தமிழகம், புதுச்சேரி உள்பட 5 மாநில தேர்தல் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு அலை தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு


தமிழகம், புதுச்சேரி உள்பட 5 மாநில தேர்தல் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு அலை தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
x
தினத்தந்தி 31 March 2021 3:45 AM IST (Updated: 31 March 2021 3:45 AM IST)
t-max-icont-min-icon

தமிழகம், புதுச்சேரி உள்பட 5 மாநில தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு அலை வீசுகிறது என்று தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.

புதுச்சேரி, 

புதுச்சேரியில் பா.ஜ.க., என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க. ஆகிய கட்சிகளின் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ரோடியர் மில் திடலில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நேற்று நடந்தது.

கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக லாஸ்பேட்டை விமான நிலையத்துக்கு தனி ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் மோடி நேற்று மாலை 5.20 மணிக்கு வந்து இறங்கினார். வரவேற்பை ஏற்றுக்கொண்டு அங்கிருந்து கார் மூலம் புறப்பட்ட அவர் பொதுக்கூட்டம் நடந்த ரோடியர் மில் திடலுக்கு மாலை 5.35 மணிக்கு வந்தார். 5.50 மணியளவில் பேசத்தொடங்கினார்.

அப்போது பிரதமர் மோடி பேசியதாவது:-

ஆதரவு அலை

புதுவை மாநிலத்தில் ஒருவித ஈர்ப்புசக்தி உள்ளது. அது என்னை மீண்டும் மீண்டும் இங்குவர தூண்டுகிறது. கடந்த மாதம் புதுச்சேரி வந்தேன். அப்போது நிறைய வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்தேன். புதுவை மக்கள் நமக்கு ஆதரவு தந்துள்ளனர். வருகிற தேர்தலிலும் மாற்றத்துக்கு ஆதரவு தர மக்கள் தயாராகிவிட்டனர்.

விரைவில் 5 மாநில தேர்தல் நடைபெற உள்ளது. நான் காலையில் கேரளாவிலும், மதியம் தமிழகத்திலும், மாலையில் புதுச்சேரியிலும் பிரசாரம் செய்கிறேன். மேற்கு வங்காளம், அசாம் மாநிலங்களில் பிரசாரத்துக்கு சென்று வந்துள்ளேன். தேர்தல் நடக்கும் இந்த 5 மாநிலங்களிலும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு அலை வீசுகிறது.

கடந்த கால புதுவை காங்கிரஸ் அரசு செயல்படாத மக்கள் விரோத அரசாக இருந்துள்ளது. எல்லா துறைகளிலும் தோல்வி அடைந்து ஊழல்கள் மலிந்துள்ளன. கல்வி, மருத்துவ இடங்களை நிரப்புவதில் கொள்ளை நடந்துள்ளது. இதில் முதல்-அமைச்சரின் குடும்ப உறவினர்களே இருந்ததாக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களே பேசுகின்றனர்.

முதல்-அமைச்சருக்கே வாய்ப்பில்லை

எனக்கு நீண்ட கால அரசியல் அனுபவம் உள்ளது. பல தேர்தல்களை பார்த்துள்ளேன். இந்த தேர்தல் வித்தியாசமானதாக எனக்கு தெரிகிறது. இந்த தேர்தலில் முதல்-அமைச்சருக்குக்கூட போட்டியிட வாய்ப்பு கொடுக்கவில்லை. தனது தலைவரின் செருப்பை தூக்கினார். தலைவரை சந்தோஷப்படுத்த தப்பு தப்பாக மொழிபெயர்த்தார். மோசமான ஆட்சி என்பதால்தான் அவருக்கு போட்டியிட வாய்ப்பு தரவில்லை.

கடந்த மாதம் வரும்போது புதுவையை சிறந்ததாக மாற்றுவேன் என்று கூறினேன். புதுவையை வியாபாரம், கல்வி, ஆன்மிகம், சுற்றுலாவின் கேந்திரமாக மாற்றுவோம். லஞ்சத்தை ஒழிப்போம். வருங்கால தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கும். புதிய வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்படும்.

ஆன்மிகத்துக்கு பெருமை

புதுவை என்றாலே பாரதியார், அரவிந்தர், சித்தானந்தசாமி, தொள்ளைக்காது சித்தர், மணக்குள விநாயகர் ஆகியோரை நினைத்துப் பார்க்கிறேன். ஆன்மிகம் நிறைந்துள்ள புதுவையின் ஆன்ம பலத்துக்கும், ஆன்மிகத்துக்கும் பெருமை சேர்ப்போம். சுற்றுலா பயணிகள் வருகையை அதிகரிக்க உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவோம். 4 வழிச்சாலைகளை உருவாக்குவோம்.

புதுவையில் சாலையோர உணவகங்களை மேம்படுத்த நிறைய திட்டம் உள்ளது. புதுவையில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின்கீழ் 6 ஆயிரம் வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இன்னும் 8 ஆயிரம் வீடுகள் கட்டப்பட உள்ளன. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் ரூ.2 ஆயிரம் கோடியில் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார். 

Next Story