இறந்து போன என் தாயைப் பற்றி தரக்குறைவாக பேசுகிறார்களே... பிரசாரத்தின் போது எடப்பாடி பழனிசாமி கண்ணீர்


இறந்து போன என் தாயைப் பற்றி தரக்குறைவாக பேசுகிறார்களே... பிரசாரத்தின் போது எடப்பாடி பழனிசாமி கண்ணீர்
x
தினத்தந்தி 29 March 2021 8:15 AM IST (Updated: 29 March 2021 8:15 AM IST)
t-max-icont-min-icon

இறந்து போன என் தாயைப் பற்றி தரக்குறைவாக பேசுகிறார்களே... பிரசாரத்தின் போது எடப்பாடி பழனிசாமி கண்கலங்கி தழுதழுத்த குரலில் பேசினார்.

சென்னை

சென்னை திருவொற்றியூரில் நேற்று மாலை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசுகையில், ‘‘மு.க.ஸ்டாலின் செல்லுமிடமெல்லாம் தொடர்ந்து பொய் பேசி, நாடகம் ஆடி, தந்திரமாக மக்களை குழப்பி வருகிறார். ஆனால், மக்கள் தெளிவுடன், அ.தி.மு.க. அரசு அமைய வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். எனது தலைமையில் இருக்கின்ற அ.தி.மு.க. அரசு அனைத்து துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டுக்கொண்டிருகிறது. எனவே அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கு நீங்கள் வெற்றியைத் தேடித்தாருங்கள்’’ என்று பேசினார்.

இதனைத் தொடர்ந்து, ‘‘தி.மு.க. பொறுப்பாளர் (ஆ.ராசா) வேண்டுமென்றே திட்டமிட்டு அவதூறு பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இங்கே ஒரு விஷயத்தை பற்றி பேசக்கூடாது என்று முடிவெடுத்து வந்தேன். ஆனால் தாய்மார்களை பார்த்தவுடன் என்னால் பேசாமல் இருக்க முடியவில்லை’’ என்று கூறினார். அப்போது அவரது குரல் தழுதழுத்தது. சில நொடிகள் பேச்சை நிறுத்தினார். அதன்பின்னர் கண்ணீர் மல்க அவர் பொதுமக்களிடம் பேசியதாவது:-

என் தாய் என்று பார்க்காதீர்கள். உங்கள் குடும்பத்தில் ஒரு தாயாக பாருங்கள். எவ்வளவு கீழ்த்தரமாக பார்க்கிறார். ஒரு சாதாரண மனிதன் முதல்-அமைச்சராக இருந்தால் என்னவெல்லாம் பேசுவார்கள்? என்பதை எண்ணிப்பாருங்கள். ஒரு முதல்-அமைச்சருக்கே இப்படிப்பட்ட நிலைமை என்றால், உங்களைப்போன்ற மக்களுக்கு யார் பாதுகாப்பு கொடுப்பார்கள்?. இவர்கள் எல்லாம் ஆட்சி, அதிகாரத்துக்கு வந்தால், பெண்கள் மற்றும் தாய்மார்களின் நிலைமை என்ன ஆகும்? என்பதை சிந்தித்துப் பாருங்கள். எனக்காக நான் பரிந்து பேசவில்லை. அவரும் ஒரு தாய்க்கு பிறந்தவர். தாய்மார்களை கொச்சைப்படுத்தி பேசுவது, இழிவுபடுத்தி பேசுவது சரிதானா? அவர்களுக்கெல்லாம் தக்க தண்டனையை நீங்கள் வழங்க வேண்டும்.

என்னுடைய தாய் கிராமத்திலே பிறந்து, வளர்ந்தவர். விவசாயி. இரவு, பகல் பாராமல் பாடுபட்டவர். அவர் இறந்து விட்டார். அவரைப் பற்றி இழிவாக தரக்குறைவாக எப்படி எல்லாம் பேசி இருக்கிறார். ஒரு முதல்-அமைச்சருக்கே இந்த நிலைமை. நான் ஒரு சாதாரண குடும்பத்தில் உங்களைப் போல பிறந்து வளர்ந்தவன். ஏழையாக இருந்தாலும், பணக்காரராக இருந்தாலும் தாய் தான் உயர்ந்த ஸ்தானம். பெண்குலத்தையும், தாயையும் யார் இழிவாக பேசினாலும் அவர்களுக்கு ஆண்டவன் நிச்சயமாக உரிய தண்டனையை வழங்குவார்.

இதைக்கூட பேசக்கூடாது என்று நினைத்தேன். இங்கே தாய்மார்கள் இருந்தார்கள். அதனால் தான் பேசினேன். இப்படிப்பட்டவர்களெல்லாம் ஆட்சிக்கு வந்துவிட்டால் இவர்கள் எல்லாம் எப்படி அராஜகம் செய்வார்கள்?, எப்படி பெண்களை இழிவு படுத்துவார்கள்? என்பதை மட்டும் தயவு செய்து தாய்மார்களும், சகோதரிகளும் எண்ணிப்பார்க்க வேண்டும்.

இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது அங்கு கூடியிருந்த பெண்கள் அனைவரும் ஆ.ராசா ஒழிக என்று கோஷமிட்டனர். மேலும் தி.மு.க.வு.க்கு ஓட்டு போடமாட்டோம் என்றும் கூறினர். மூதாட்டிகள் பலர் ‘வருத்தப்படாதீங்க சாமி.... நாங்க இருக்கோம்’ என்று ஆறுதல் கூறினர்.

Next Story