வாகன சோதனையில் ரூ.57 ஆயிரம் பறிமுதல்
கொடைக்கானல் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் உரிய ஆவணமில்லாமல் கொண்டு சென்ற ரூ.57 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.
கொடைக்கானல்:
தமிழகத்தில் வருகிற 6-ந்தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா மற்றும் பரிசுபொருட்கள் வினியோகிப்பதை தடுக்க தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று கொடைக்கானல்-பழனி சாலையில் வெள்ளைப்பாறை என்னுமிடத்தில் தேர்தல் பறக்கும்படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்தவரை நிறுத்தி சோதனை செய்தனர்.
அவர் வைத்திருந்த பையில் ரூ.57 ஆயிரம் இருந்தது. விசாரணையில் அவர், மதுரை மாவட்டம் சோழவந்தானை சேர்ந்த அரவிந்த் குமார் (வயது 25) என்றும், அந்த பணம் தனியார் நிதி நிறுவனத்திற்கு கொண்டு செல்வதும் தெரியவந்தது.
அதற்கு அவரிடம் உரிய ஆவணம் இல்லை. இதையடுத்து அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பின்னர் கொடைக்கானல் தாசில்தார் மோகனிடம், அந்த பணத்தை பறக்கும்படையினர் ஒப்படைத்தனர்.
பின்பு அந்த பணம் அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.
Related Tags :
Next Story