தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை
தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று ஆண்டிப்பட்டியில் நடந்த பிரசாரத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பேசினார்.
தேனி:
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தேனி மாவட்டத்தில் நேற்று சுற்றுப்பயணம் செய்து தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார்.
ஆண்டிப்பட்டி பிரசாரத்தில் வைகோ பேசியதாவது:-
தற்போது தமிழ்நாட்டில் ரூ.9 லட்சம் கோடி கடன் சுமை இருக்கிறது. ஆனால் வாஷிங் மெஷின் வாங்கி தருவோம் என்று முதல்-அமைச்சர் சொல்கிறார்.
எப்படி வாங்கித் தருவீர்கள்? ஒரு லட்சம் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் மூடப்பட்டு விட்டன. 5 லட்சம் பேர் வேலை இழந்து விட்டார்கள்.
ஏற்கனவே 90 லட்சம் இளைஞர்கள் வேலை இல்லாமல் இருக்கிறார்கள். கியாஸ் சிலிண்டருக்கு 3 மாதங்களில் ரூ.225 அதிகரித்து இருக்கிறது.
குடியுரிமை திருத்த சட்டம் நாடாளுமன்ற ராஜ்யசபாவில் வந்தபோது அ.தி.மு.க. அதை ஆதரித்து ஓட்டு போட்டது. பாட்டாளி மக்கள் கட்சி அதை ஆதரித்து ஓட்டு போட்டது.
அவர்கள் ஆதரிக்காவிட்டால் அந்த சட்டம் நிறைவேறி இருக்காது. தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வோம்? என்று தேர்தல் அறிக்கையை முதல்-அமைச்சராக வரப்போகிற மு.க.ஸ்டாலின் அறிவித்து இருக்கிறார்.
அதன்படி, சிறு, குறு, நடுத்தர தொழில் வளர்ச்சிக்கு ரூ.1,500 கோடி ஒதுக்கப்படும்.
ஆண்டுக்கு 10 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். கூட்டுறவு நகை கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்.
வேளாண் துறைக்கென்று தனி பட்ஜெட் அறிவிக்கப்படும். உழவர் சந்தை ஊக்குவிக்கப்படும் என்று எண்ணற்ற திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் யாருக்கும் பாதுகாப்பு கிடையாது.
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதே, பொள்ளாச்சியில் பாலியல் வன்கொடுமையால் பெண்கள் பாதிக்கப்பட்டு இருப்பதை நீங்கள் பத்திரிகைகளில் பார்த்திருப்பீர்கள்.
மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக வந்தபிறகு அனைத்து மக்களுக்கும் பாதுகாப்பு கிடைக்கும். அப்படிப்பட்ட ஒரு தன்னாட்சி அமையும்.
இவ்வாறு வைகோ பேசினார்.
Related Tags :
Next Story