அ.தி.மு.க. கூட்டணி 200 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் டாக்டர் ராமதாஸ் நம்பிக்கை


அ.தி.மு.க. கூட்டணி 200 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் டாக்டர் ராமதாஸ் நம்பிக்கை
x
தினத்தந்தி 1 April 2021 10:57 PM GMT (Updated: 1 April 2021 10:57 PM GMT)

சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி 200 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என்று டாக்டர் ராமதாஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சென்னை, 

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், கட்சித் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

வெற்றி உறுதியாகிவிட்டது

மனம் முழுவதும் மகிழ்ச்சியுடனும், பெருமிதத்துடனும் எழுதுகிறேன். 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் எத்தகைய வெற்றியை அடைய வேண்டும் என்று நினைத்தோமோ, அந்த வெற்றி உறுதியாகிவிட்டது என்பதுதான் எனது மகிழ்ச்சிக்கு காரணம். நாம் பெற நினைத்த வெற்றியை கடுமையான உழைப்பின் மூலம் சாத்தியமாக்கியிருக்கிற உங்களை நினைத்து தான் நான் பெருமிதப்பட்டுக் கொண்டிருக்கிறேன்.

தேர்தல் பிரசாரத்திற்காக நான் சென்ற அனைத்து தொகுதிகளிலும் மக்களின் முகங்களில் மகிழ்ச்சியையும், மலர்ச்சியையும் பார்க்க முடிகிறது.

200 இடங்களுக்கு மேல் வெற்றி

‘‘நாங்கள் இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறோம்; நில அபகரிப்பு, பெண்கள் மீதான சீண்டல் உள்ளிட்ட எந்த அச்சுறுத்தலும் இல்லை; ஒவ்வொரு நாளையும் அமைதியாகவும், நிம்மதியாகவும் கழித்துக் கொண்டிருக்கிறோம். இதே நிம்மதியும், மகிழ்ச்சியும் நீடிக்கவேண்டும் என்றால் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இப்போது இருக்கும் ஆட்சியே அடுத்த ஐந்தாண்டுகளுக்கும் நீடிக்க வேண்டும்’’ என்பதுதான் மக்களின் மனநிலையாக இருக்கிறது. அ.தி.மு.க. தலைமையிலான அணி 200-க்கும் மேற்பட்ட இடங்களில் வெல்லும் என்பதற்கு இதுவே ஆதாரமாகும்.

கள நிலைமையை மதிப்பீடு செய்து நாம் களிப்பில் இருக்கிறோம். நமது எதிரிகள் கணிப்புகளை நம்பி கனவில் மிதந்து கொண்டிருக்கிறார்கள்.

வெற்றிக்கனியை பறிப்போம்

இதுவரை வாக்காளர்களை 10 முறை சென்று வாக்கு சேகரித்திருந்தாலும், இனி மீதமுள்ள நாட்களில் இன்னும் குறைந்தது 5 முறையாவது வாக்காளர்களை சந்தித்து ஆதரவு திரட்ட வேண்டும். வெற்றி அறிவிப்பு வரும் வரை நாம் ஒரு நிமிடம் கூட ஓயக்கூடாது.

அடுத்த 5 நாட்களுக்கு நாம் வழங்கவிருக்கும் உழைப்பும், அதன்பிறகு வாக்கு எண்ணிக்கை வரை நாம் மேற்கொள்ளவிருக்கும் கண்காணிப்பும் தான் 234 தொகுதிகளிலும் நமக்கு வெற்றியைத் தேடித் தரப்போகின்றன. எனவே, தமிழ்நாடு தவறானவர்களின்கைகளில் சிக்கிவிடாமல் தடுக்க கடுமையாக உழைப்போம்; மே 2-ந் தேதி வெற்றிக்கனியை பறிப்போம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story