என்னை எதிர்த்து வெற்றி பெற முடியாது என்ற பயத்தில் குறுக்கு வழியில் வெற்றி பெற தி.மு.க. முயற்சி சைதை துரைசாமி குற்றச்சாட்டு
தி.மு.க. என்னை எதிர்த்து வெற்றி பெற முடியாது என்ற பயத்தில் குறுக்கு வழியில் ஓட்டுக்கு பணம், போலி ஆவணங்கள் மூலம் வாக்களிப்பது போன்ற முயற்சியை செய்து வருகிறது என்று சைதாப்பேட்டை தொகுதி வேட்பாளர் சைதை துரைசாமி குற்றஞ் சாட்டியுள்ளார்.
சென்னை,
சைதாப்பேட்டை தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் ேபாட்டியிடும் பெருநகர சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சைதை துரைசாமி சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
தி.மு.க. வேட்பாளர் மா.சுப்பிரமணியன் தன்னுடைய வேட்பு மனுவில் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டு அது நிலுவையில் இருப்பதாக குறிப்பிட்டு இருந்தார். அதன் உண்மைதன்மை என்ன?. அதை தேர்தல் களத்தில் தெரிவிக்க வேண்டும் என்று அவரிடம் மின்னஞ்சல் மூலம் தெரிவித்து இருந்தேன். 48 மணி நேரத்தில் பதில் சொல்ல கேட்டு இருந்தேன். பொதுவெளியில் சந்தித்து பேச தயார் என்று அவர் சொன்னார்.
ஏற்கனவே ஒரு முறை தந்தி டி.வி.யில் வைத்து பேசினோம். அதுபோல் விவாதம் வைத்து கொள்ளலாமா? என்று கேட்டேன். அதற்கு அவர் பதில் அளிக்கவில்லை. ஆகவே தான் இப்போது அந்த உண்மை தன்மையை வெளியிடுகிறேன். இதை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும். கிண்டியில் உள்ள சிட்கோ தொழிலாளர் குடியிருப்பு, அந்த பகுதிகளில் உள்ள தொழிலாளர்களுக்கு சொந்தமாக்கி தர, எம்.ஜி.ஆர். காலத்தில் நான் எம்.எல்.ஏ.வாக இருந்தபோது அரசாணை பெறப்பட்டது. அந்த குடியிருப்புகள் வாரிசுகளுக்கு மட்டுமே சொந்தம். 10 ஆண்டுகளுக்கு விற்க முடியாது. தொழிலாளர்கள் மட்டும்தான் அந்த குடியிருப்பில் இருக்கவேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டது.
மா.சுப்பிரமணியன் அபகரிப்பு
எஸ்.கே.கண்ணன், கமலநாதன் ஆகிய இரு தொழிலாளர்களிடம் இருந்து அரசியல்வாதியான மா.சுப்பிரமணியன், சட்டவிதிகளுக்கு புறம்பாக சிட்கோ வீட்டை அபகரித்து இருக்கிறார். அதற்காக அவர் பல்வேறு போலி ஆவணங்களை தயாரித்துள்ளார்.
அதில், அதிகார துஷ்பிரயோகம் செய்து எஸ்.கே.கண்ணன் அவருடைய மாமனார் (மனைவியின் தந்தை) என்று போலி ஆவணம் தயாரித்துள்ளார். ஆனால் மா.சுப்பிரமணியத்தின் மனைவியான காஞ்சனாவின் பாஸ்போர்ட்டில் அவருடைய தந்தை பெயர் சாரங்கபாணி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல், எஸ்.கே.கண்ணன் என்னுடைய ஒரே மகள் காஞ்சனா என்று ஒரு போலி கடிதம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
ஒப்பிட்டு பாருங்கள்
ஆனால் எஸ்.கே.கண்ணனுக்கு 6 வாரிசுகள் இருக்கிறார்கள். அவர்களில் காஞ்சனா என்று யாரும் இல்லை. மேலும் காஞ்சனா சிட்கோவில் பணிபுரிவதாக சான்றிதழ் பெற்றும் இருக்கிறார். இப்படியாக போலி ஆவணங்கள் மூலமும், அதிகார துஷ்பிரயோகம் செய்தும், சிட்கோ இடத்தை தனதாக்கி இருக்கிறார். இது புலனாய்வுத்துறை கண்டுபிடித்து தந்த ஆதாரம். இந்த தவறை செய்தவர். இன்னும் எவ்வளவோ தவறுகளை செய்வார்.
இதே மா.சுப்பிரமணியன், நான் வேளச்சேரியில் இலவச மண்டபத்தை கட்டித்திறந்தேன். அதற்கான வரிச்சலுகை பெறுவதற்கான கோப்புகளை கிடப்பில் போட்டார். ஆனால் நான் மேயராக பதவிக்கு வந்த பிறகு, அதே கோப்பு என்னிடத்தில் வந்தது. அப்போது நான் பதவியில் இருக்கும் வரை எனக்கோ, என் குடும்பத்துக்கோ எந்த விதமான சல்லி காசு பயனை கூட நான் பெறமாட்டேன் என்று கூறினேன். ஏழைகளுக்கு இப்போது வரை இலவசமாக திருமண மண்டபம் கொடுத்து வருகிறேன். இப்போது கூட நான் வரிச்சலுகை பெறாமல் வரி கட்டி வருகிறேன். நான் மேயராக இருந்தபோது எனக்கான சலுகைகளை கூட பெற்றது கிடையாது. என்னையும், அவரையும் இதில் ஒப்பிட்டு பாருங்கள்.
ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடமுடியுமா?
மா.சுப்பிரமணியன் மிகப்பெரிய சேவையாளராக அடையாளப்படுத்துகிறார். ஒரு லட்சம் மரக்கன்றுகளை சைதாப்பேட்டை தொகுதியில் நட்டு பசுமை புரட்சி செய்ததாக சொல்கிறார். சைதாப்பேட்டையில் 998 தெருக்கள் இருக்கின்றன. அதில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடமுடியுமா? இதிலே அவர் உண்மைத் தன்மை தெரிகிறது.
இப்போது தி.மு.க. என்னை எதிர்த்து வெற்றி பெற முடியாது என்ற பயத்தில் குறுக்கு வழியில் ஓட்டுக்கு பணம், போலி ஆவணங்கள் மூலம் வாக்களிப்பது போன்ற முயற்சியை செய்து வருகிறது. குறுக்கு வழியில் ஏமாற்றி தேர்தலில் பெறும் வெற்றியைதான் மோசடிக்காரர்கள் எதிர்பார்க்கிறார்கள். என்னிடத்தில் பதவி இருந்தால் மாற்றத்தை கொண்டு வருவேன். வாய்ப்பு இல்லையென்றால் என்னுடைய சேவையை தொடருவேன்.
சேவையாளர்களை அங்கீகரிக்கிறார்களா? இல்லையா? என்பதை நாட்டுக்கு ஜனநாயகத்துக்கு உணர்த்தும் தேர்தலாக இந்த தேர்தல் உள்ளது. சேவையாளர்களை தான் மக்கள் அங்கீகரிப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. குறுக்கு வழியில் பதவி பெறாமல் நேரடியாக மக்களை சந்திக்கிறேன். பிடிக்கவில்லை என்றால் ஒதுங்கி நிற்பேன். தேவையென்றால் களத்தில் நிற்பேன். உழைத்து சம்பாதித்த பணத்தை மக்களுக்காக செலவு செய்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story