ஒரே ஆண்டில் கொரோனா தடுப்பூசியை கொண்டு வந்தவர் பிரதமர் மோடி-முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி


படம்:  ANI
x
படம்: ANI
தினத்தந்தி 2 April 2021 8:53 AM GMT (Updated: 2021-04-02T14:23:59+05:30)

அதிமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகள் மட்டுமே மக்களுக்கு சேவை செய்யும் கட்சிகள் என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

மதுரை 

மதுரை பாண்டிகோவில் சாலையில் தேசிய ஜனநாய கூட்டணி சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, முதல்-அமைச்சர்  எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் கலந்துகொண்டு பேசினார் .

பிரசார கூட்டத்தில்  முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசும் போது கூறியதாவது

நமது கூட்டணி வலிமையான கூட்டணி வெற்றிக்கூட்டணி. 234 தொகுதிகளிலும் நமது கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும். மத்தியிலும் மாநிலத்திலும் மக்கள் எண்ணப்படி செயல்படும் ஆட்சி இருப்பதினால் எல்லா திட்டங்களும் மக்கள் வீடு போய் செய்கிறது. கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவத்தொடங்கி, அனைத்து நாடுகளையும் பாதித்தது. இந்தியாவையும் பாதித்தது. கூடியவிரைவில் கொரோனா வைரசுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு அனைவருக்கும் செலுத்தப்படும் என்று பிரதமர் கூறினார். அதுபோல ஒரு வருடத்திற்குள் மருத்துவர்கள் உதவியால் கொரோனா வைரஸ் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு அனைவருக்கும் செலுத்தப்பட்டு வருகிறது. இந்தப் பெருமை பிரதமரையே சேரும்.

இதன்மூலம் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் ஆற்றல் மிக்க பிரதமர் என்பதை நிரூபித்திருக்கிறார் . தமிழக மாநிலம் முன்னேற்றம் பெருவதற்காக பல நலத்திட்டங்கள் மத்திய அரசிடம் இருந்து கிடைத்திருக்கிறது. மத்திய அரசு கேட்கின்ற நிதியை கொடுப்பதாலேயே நாங்கள் கொடுக்கும் வாக்குறுதியை நிறைவேற்ற முடிகிறது. உள்கட்டமைப்பை பொறுத்தவரை இந்தியாவிலேயே தமிழகம் சிறப்பாக விளங்குகிறது. மேலும் தமிழகம் சிறந்து விளங்குவதற்காக சாலை மேம்பாட்டுக்காக 1 லட்சத்து 50 ஆயிரம் கோடியை மத்திய அரசு ஒதிக்கியுள்ளது.

இதனால் புதிய தொழில்கள் தமிழகத்தில் தொடங்கப்படுகிறது. 2019, ஜனவரி மாதம் என் தலைமையில் தொழில் முன்னேற்ற மாநாடு நடத்தினோம். சுமார் 3 லட்சத்து 500 கோடி தொழில் முதலீடு செய்ய தொழிலதிபர்கள் முன்வந்தார்கள். 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அந்த பணிகளும் துவங்கப்பட்டு விட்டது. இதற்கு முக்கிய காரணம் உள்கட்டமைப்பில் தமிழகம் சிறந்து விளங்குவதுதான். அதனால் புதிய தொழில்கள் தமிழகத்தை நோக்கி வந்துகொண்டிருக்கின்றது.

2006 முதல் 2011 ஆண்டு வரை, திமுக ஆட்சி காலத்தில் கடுமையான மின்வெட்டு ஏற்பட்டது. அந்த கடுமையான மின்வெட்டு காரணமாக தொழில்சாலைகள் பாதிக்கப்பட்டது. அம்மா ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகளிலே மின்வெட்டு பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்று வாக்குறுதி அளித்தார். அதுபோல் அதிமுக ஆட்சியில் மின்வெட்டு பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டது. அம்மாவின் வழியிலேயே செயல்பட்டு வரும் இப்போதைய அரசின் முயற்சியால் தமிழகம் மின்மய மாநிலமாக திகழ்ந்துகொண்டிருக்கிறது.

படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கி தருகிறோம். தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு சிறப்பாக இருக்கிறது. இதனால் தமிழ்நாடு அமைதி பூங்காவாக விளங்குகிறது. மேலும் தொழிற்சாலைகள் தொடங்குவதற்கு தமிழ அரசு பல சலுகைகளை வழங்குகிறது. ஆகவே தமிழகத்தை ஒரு வளமிக்க மாநிலமாக உருவாக்குவதற்கு அம்மா அரசு தொடர்ந்து பாடுபடுகிறது. திமுக ஆட்சியில் எந்த திட்டங்களும் தமிழத்தில் செயல்படுத்தப்படவில்லை.

அது ஒரு குடும்ப கட்சியாக இருந்தது. வாரிசு அரசியல் செய்கின்ற கட்சிதான் திமுக. திமுகவை ஒரு கட்சி என்று சொல்வதை விட கார்ப்பரேட் கம்பெனி என்று சொல்லலாம். அந்த கட்சியில் யார் வேண்டுமானாலும் பங்குதாரராக இருக்கலாம். இங்கே இருந்து பலரும் அங்கு சென்று சேர்ந்துகொண்டு, முக்கிய பதவிகளில் இருக்கின்றனர். திமுக கட்சி மக்களுக்கு சேவை செய்யும் கட்சி அல்ல.

அதிமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகள் மட்டுமே மக்களுக்கு சேவை செய்யும் கட்சிகள். வருகின்ற தேர்தலில் நம்முடைய கழக வேட்பாளர்கள் வெற்றிபெற இரட்டை இலை சின்னதிலும், நமது கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாஜக வேட்பாளர்களுக்கு தாமரைச்சின்னத்திலும், நமது கூட்டணியில் அங்கம் வகிக்கின்ற பாட்டளி மக்கள் கட்சிக்கு மாம்பழம் சின்னத்திலும், நமது கூட்டணியில் அங்கம் வகிக்கின்ற தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு இரட்டை இலை சின்னத்திலும் வாக்களித்து மிகப்பெரிய வெற்றியை தேடித் தாருங்கள் என கூறினார்.

Next Story