தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசாருக்கு தபால் வாக்கு


தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசாருக்கு தபால் வாக்கு
x
தினத்தந்தி 30 March 2021 8:17 PM IST (Updated: 30 March 2021 8:17 PM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் 7 சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார் தபால் வாக்கு செலுத்தினர்.

திண்டுக்கல்:

தேர்தல் பணியில் போலீசார்
தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந்தேதி நடக்கிறது. இதையொட்டி மக்கள் அச்சமின்றி வாக்களிக்கவும், தேர்தல் அமைதியாக நடைபெறவும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கிறது. 

இதில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. இதற்காக போலீசாருடன், துணை ராணுவ வீரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

இதில் திண்டுக்கல் மாவட்டத்தில் 7 சட்டமன்ற தொகுதிகள் இருக்கின்றன. இந்த தொகுதிகளிலும் பதற்றமான வாக்குச்சாவடிகள் நிறைந்த பகுதிகளில் போலீஸ் கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது. 

மேலும் தேர்தல் பாதுகாப்பு பணியில் 720 துணை ராணுவ வீரர்கள், போலீசார், முன்னாள் ராணுவ வீரர்கள், ஓய்வுபெற்ற போலீசார் என 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஈடுபட உள்ளனர்.

தபால் வாக்கு செலுத்தினர் 
இதற்காக சட்டமன்ற தொகுதி வாரியாக போலீசார் நியமிக்கப்பட்டு, அதற்கான ஆணை வழங்கப்பட்டது. 

மேலும் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார் தபால் வாக்கு செலுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. 

இதையொட்டி ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் போலீசார் தபால் வாக்கு செலுத்த நேற்று தனி மையம் அமைக்கப்பட்டது. அந்த மையங்களுக்கு போலீசார் சென்று தபால் வாக்கு செலுத்தினர்.

இதில் திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பணியில் ஈடுபடும் போலீசாருக்கு, சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் மையம் அமைக்கப்பட்டு இருந்தது.

 அங்கு தபால் வாக்குகளை செலுத்துவதற்கு சட்டமன்ற தொகுதி வாரியாக பெட்டிகள் வைக்கப்பட்டு இருந்தன. 

இதையடுத்து போலீசார் வரிசையில் காத்திருந்து தபால் வாக்கு செலுத்தினர். இதேபோல் மாவட்டம் முழுவதும் மொத்தம் 2 ஆயிரத்து 150 போலீசார் தபால் வாக்கு செலுத்தினர்.


Next Story