சிலரும் ஆ.ராசா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். பிரச்சாரத்தின் போது திமுகவினர் கண்ணியம் காக்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் குறிப்பிட்டு இருந்தார். இந்நிலையில் ஆ.ராசாவிற்கு எதிராக அதிமுக சார்பில் தலைமை தேர்தல் அதிகாரி சத்யாபிரதா சாஹுவிடம் புகாரளிக்கப்பட்டது.

இந்த புகாரின் அடிப்படையில் முதல்வர் பற்றி அவதூறாக பேசியதாக தி.மு.க. எம்.பி. ஆ.ராசா மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார். ஆபாசமாக திட்டுதல், தேர்தல் விதிமீறல், கலகம் செய்ய தூண்டுதல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் ஆ.ராசா மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், திமுக எம்.பி ஆ. ராசா தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட தடை விதிக்ககோரி தேர்தல் ஆணையத்திடம் அதிமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. . 

Next Story