மம்தா பானர்ஜி, ஆட்சியை விட்டு செல்ல வேண்டும் என மேற்குவங்க மக்கள் முடிவு செய்து விட்டார்கள் - பிரதமர் மோடி


மம்தா பானர்ஜி, ஆட்சியை விட்டு செல்ல வேண்டும் என மேற்குவங்க மக்கள் முடிவு செய்து விட்டார்கள் - பிரதமர் மோடி
x
தினத்தந்தி 1 April 2021 11:51 AM GMT (Updated: 1 April 2021 11:51 AM GMT)

மம்தா பானர்ஜி, ஆட்சியை விட்டு செல்ல வேண்டும் என மேற்குவங்க மக்கள் முடிவு செய்து விட்டார்கள் என்று பிரதமர் மோடி கூறினார்.

ஹவுரா,

294 தொகுதிகளை கொண்ட மேற்குவங்காள சட்டசபைக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. அதன்படி, 30 தொகுதிகளுக்கு முதல்கட்ட தேர்தல் கடந்த 27-ம் தேதி நடைபெற்றது. அதில் சுமார் 80 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. எஞ்சிய 7 தொகுதிகளுக்கு முறையே ஏப்ரல் 1, 6, 10, 17, 22, 26 மற்றும் 29 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.

அதன்படி, 2-ம் கட்ட தேர்தல் இன்று 30 தொகுதிகளுக்கு நடைபெற்று வருகிறது. இதில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்குவங்காள முதல்மந்திரியுமான மம்தா பானர்ஜி போட்டியிடும் நந்திகிராம் தொகுதியும் அடங்கும். 

இத்தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ், பாஜக மற்றும் காங்கிரஸ்-இடதுசாரிகள்- இந்திய மதசார்பற்ற முன்னணி கூட்டணி இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. 

இந்நிலையில், மேற்கு வங்க மாநிலம் ஹவுரா மாவட்டத்தில் பாஜக சார்பில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:-

மேற்குவங்காளத்தில் மம்தா பானர்ஜி, ஆட்சியை விட்டு செல்ல வேண்டும் என மேற்குவங்க மக்கள் முடிவு செய்து விட்டார்கள். மேற்குவஙக மக்கள் வாக்குப்பதிவில் மட்டும் ஈடுபடவில்லை, வங்காளத்தின் மறுமலர்ச்சிக்கும் வழிவகுத்து வருகிறார்கள். 

எங்களை ஊடுருபவர்களாக கருதிக்கொண்டு பாரத மாதாவின் குழந்தைகளை மம்தா பானர்ஜி வெளியாட்கள் என அழைக்கிறார். தோல்வி விரக்தியில் தலைவர்கள் பலரை உதவிக்கு அழைத்து மம்தா கடிதம் எழுதியுள்ளார். தனக்கு உதவி வேண்டி வெளியாட்களை அவர் துணைக்கு அழைக்கிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story