குடும்பத்தோடு பிழைக்க வரவில்லை; மக்களுக்காக உழைக்க வந்துள்ளோம் - விஜயபிரபாகரன் பிரசாரம்


குடும்பத்தோடு பிழைக்க வரவில்லை; மக்களுக்காக உழைக்க வந்துள்ளோம் - விஜயபிரபாகரன் பிரசாரம்
x
தினத்தந்தி 30 March 2021 5:33 AM GMT (Updated: 30 March 2021 5:33 AM GMT)

குடும்பத்தோடு பிழைக்க வரவில்லை; மக்களுக்காக உழைக்க வந்துள்ளோம் என்று விருத்தாச்சலத்தில் நடந்த தேர்தல் பிரசார நிகழ்ச்சியில் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் தெரிவித்தார்.

விருத்தாச்சலம்,

தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.

தேர்தல் களத்தில் அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி, அமமுக கூட்டணி, மக்கள் நீதி மய்யம் கூட்டணி, நாம் தமிழர் கட்சி என்று 5 முனை போட்டி நிலவுகிறது. சுயேச்சை வேட்பாளர்கள் பலரும் போட்டி களத்தில் உள்ளனர். தேர்தல் தேதி நெருங்கி வருவதால் அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு, பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

இதற்கிடையில், தேர்தலில் அமமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிக 60 தொகுதிகளில் போட்டியிடுகிறது. தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் மனைவியும் அக்கட்சியின் பொருளாளருமான பிரேமலதா விஜயகாந்த் கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் தொகுதியில் போட்டியிடுகிறார். அவர் தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில், பிரேமலதா விஜயகாந்த்திற்கு ஆதரவு கேட்டு அவரது மகன் விஜயபிரபாகரன் நேற்று வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய விஜயபிரபாகரன், குடும்பத்தோடு பிழைக்க வரவில்லை என்றும் மக்களுக்காக உழைக்க வந்துள்ளதாக கூறினார். மேலும், வரும் சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளராக பிரேமலதா விஜயகாந்த் இருப்பார் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.  

Next Story