ஏப்ரல் 1-ந் தேதி முதல் 4 நாட்கள் எடப்பாடி பழனிசாமி இறுதிகட்ட பிரசாரம் மதுரையில் 2-ந் தேதி பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்கிறார்
ஏப்ரல் 1-ந் தேதி முதல் 4 நாட்கள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இறுதிகட்ட பிரசாரத்தை தொடங்குகிறார். மதுரையில் 2-ந் தேதி பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்கிறார்.
சென்னை,
அ.தி.மு.க. தலைமைக் கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
இறுதிகட்ட பிரசாரம்
ஏப்ரல் 6-ந் தேதி அன்று நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டசபை பொதுத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பிலும், அதன் தலைமையிலான கூட்டணி கட்சிகளின் சார்பிலும் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஏப்ரல் 1-ந் தேதி முதல் 4-ந் தேதி வரை இறுதிகட்டமாக தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். அதன் விவரம் வருமாறு:-
ஏப்ரல் 1-ந் தேதி காலை 10.15 மணிக்கு கூடலூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் பொன்.ஜெயசீலனை ஆதரித்தும், 11.40 மணிக்கு குன்னூரில் குன்னூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் கப்பச்சி டி.வினோத் மற்றும் உதகமண்டலம் தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் போஜராஜன் ஆகியோரை ஆதரித்தும் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொள்கிறார்.
பிரதமர் பங்கேற்கும் பொதுக்கூட்டம்
அன்று மாலை 3 மணிக்கு கோவை கொடிசியா வளாகத்தில், கோவை மாவட்ட அ.தி.மு.க. மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்தும், மாலை 5.30 மணிக்கு பெருந்துறையில் ஈரோடு மாவட்ட அ.தி.மு.க. மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்தும், இரவு 7 மணிக்கு பள்ளிப்பாளையத்தில் நாமக்கல் மாவட்ட அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்தும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்கிறார்.
2-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 11.15 மணிக்கு மதுரையில் பிரதமர் மோடி பங்கேற்கும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கலந்துகொள்கிறார். மாலை 4 மணிக்கு ஆட்டையாம்பட்டியில் வீரபாண்டி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் எம்.ராஜா என்ற ராஜமுத்துவை ஆதரித்தும், மாலை 5.30 மணிக்கு சங்ககிரியில் சங்ககிரி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் எஸ்.சுந்தரராஜனை ஆதரித்தும், இரவு 7 மணிக்கு சேலம் கோட்டை மைதானத்தில், சேலம் மாநகர் மாவட்டத்தைச் சேர்ந்த அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்தும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொள்கிறார்.
எடப்பாடி தொகுதியில் வாக்கு சேகரிப்பு
3-ந் தேதி (சனிக்கிழமை) காலை 11 மணிக்கு நாட்றம்பள்ளியில் திருப்பத்தூர் மாவட்ட அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்தும், மாலை 4.30 மணிக்கு மேச்சேரியில் மேட்டூர் தொகுதி பா.ம.க. வேட்பாளர் எஸ்.சதாசிவத்தை ஆதரித்தும், மாலை 5 மணிக்கு குட்டப்பட்டி மற்றும் நங்கவள்ளி ஒன்றியத்தில், எடப்பாடி தொகுதியில் போட்டியிடும் தனக்கு ஆதரவு கேட்டும், இரவு 7 மணிக்கு ஓமலூரில், ஓமலூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ஆர்.மணியை ஆதரித்தும் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார்.
4-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 11 மணிக்கு எடப்பாடி தொகுதியில் கொங்கணாபுரம் ஒன்றியம், மதியம் 1 மணிக்கு எடப்பாடி ஒன்றியம், மாலை 3 மணிக்கு எடப்பாடி நகரத்தில் தனக்கு ஆதரவு கேட்டு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொள்கிறார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story