அமைச்சர்களின் தேர்தல் பிரசாரத்துக்காக போக்குவரத்தை நீண்ட நேரத்திற்கு நிறுத்தக் கூடாது ஐகோர்ட்டு உத்தரவு
அமைச்சர்களின் தேர்தல் பிரசாரத்துக்காக போக்குவரத்தை நீண்ட நேரத்திற்கு நிறுத்தக் கூடாது ஐகோர்ட்டு உத்தரவு.
சென்னை,
சென்னை ஐகோர்ட்டில், வக்கீல் எம்.ஞானசேகர் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், “சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்கள் தேர்தல் பிரசார கூட்டங்களுக்கு செல்லும் இடங்களில் போக்குவரத்து நிறுத்தப்படுகிறது. பொதுமக்கள் நடமாட்டமும் தடுக்கப்படுகிறது. கொரோனா பரவலை தடுக்கும் விதமாக பள்ளி, கல்லூரிகள், நீதிமன்றம் ஆகியவை முழுவதுமாக திறக்கப்படவில்லை. இங்கு மக்கள் கூடுவதை தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் தேர்தல் பிரசார கூட்டங்களில், கொரோனா கட்டுப்பாடுகளை கடைப்பிடிப்பது இல்லை. எனவே, முதல்-அமைச்சர், அமைச்சர்கள் மேற்கொள்ளும் தேர்தல் பிரசார இடங்களில் பொதுமக்களையும், போக்குவரத்தையும் தடுத்து நிறுத்தக்கூடாது என்று உத்தரவிட வேண்டும்” என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் முன்பு நேற்று அவசர வழக்காக விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், “ஒரு சில நிகழ்வுகளை மட்டுமே குறிப்பிட்டு இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஆனாலும், ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் வரும்போது போக்குவரத்து தடைகளுக்கான விதிகளை போலீசார் பின்பற்ற வேண்டும். முதல்-அமைச்சர், அமைச்சர்களின் பிரசாரங்களில் சாதாரண மக்களுக்கு இடையூறு ஏற்படக்கூடாது. போலீசார், போக்குவரத்தை ஒட்டுமொத்தமாக நீண்ட நேரத்துக்கு நிறுத்தக்கூடாது” என்று கூறி, வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.
Related Tags :
Next Story