அதிமுகவினர் வெற்றி பெற்றால் அதிமுகவினராக இருக்க மாட்டார்கள், பாஜகவினராகத்தான் இருப்பார்கள் - மு.க.ஸ்டாலின் பேச்சு
அதிமுகவினர் வெற்றி பெற்றால் அதிமுகவினராக இருக்க மாட்டார்கள், பாஜகவினராகத்தான் இருப்பார்கள் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரசாரத்தில் பேசினார்.
திண்டுக்கல்,
தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் தேதி நெருங்கி வருவதால் அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு, பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்துப் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாக்குச் சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:-
அதிமுகவினர் வெற்றி பெற்றால் அதிமுகவினராக இருக்க மாட்டார்கள், பாஜகவினராகத்தான் இருப்பார்கள். எனவே, அதிமுகவுக்கு டெபாசிட் கிடைக்காத அளவிற்கு தேர்தல் பணி செய்ய வேண்டும். அதற்கு பிரதமர் மோடியும் நமக்கு உதவி செய்கிறார். எப்போதெல்லாம் மோடி தமிழகம் வருகிறாரோ அப்போதெல்லாம் திமுகவிற்கு வெற்றிதான். கருத்துக்கணிப்புகள் அனைத்தும் திமுகவிற்கு என்று சாதகமாக வந்தாலும் திமுகவினர் பணி செய்யாமல் இருந்துவிடக் கூடாது.
திமுக ஆட்சிக்கு வந்ததும் அதிமுகவினரின் ஊழலைக் கண்டுபிடித்து மக்களிடம் அம்பலப்படுத்துவதுதான் ஸ்டாலினின் வேலை. வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் திமுகதான் வெற்றி பெறும். இந்தத் தேர்தலுடன் அதிமுக முடிந்துவிட்டது.
திமுக ஆட்சி அமைந்தவுடன் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து தீர்மானம் இயற்றப்படும். தமிழகத்தின் சுயமரியாதையை, தன்மானத்தைக் காப்பாற்ற திமுக வேட்பாளர்களுக்கு வாக்களித்தால்தான் நமது நோக்கம் நிறைவேறும்''.
இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.
Related Tags :
Next Story