ஜல்லிக்கட்டு தடை நீங்கியதற்கு இளைஞர்கள்தான் காரணம் - திமுக தலைவர் முக ஸ்டாலின் பேச்சு
பிரதமர்தான் ஜல்லிக்கட்டு நாயகன் எனக் கூறுகிறார் ஓபிஎஸ், ஜல்லிக்கட்டு தடை நீங்கியதற்கு இளைஞர்கள்தான் காரணம் என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்தார்.
போடி,
தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.
தேர்தல் களத்தில் அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி, அமமுக கூட்டணி, மக்கள் நீதி மய்யம் கூட்டணி, நாம் தமிழர் கட்சி என்று 5 முனை போட்டி நிலவுகிறது. சுயேச்சை வேட்பாளர்கள் பலரும் போட்டி களத்தில் உள்ளனர். தேர்தல் தேதி நெருங்கி வருவதால் அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இதற்கிடையில், அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். இக்கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அந்த கூட்டத்தில் பேசிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், ’ஜல்லிக்கட்டு தடையை உடைத்தெறிந்த பெருமை மோடியையே சாரும். உண்மையான ஜல்லிக்கட்டு கதாநாயகன் பிரதமர் மோடி தான்’ என்று தெரிவித்தார்.
இந்நிலையில், ஜல்லிக்கட்டு தொடர்பான ஓ.பன்னீர் செல்வம் கருத்துக்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் தொகுதி திமுக வேட்பாளர் தங்கத்தமிழ்செல்வனை ஆதரித்து திமுக தலைவர் முக ஸ்டாலின் இன்று பிரசாரத்தில் ஈடுபட்டார்.
பிரசாரத்தின்போது பேசிய முக ஸ்டாலின், ஓ பன்னீர் செல்வம் முதல்வராக, துணை முதல்வராக இருந்து போடி தொகுதிக்கு செய்த திட்டம் என்ன? கடந்த 5 ஆண்டுகளாக அதிமுக அரசு மக்களை பற்றி எந்த கவலையும் கொள்ளவில்லை. பிரதமர் தான் ஜல்லிக்கட்டு நாயகன் என ஓ.பன்னீர் செல்வம் கூறுகிறார். உண்மையில் ஜல்லிக்கட்டு தடை நீங்கியதற்கு இளைஞர்கள்தான் காரணம்’ என்றார்.
Related Tags :
Next Story