‘‘எம்.ஜி.ஆர்.-ஜெயலலிதா காலத்தில் இருந்த அ.தி.மு.க. இப்போது இல்லை’’ தேர்தல் பிரசாரத்தில் தொல்.திருமாவளவன் பேச்சு


‘‘எம்.ஜி.ஆர்.-ஜெயலலிதா காலத்தில் இருந்த அ.தி.மு.க. இப்போது இல்லை’’ தேர்தல் பிரசாரத்தில் தொல்.திருமாவளவன் பேச்சு
x
தினத்தந்தி 1 April 2021 10:35 PM GMT (Updated: 1 April 2021 10:35 PM GMT)

‘‘எம்.ஜி.ஆர்.-ஜெயலலிதா காலத்தில் இருந்த அ.தி.மு.க. இப்போது இல்லை. பா.ஜ.க.வின் பினாமி கட்சியாக அ.தி.மு.க. இருக்கிறது’’, என்று தேர்தல் பிரசாரத்தின்போது தொல்.திருமாவளவன் பேசினார்.

சென்னை, 

சென்னை விருகம்பாக்கம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் ஏ.எம்.வி.பிரபாகரராஜாவை ஆதரித்து, கே.கே.நகர் சிவன் பூங்கா பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. நேற்று பிரசாரம் மேற்கொண்டார். திரண்டிருந்த பொதுமக்கள் மத்தியில் ‘உதயசூரியன்’ சின்னத்துக்கு வாக்குகள் சேகரித்து அவர் பேசியதாவது:-

நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் வழக்கமான சராசரி தேர்தல் அல்ல. சனாதன, பாசிச, சாதி-மதவாத ஒரு கூட்டணியை வீழ்த்தி தமிழகத்தை மீட்கப்போகும் தேர்தல். நமது போட்டிக்கட்சி அ.தி.மு.க. அல்ல. ஏனென்றால் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலத்தில் இருந்த அ.தி.மு.க. இப்போது இல்லை. இப்போதுள்ள அ.தி.மு.க., மோடி அ.தி.மு.க.வாக இருக்கிறது. பா.ஜ.க.வின் பினாமி கட்சியாக இருக்கிறது.

மதவெறி அரசியல்

இந்தியாவில் மதவெறி அரசியலை முன்னெடுத்து வரும் பா.ஜ.க., இந்தமுறை தமிழகத்தை வெகுவாக குறிவைத்திருக்கிறது. அதற்காக இங்கிருக்கும் ஆட்சியாளர்களை பா.ஜ.க. பயன்படுத்தி கொள்கிறது. கொள்ளைப்புறம் வழியாக தமிழகத்தில் கால்பதிக்க பா.ஜ.க. நினைக்கிறது. எனவே மக்கள் விழிப்பாக இருக்கவேண்டும். பா.ஜ.க.வை பொறுத்தவரை இந்துக்களுக்கான ஒரே கட்சி என்று அவர்களே கூறிக்கொள்கிறார்கள். மற்ற கட்சிகளில் இந்துக்களே கிடையாதா? உண்மையிலேயே இந்துக்களுக்கு விரோதியே பா.ஜ.க. தான். 234 தொகுதிகளிலும் நானே வேட்பாளர் என்று பிரதமர் நரேந்திரமோடி தாராபுரத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் பேசியிருக்கிறார். எனவே 234 தொகுதிகளிலும் அவரை தோற்கடிக்க நாம் உறுதியேற்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள வந்த திருமாவளவனுக்கு, மாவட்ட செயலாளர் வி.கோ.ஆதவன் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Next Story